மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஏன் நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும்?

1917-ம் ஆண்டு . பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர தேவ உதவியை நாடி தேவதாயிடம் உலக சமாதானம் அருளுமாறு ஜெபித்தார். மே 5 அன்று உலகெங்குமுள்ள கத்தோலிக்க மக்களுக்கு சுற்றுமடல் எழுதி, அவர்களும் தேவ தாயிடம் மன்றாடுமாறு வேண்டினார். அதன் முன் முயற்சியாக, மாதா பிரார்த்தனையில், "Regina Pacis, Ora pro nobis - சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்ற மன்றாட்டை சேர்த்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பாப்பரசரின் மன்றாட்டு கேட்கப்பட்டது! சரியாக, எட்டு நாட்களுக்குப் பிறகு, 1917 மே 13 அன்று போர்த்துக்கலில், பாத்திமா, கோவா தா ஈரியா என்ற சிற்றூரில் மாதா மூன்று குழந்தைகளுக்குத் தோன்றி, கடவுளின் சமாதானத் திட்டத்தையும், அதன் மையமாகத் திகழும் தனது மாசற்ற இருதய பரிகார பக்தியையும் அறிவித்தார்கள்.

பாத்திமா காட்சிகளில் மரியாயின் மாசற்ற இருதயம் வெளிப்படுத்தப்பட்டது. வழக்கமாக, மலர்களால் சூழப்பட்டவாறு மாதாவின் இருதயம் சித்தரிக்கப்படும். திருச்சபையில் ஏழு வியாகுல வாட்களால் குத்தித் துளைக்கப்பட்ட வியாகுல மாதா பக்தியும் உண்டு. ஆனால் பாத்திமாவில் அது முட்களால் சூழப்பட்டபடி வெளிப்படுத்தப்படுகிறது! ஏனெனில் மாமரியின் பிள்ளைகளான உலகத்தார் தரும் நிந்தை, வேதனைகள், அவசங்கைகளை முட்கள் சுட்டிக் காட்டுகின்றன. பாத்திமாவில் இவ்வாறு மாதாவின் மாசற்ற இருதயம் தனது மகிமைக்கும் மேன்மைக்கும் விரோதமாகச் செய்யப்படும் பழிப்புகளுக்கும், மறுப்புகளுக்கும் ஈடு செய்யப்பட வேண்டும், அவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று கேட்கிறது.

கோவா தா ஈரியாவில் நடைபெற்ற பாத்திமா காட்சிகளில் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி எதற்காக, எப்படி, எப்போது செய்யப்பட வேண்டும் என்பது விளக்கப்படவில்லை. ஆனால் இப்பரிகார பக்தியின் கனியாகிய ரஷ்ய ஐக்கிய அர்ப்பணத்தையும், அதற்காக மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்குவதையும் கேட்க பின்னர் மாதா வரவிருப்பது மட்டுமே அறிவிக்கப்பட்டது. "... ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டு மென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டும் என்றும் கேட்க வருவேன்" என்று ஜூலை 13 காட்சியில் மாதா அறிவித்தார்கள். பாத்திமா காட்சிகள் மற்றும் செய்திகளின் தொடர்ச்சி பின்னாளில் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டவே மாதா இப்படி அறிவித்தார்கள்.

அதன்படியே, லூசியா அர்ச். டோரதியம்மாள் சபையில் நவகன்னிகையாக இருந்தபோது, பாத்திமாவில் மாதா அறிவித்தபடியே காட்சிகளும் செய்திகளும் அவளுக்கு வழங்கப்பட்டன. தான் வாக்களித்தபடியே மாதா 1925 டிசம்பர் 10 அன்று போன்ற வேத்ராவில் சகோதரி லூசியாவுக்குக் காட்சியளித்து, பரிகார பக்தியை அனுசரிக்கும் நடைமுறைகளை வழங்கினார்கள்.