சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 29

கடன்கொடுத்தல், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தல் ஆகியவை

1. இரக்கங் காட்டுபவன் தன் அயலானுக்குக் கடன் கொடுக்கிறான்; தாராளமுள்ள கரத்தை உடையவன் கற்பனைகளை அநுசரிக்கிறான்.

2. உன் அயலானுக்கு அவனது அவசர காலத்தில் கடன் கொடு; நீயும் வாங்கிய கடனை சொன்ன காலத்தில் அயலானுக்குத் திருப்பிக் கொடு.

3. உன் வார்த்தையை காப்பாற்றி அவனுடன் பிரமாணிக்கமாய் நடந்துகொள்; அப்போது உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.

4. இரவல் வாங்கிய பொருளைக் கண்டெடுத்த பொருள் போல் அநேகர் எண்ணினார்கள்; தங்களுக்கு உதவியவர்களைக் கஷ்டப் படுத்தினார்கள்.

5. பெற்றுக்கொள்ளும் வரை கடன் கொடுப்பவனின் கைகளை முத்தமிடுகிறார்கள்; வாக்குத் தரும் போது தங்கள் குரலைத் தணித்துக் கொள்கிறார்கள்.

6. திருப்பித் தர வேண்டிய காலத் திலோ, தவணை கேட்கிறார்கள்; சலிப்பும் முறைப்பாடுமான வார்த்தை களைப் பேசுவார்கள்; காலத்தைக் குற்றஞ் சாட்டுவார்கள்.

7. திருப்பித் தர முடியும் என்றாலோ, அவன் காலம் தாழ்த்துவான்; வருத்தப் பட்டுக்கொண்டு தொகையில் பாதி கொடுப்பான்; அதையும் தான் கண்டெடுத்த பொருளைத் திருப்பித் தருவது போல் எண்ணிக்கொள்வான்.

8. திருப்பித்தர முடியாது போனால், பணம் தராமல் அவனை ஏமாற்றுவான்; காரணமின்றி அவனைத் தன் பகையாளியாக ஆக்கிக்கொள்வான்.

9. பதிலுக்கு அவனைத் திட்டி, சாபமிடுவான்; மரியாதைக்கும் உபகாரத்திற்கும் பதிலாக அவனைக் காயப்படுத்துவான்.

10. அநேகர் கெட்டவர்கள் என்ப தால் அல்லாமல், வலிய ஏமாந்து போக அஞ்சியதால்தான் கடன் கொடாதிருந்தார்கள். 

11. ஆனாலும் ஏழையின்மீது நீ அதிக வாஞ்சையுள்ளவனாயிரு, அவனுக்காக இரக்கம் காட்டத் தாமதிக்காதே.

12. தேவ கட்டளையின் காரண மாக, ஏழைக்கு உதவி செய்; அவனது தரித்திரத்தை முன்னிட்டு அவனை வெறுங்கையனாய் அனுப்பாதே.

13. உன் சகோதரனுக்காகவும் நண்பனுக்காகவும் பணத்தை இழந்து போ; அது தொலைந்து போகும்படி அதை ஒரு கல்லின் கீழ் ஒளிக்காதே.

14. உன் திரவியத்தை உன்னத கடவுளின் கட்டளைகளில் வை; பொன்னை விட உனக்கு அது அதிக ஆதாயத்தைக் கொண்டு வரும்.

15. ஏழையின் இருதயத்தில் உன் தர்மத்தை மூடி வை. அது எல்லாத் தீமைக்கும் எதிராக உனக்கு உதவி யைப் பெற்றுத் தரும்.

16-17. வலியவனின் கேடயத் தையும் ஈட்டியையும் விட நன்றாக, உன் விரோதியை எதிர்த்து அது உனக்காகப் போரிடும்.

18. நல்ல மனிதன் தன் அயலானின் பிணையாயிருக்கிறான்; வெட்கங் கெட்டவன் அவனைக் கைவிட்டுவிடுவான்.

19. பிணையாளியின் கருணையை மறக்காதே; ஏனெனில், தன் உயிரை உனக்காகக் கொடுத்திருக்கிறான்.

20. பாவியும் அசுத்தனுமானவன் தன் பிணையாளியை விட்டு ஓடிப் போகிறான்.

21. பாவி பிணையாளியின் பொருட்களைத் தன்னுடையவை என்கிறான்; நன்றிகெட்ட மனதுள் ளவன் தன்னை விடுவித்தவனைக் கைவிட்டுவிடுவான்.

22. மனிதன் தன் அயலானுக்காக உத்தரவாதியாகிறான்; அவனோ முழுவதுமாக வெட்கங்கெட்டுப் போனால், அவன் இவனைக் கைவிடுவான்.

23. தீய உத்திரவாதம் நல்ல நிலை யிலிருந்த பலரைச் சீரழித்து, கடலின் அலைபோல் அவர்களை அலைக்கழித்தது.

24. அது பலமுள்ளவர்களை ஊர் ஊராய் ஒளிந்து திரியும்படிசெய்தது; அந்நிய நாடுகளில் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

26. ஆண்டவரின் கட்டளையை மீறி நடக்கும் பாவி, அநீத உத்திர வாதத்தில் விழுவான்; அநேகங் காரி யங்களைச் செய்யப் பிரயாசைப்படு கிறவன் தீர்ப்புக்கு உள்ளாவான்.

26. உன் சக்திக்குத் தக்கபடி அயலானுக்கு உதவிசெய்; நீயே விழுந்து விடாதபடி கவனமாயிரு.

27. மனித சீவியத்திற்கு வேண்டிய பிரதான காரியங்கள்; தண்ணீரும், அப்பமும், மானத்தைக் காப்பாற்ற உடையும் வீடும்.

28. அந்நியன் வீட்டில் தடபுட லான உல்லாச விருந்தைவிட, பலகைகளான கூரையின் கீழ் உண்ணும் ஏழையின் உணவு மேலானது.

29. அதிகமானதை விட கொஞ்சத் தில் திருப்திகொள்; அப்போது வெளியே சுற்றித் திரிவது பற்றிய கண்டனத்தை நீ கேட்கமாட்டாய்.

30. வீடு வீடாய்த் விருந்தாளியாய் செல்பவனின் வாழ்வு பரிதாப மானது; ஏனெனில் தான் அந்நியனா யிருக்கும் இடத்தில் நம்பிக்கை யோடு எதையும் செய்ய மாட்டான். தன் வாயையும் திறக்க மாட்டான். 

31. அவன் நன்றிகெட்டவர்களைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டு உணவும், பானமும் கொடுப்பான்; மேலும், அவர்களிடமிருந்து கசப்பான வார்த்தைகளையும் கேட்பான்.

32. போ, அந்நியனே, பந்தியை ஆயத்தம் செய்; உன் கையில் உள்ளதைப் பிறருக்கு உண்ணக் கொடு.

33. என் நண்பர்களின் மதிப்புமிக்க சமூகத்திற்கு இடம் விட்டு விலகு; என் சகோதரன் என்னோடு தங்க வேண்டியிருப்பதால், என் வீடு எனக்குத் தேவைப்படுகிறது.

34. புத்தியுள்ள மனிதனுக்கு வேதனை தரும் காரியங்கள், வேண்டாத விருந்தாளியாய் இருப் பது பற்றிய வசவும், கடன் கொடுத்தவனின் கண்டிப்பும்.