இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த வாழ்வுக்கான பிரதிக்கினை

எந்த ஒரு உலகக் காரியமானாலும், நாம் முன்கூட்டியே பல தயாரிப்புகளைச் செய்கிறோம். உதாரணமாக, ஒரு சுற்றுப் பயணத்திற்கு நாம் திட்டமிடும் போது, பல நாட்களுக்கு முன்பே பயண முன்பதிவு செய்து கொள்கிறோம். செல்லும் இடத்தில் தங்கும் வசதிக்கு முன்னேற்பாடு செய்கிறோம். அங்கே பல இடங்களைச் சுற்றிப் பார்க்க வாகன வசதியும் ஏற்பாடு செய்கிறோம், நண்பர்களின் உதவியைத் தேடுகிறோம்.

இன்று பல பெற்றோர் குழந்தை பிறந்த நாளிலிருந்தே அதன் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காணத் தொடங்கி விடுகிறார்கள்; பல திட்டங்களைத் தீட்டுகிறார்கள்; மூன்று வயதிலேயே அதன் பள்ளிப் படிப்பு தொடங்கி விடுகிறது; அதன் எதிர்காலக் கல்விச் செலவுக்கும், அதற்கு நல்லதொரு வாழ்வை அமைத்துத் தருவதற்கும் இப்போதே பணம் சேர்த்து வைக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் செய்ய வேண்டியதுதான். சரி. உங்களுடையவும், உங்களைச் சேர்ந் தவர்களுடையவும் ஆன்ம இரட்சணியத்திற்காக என்ன முன்னேற்பாடுகளைச் செய்திருக் கிறீர்கள்? நாம் பாவம் செய்து கொண்டே பரிகாரமும் செய்ய முடியாது. மேலும், இவ்வுலகம் நம் நிரந்தர வாசஸ்தலமல்ல. அதோ நம் நித்தியத் தந்தையின் இல்லமான மோட்சம் தன் எல்லாப் பேரின்பங்களோடும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதை நோக்கியே நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பயணம் நல்ல முறையில் நடந்தேற நாம் எடுத்திருக்கும் பிரயாசைகள் என்னென்ன? செய்திருக்கும் முன்னேற்பாடுகள் எவை?

1. பாவத்தை அடியோடு விட்டு விலக என்னென்ன முயற்சிகள் செய்திருக்கிறோம்?

2. உத்தரிக்கிற ஸ்தலத்தின் அநித்தியத் தண்டனையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்ன முன்னேற்பாடுகள் செய்திருக்கிறோம்?

3. இந்தத் திருயாத்திரையின் போது வரும் தடைகள், சிரமங்கள், பிரச்சினைகளை சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்?

இந்தக் கேள்விகளுக்கு நீங்களேதான் பதில் காண வேண்டும். முன்கூறிய உலகத்தன்மையான முன்னேற்பாடுகளை விட, இவை மிகவும் முக்கியமானவை, இன்றியமையாதவை. ஏனெனில் உலகத் தோல்விக்கு வேறு தீர்வுகள் உண்டு. ஆனால் பரலோகத்தை அடைவதில் ஒருவன் தோல்வியடையும்போது அதற்குத் தீர்வு ஏதுமில்லை.

எனவே பின்வருவது போன்ற நல்ல பிரதிக்கினைகளை இன்றே எடுத்து, அவற்றை எப்பாடு பட்டாவது செயல்படுத்த முயற்சி செய்யுங்கள் :

1. தேவத்திரவிய அனுமானங்களை (பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை என்னும் அருட்சாதனங்களை) அடிக்கடி பெறுதல்; 2. காலை, மாலை, இரவு ஜெபங்கள், அனுதின ஜெபமாலை, குடும்ப ஜெபமாலை;

3. கடவுள் நமக்கு அனுப்புகிற துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்றுத் தாங்கிக் கொள்ளுதல்; நமக்கு வரும் எல்லாவற்றையும் ஒறுத்தல் ஆக்குதல்; அவற்றை நமக்காகவும் பிறருக்காகவும் பாவப் பரிகாரமாகவும், இரட்சணிய மன்றாட்டாகவும் ஒப்புக்கொடுத்தல்;

4. ஆண்டவரையும் மாதாவையும் கண்டு பாவித்து, பாவங்களை அடியோடு வெறுத்துத் தள்ளி, புண்ணியங்களில் வளர்ச்சி பெறப் பாடுபடுதல்.

5. அர்ச்சியசிஷ்டவர்களின் புண்ணியங்களையும், நன்மாதிரிகைகளையும் கண்டு பாவித்து அவற்றின்படி நடக்க முயற்சி செய்தல்; இதன் மூலம் தேவ அன்பில் வளரமுயற்சி செய்தல்.

6. தன் உறவினரையும் அயலாரையும் கடவுளின் சாயலாகக் கண்டு அவர்களிடம் பிறர் சிநேகத்தோடு நடந்து கொள்ள முயற்சி செய்தல்.

7. ஏழைகளுக்கு எப்போதும் இரக்கம் காட்டி அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவை நம் அன்றாட வாழ்வின் தீர்மானங்களாக இருக்க வேண்டும்.