உபாகமம் - அதிகாரம் 25

குற்றவாளியைக் கசையால் இடித்தாலும் நாற்பது அடிக்கு மேல் அடிக்கப் படாதென்றும்--போர் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாகாதென்றும்--ஒருவன் தன் சகோதரனுடைய விதவையை விவாகம் பண்ண வேண்டுமென்றும்-அமலேசித்தர்களை அழிக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது.

1. சிலருக்குள் வியாச்சியம் உண்டாகி அவர்கள் நடுவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தால் இவர்கள் எவனை நீதிமானென்று கண்டுபிடித்தார்களோ அவன் பட்சத்தில் தீர்ப்புச் சொல்லவும் எவன் துஷ்டனென்று கண்டுபிடித்திருப்பார்களோ, அவனைக் குற்றவாளியயன்று தண்டிக்கவுங் கடவார்கள்.

2. குற்றவாளி அடிபட வேண்டுமென்று தீர்ப்பார்களானால் நியாயாதிபதிகள் அவனை முகங்குப்புறக் கிடக்கப் பண்ணித் தங்களுக்கு முன்பாகவே அடிக்கச் செய்வார்கள். குற்றம் எவ்வளவு பெரிதோ அவ்வளவுக்கும் அடிக்கப் பண்ணுவார்கள்.

3. ஆயினும் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன் நிஷ்டூரமாகக் காயப்பட்டுப் போகாதபடிக்கு நாற்பது அடிக்குமேல் அவனை அடிக்கப் படக் கூடாதென்றறி.

4. களத்தில் போர் அடிக்கிற மாட்டை வாய் கட்டலாகாது.

5. இரண்டு சகோதரர்கள் ஒன்றாய்க் குடியிருக்கையில், இருவரில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால் மரித்தவனுடைய மனைவி வேறொருவனை விவாகம் பண்ணவேண்டாம். புருஷனுடைய சகோதரன் அவளைத்தனக்கு மனைவியாகக் கொண்டு தன் சகோதரனுக்குச் சந்தானஞ் சனிப்பித்து,

6. மரித்தவனுடைய பெயர் இஸ்றாயேலில் அற்றுப்போகாதபடிக்கு அவன் பேரைத்தானே அவள் பெறுந் தலைப்பிள்ளைக்குத் தரிக்கக் கடவான்.

7. ஆனால் தன் சகோதரனுடைய மனைவி சட்டதிட்டப் பிரகாரந் தனக்கே மனைவியாக வேணுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை விவாகம் பண்ண மனதில்லாதே போனால், அந்த விதவை பட்டண வாசலில் கூடிய பெரியோர்களிடத்தில் போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்றாயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனதில்லாமலிருக்கிறானென்று முறையிடுவாள்.

8. அப்போது அவர்கள் உடனே அவனை வரவழைத்து ஏனென்று கேட்கையில் அவன்: அவளை விவாகம் பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று மறுவுத்தாரஞ் சொன்னால்,

9. ஸ்திரீயானவள் பெரியோர்களின் முன்பாக அவனருகில் வந்து அவன் காலில் இருக்கிற பாத ரட்சைகயைக் கழற்றி அவன் முகத்திலே துப்பி: தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப் படவேண்டுமென்று சொல்லக் கடவன்.

10. பின்னும் இஸ்றாயேலில் அப்படிப் பட்டவனுடைய வீடு பாதரட்சையைக் கழற்றிப் போடப்பட்டவனுடைய வீடென்று அழைக்கப் படும்.

11.  இரண்டு புருஷர் ஒருவரோடொருவர் வாயாடி இருவரில் ஒருவர் மற்றவனோடு சண்டை போட ஆரம்பித்திருக்கையில் ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து கையை நீட்டி அடிக்கிறவனுடைய மானத்தைப் பிடிக்கத் துணிவாளாகில்,

12. நீ அவள் மேல் இலவலேசமும் இரங்காமல் அவளுடைய கையைத் தறிக்கக் கடவாய்.

13. நீ பெரிதுஞ் சிறிதுமான பல நிறைகற்களை உன் பையிலே வைத்துக் கொண்டிராமலும்,

14. உன் வீட்டிலே பெரிதுஞ் சிறிதுமான மரக்கால்களையும் வைத்திருக்காமலும்,

15. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கப் போகிற தேசத்தல் நீ நெடுங்காலமாய்ச் சீவிக்கும் பொருட்டு, குறையற்ற சுமுத்திரையான நிறைக்கல்லும் குறையற்ற சுமுத்திரையான மரக்காலும் உன்னிடத்திலிருக்க வேண்டும்.

16. ஏனெனில் இவ்வாறு செய்பவன் எவனோ அவனைத் தேவனாகிய கர்த்தர் அருவருக்கிறார். அக்கிரமமானது எதுவோ அவர் அதைத் துவேஷிக்கிறார்.

17, நீ எஜிப்த்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அமலேக் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள்.

18. அவன் உனக்கு விரோதமாய்ப் படையயடுத்து நீ களைத்து விடாய்த்திருக்கையிலே அவன் உன் பாளையத்தின் கடைவீரர்கள் பலவீனப்பட்டு நின்றுகொண்டதைக் கண்டு தேவனுக்கு அஞ்சாமல் அவர்களை வெட்டிப் போட்டான்.

19. ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இளைப்பாறப் பண்ணி நீ சுதந்தரித்துக் கொள்ள அவர் உனக்குக் கொடுக்கப் போகிற தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய சாதியார்களையயல்லாம் உன் வசம் ஆக்கின பிற்பாடு நீ அமலேக்கின் பேரைப் பூமியில் இராதபடிக்கு அழியச் செய்யக் கடவாய். இதை மறக்காதே, எச்சரிக்கை!