உபாகமம் - முகவுரை

கிறீக் பாஷையிலே தத்தரணம் என்கிற தலைப் பெயர் இந்த வேதாகமத்திற்கு உரித்தான பெயராம். தத்தரணம் என்ற சொல்லுக்கு அர்த்தமேதெனில் இரண்டாவது பிரமாணம், உள்ளபடி கர்த்தர் சீனாயி மலையில் கட்டளையிட்டிருந்த நியாய விதிகளிலே அநேகம் மறுபடியும் இந்த நூலிலே எழுதியிருக்கின்றனவன்றி அதுகளில் பலதும் விளக்கமாய்த் தெளிவித்துக் காட்டப் பட்டிருக்கின்றன.

சர்வேசுரன் இப்படி இரண்டு விசை தம்முடைய திருச்சித்தத்தைக் கூறி மோயீசன் மூலியமாய் விளம்பரம் பண்ணினதற்கு முகாந்தரமேதெனில்: இஸ்றாயேலியர் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரியும் போது அவர்களில் முக்காலே மூன்று வீசத்துக்கதிகமான பேர்களும் அதற்குள்ளே மரணமடைந்தார்கள். வாக்குத்தத்தப் பூமியிலே நுழையப் போகிறவர்கள் எஜிப்த்திலிருந்து புறப்பட்ட இஸ்றாயேலியருக்கு வனாந்தரத்தலே பிறந்த பிள்ளைகள் அல்லவா? இவர்களின் நிமித்தமே கர்த்தர் இரண்டாம் விசைக்குத் தம்முடைய திருவுளத்தை அறிவித்திருக்கிறார் என்றறிக.

உபாகமம்: தமிழ்ப் பாஷையில் சொல்லப் பட்ட இந்த வேதாகமத்தின் முதல் முப்பத்திரண்டு அல்லது முப்பத்து மூன்று அதிகாரங்கள் மோயீசனாலேதான் எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்குச் சந்தேகம் ஒன்றுமில்லை. கடைசி இரண்டொரு அதிகாரம் ஜோசுவா எழுதினாரென்பது ஐதீகப் பிரமாணம்.

இஸ்றாயேல் புத்திரர் ஜோர்தான் நதி கடப்பதற்கு முந்தின இரண்டு மாதத்தில் நடந்தேறிய வர்த்தமானங்களும் இந்தப் பரிசுத்த நூலில் விவரமாய் எழுதியிருக்கின்றன.