உலகம் அழிந்து வருகிறதென்பதற்கு நிரூபணம் வேண்டியதில்லை. அதைக் காப்பாற்றுவதுதான் இப்போது நம் கடமையாயிருக்கிறது.
விஞ்ஞானிகளால் உலகை அழிக்க முடியும், காப்பாற்ற முடியாது. பொருளாதார நிபுணர்களால் கணக்குப் போட முடியும். உலகத்தை வளப்படுத்த முடியாது. சமூகவாதிகளால் சண்டை மூட்ட முடியும், சமாதானத்தைக் கொண்டுவர முடியாது.
ஏனெனில் இவையெல்லாம் மனிதனைத் தாண்டி நிற்கும் அன்பால் மட்டுமே கூடும். கடவுள் சூரியனைப் போல நாம் தாங்க முடியாத அன்பாயிருக்கிறார். மாதா சூரியனைப் பிரதிபலிக்கிற நிலாவைப் போல் நாம் எளிதில் அணுகக்கூடிய அன்பாயிருக்கிறார்கள். ஆதலால் உலகத்தை மாதாவிடம் கொண்டு வர வேண்டும், அது காப்பாற்றப்படுவதற்கு, உலகத்தின் கதியை நிர்ணயிப்பது திருச்சபையே. ஆனால் இன்று சாத்தான் திருச்சபையை அலங்கோலமாக்கி யுள்ளான். கத்தோலிக்கத் திருச்சபையே, பதிதங்களைத் தன் மடிமேல் அமர்த்தியபின் குழப்பத்திற்கு வேறு காரணம் அவசியமில்லை. “உரோமாபுரி தன் விசுவாசத்தை இழக்கும்; அது அந்திக்கிறீஸ்துவின் ஆசனமாகும்” என்ற சலேத் மாதாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலம் இது. ஆதலால் இன்று திருச்சபை காப்பாற்றப்படுவது இன்றியமையாத தேவையாகிறது.
திருச்சபையைக் காப்பாற்ற அதன் தாயால் மட்டுமே முடியும். “உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, நான் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்” என்று பாத்திமாவில் மாதா கூறினார்கள். திருச்சபையில் புகுந்துள்ள சீர்கேடுகளை எடுத்துக் காட்டி மக்களுக்கு விழிப்பூட்டுவதால் தாங்கள் அதைக் காப்பாற்றி விடலாம் என்று தவறாக சிலர் நினைக்கிறார்கள். உரோமையே விசுவாசம் இழந்த நிலையில் கீழ்மட்டக் குற்றங்களைச் சுட்டிக் காட்டி என்ன பயன்? திருச்சபையின் சமாதானத்திற்கு மாதாகேட்பது அவர்களது மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்வதைத்தான்.
மாதாவை நேசிக்கும் அளவுக்கே பரிகாரம் நடைபெறும். திருச்சபையை அதன் பாரம்பரிய நிலைக்குக் கொண்டு வந்து உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள் மாதா பற்றிய சத்தியங்களை அறிந்து அவர்களை மனதார நேசிக்க வேண்டும். அந்த அன்பினால் அவர்களது மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக இந்த இதழை வாசகர்களின் கரங்களில் வைக்கிறோம்.