உபாகமம் - அதிகாரம் 26

நவப்பலனைத் தேவனுக்குச் செலுத்துகிறவன் செய்ய வேண்டிய அறிக்கையும்-தசம்பாகஞ் செலுத்துகிறவன் செய்ய வேண்டிய பிரார்த்தனையும்--தேவன் இஸ்றாயேலுடன் செய்த உடன்படிக்கையும்.

1. பின்னும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாய் அளிக்கப் போகிற தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து அதனைக் கட்டிக் கொண்டு அதில் குடியிருக்கும் நாளில்,

2. நீ பயிரிடும் நிலத்தின் நானாவித கனிகளின் நவப்பலனை எடுத்து ஒரு கூடையில் வைத்து உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்டிருக்கும் திருஸ்தானத்திற்குப் போய்,

3. அந்நாட்களிலிருக்கும் ஆசாரியனை அண்டி: கர்த்தர் எந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டருளினாரோ, அதனில் நான் பிரவேசித்தேனென்று என்னுடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இன்று சங்கீர்த்தனம் பண்ணுகிறேன் என்று சொல்லுவாய்.

4. அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையினின்று வாங்கிக் கொண்டு உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக் கடவான்.

5. நீயோ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வசனித்துச் சொல்ல வேண்டியதென்னவெனில், சீரிய தேசத்தான் ஒருவன் என் தகப்பனை உபத்திரியப் படுத்தினதால் இவர் கொஞ்சஞ் சனங்களோடு எஜிப்த்துக்குப் போய் அங்கே பெரிய பலத்த கணக்கிடப் படாத சாதியாய்ப் பெருகினாரே,

6. அப்பொழுது எஜிப்த்தியர் நம்மை ஒடுக்கித் துன்பப் படுத்திச் சுமக்கப் படாத சுமைகளை நம்மேல் சுமத்தின போது,

7. நாம் நமது பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டிருக்க, அவர் நம்முடைய மன்றாட்டைக் கேட்டருளி, நமது சிறுமையையுங் கஷ்டத்தையும் அவதியையும் பார்த்து,

8.  வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் அதிபயங்கரத்துக்குரிய அடையாள அற்புதாதிசயங்களையும் காட்டி நம்மை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்து:

9. இவ்விடத்திற்கு நம்மை அழைத்து வந்து பாலும் தேனுமோடுகிற பூமியாகிய இந்தத் தேசத்தை நமக்குக் கொடுத்தார்.

10. அதினிமித்தமே கர்த்தர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய நவப்பலனை நான் ஒப்புக்கொடுக்க வந்தேனென்று சொல்ல, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே வைத்து அவரைப் பணிந்து தொழக் கடவாய்.

11. பின்னும் நீயும் லேவியனும் உன்னோடிருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகித்த சகல நன்மைகளையும் உபயோகித்து விருந்தாடுவாயாக.

12. நவப்பலனைக் கொடுத்த மூன்றாம் வருஷமாகிய தசம்பாகஞ் செலுத்த வேண்டிய வருஷம் முடிந்த பின்னர், லேவியன் பரதேசி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்கள் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி பத்தில் ஒன்றைக் கொடுக்கக் கடவாய்.

13. அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கற்பித்தபடி நான் பரிசுத்தமானவையயல்லாம் என் வீட்டிலிருந்து எடுத்து வந்து லேவியனுக்கும் பரதேசிகளுக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்டகும் கொடுத்தேன். தேவரீருடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவுமில்லை, மறந்து போகவுமில்லை.

14 .நான் துக்கங் கொண்டாடினபோது அதில் புசிக்கவுமில்லை. லெளகீக விஷயத்திற்கு அதில் ஒன்றும் உபயோகித்துக் கொள்ளவுமில்லை. அவைகளை இழவுக்காகச் செலவழித்ததுமில்லை. என் தேவனுடைய திருவாக்கியத்திற்குக் கீழ்ப்படிந்து தேவரீர் கற்பித்தபடி எல்லாவற்றையும் செய்தேன்.

15. தேவரீர் உம்முடைய பரிசுத்த ஸ்தலமாகிய உந்நத பரலோக வாசஸ்தலத்திலிருந்து நோக்கிப் பார்த்து: உம்முடைய சனமாகிய இஸ்றாயேலியரையும் தேவரீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனுமோடுகிற தேசத்தையும் தேவரீர் ஆசீர்வதிக்க வேணுமென்று மன்றாடுவாய்.

16. இந்தக் கட்டளைகளையும், இந்த நீதிநியாயங்களையும் நீ கைக்கொண்டு உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் அநுசரித்து நிறைவேற்ற வேண்டும் என்று உன் தேவனாகிய கர்த்தர் அவைகளை இன்று உனக்குக் கட்டளையிட்டிருக் கிறார்.

17. கர்த்தர் எனக்குத் தேவனாக இருப்பாரென்றும் நான் அவர் வழிகளில் நடந்து அவருடைய இரீதி ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் நியாயங்களையும் கைக்கொண்டு அநுசரிப்பேனென்றும், அவர் கற்பித்தபடி நடப்பேனென்றும் நீ இன்று அவருக்கு வார்த்தைப்பாடு கொடுத்தாய்.

18. கர்த்தரும்: நீ நம்முடைய கட்டளைகளையயல்லாங் கைக்கொண்டு அநுசரிப்பாயாகில், நாம் முன் சொல்லிய பிரகாரமே உன்னைச் சொந்த சனமாக வைத்துக் கொள்ளுகிறோமென்றும்,

19. நாம் நம்முடைய புகழ்ச்சி, கீர்த்தி, மகிமைக்காக உண்டாக்கின சமஸ்த சாதிகளைப் பார்க்கிலும் உன்னை உந்நத சாதியாயிருக்கும்படிச் செய்வோமென்றும், நாம் சொல்லியபடியே நீ கர்த்தருடைய பரிசுத்த சனமாயிருப்பாயயன்றும் அவர் இன்றுனக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருக்கின்றாரே.