சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 24

ஞானமானது தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுவது.

1. ஞானமானது தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும்; அது கடவுளில் மகிமைப்படுத்தப்படும்; தன் மக்களின் நடுவில் அது மகிமையடையும்.

2. அது உந்நத ஆண்டவரின் சபைகளில் தன் வாய் திறந்து, அவருடைய வல்லமைக்கு முன்பாகத் தன்னையே மகிமைப்படுத்தும்.

3. தன் சொந்த மக்கள் நடுவில் அது மேன்மையடையும். பரிசுத்த திருக்கூட்டத்தில் அது வியந்து போற்றப்படும்.

4. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் அது தன் புகழ்ச்சியைக் கொண்டிருக்கும்; ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் வாழ்த்திப் போற்றப்பட்டு, அதுவே சொல்வதாவது:

5. உந்நத கடவுளின் வாயினின்று நான் வெளிவந்தேன்; நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்திய தலைப்பேறாயிருக்கிறேன்.

6. ஒருபோதும் குன்றாத ஒளி வானங்களினின்று உதிக்கும்படி நானே செய்தேன்; பூமி முழுவதையும் மேகத்தைப்போல நானே மூடினேன்.

7. நான் உன்னத ஸ்தலங்களில் தங்கி வசித்தேன்; என் சிம்மாசனம் மேகத் தூண்மேல் ஸ்தாபிக்கப்பட் டிருக்கின்றது.

8. வானமண்டலத்தின் சுற்றை நான் தனியாகச் சூழ்ந்திருக்கிறேன்; பாதாளத்தின் ஆழத்தை ஊடுருவியிருக்கிறேன்; கடல் அலைகள்மேல் நடந்திருக்கிறேன்.

9. பூமி முழுவதிலும் ஒவ்வொரு மக்களினத்திலும் நான் நின்றேன்.

10. ஒவ்வொரு நாட்டிலும் நானே பிரதானமாய் ஆட்சி செலுத்தினேன்.

11. என் வல்லமையால் உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களுமாகிய அனைவரின் இருதயங்களையும் என் பாதங்களின் கீழ் நான் மிதித்தேன். அவர்கள் எல்லோரிடமும் என் இளைப்பாற்றியைத் தேடினேன்; ஆண்டவருடைய உரிமைச் சொத்தில் நான் தங்கியிருப்பேன்.

12. அப்போது சகல காரியங்களையும் சிருஷ்டித்தவர் எனக்குத் தம் கட்டளைகளை எடுத்துரைத்தார், என்னை உண்டாக்கியவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்.

13. அவர் என்னை நோக்கி: யாக்கோபில் உன் வாசஸ்தலமும் இஸ்றாயேலில் உன் உரிமைச் சொத்தும் இருக்கக்கடவன; தெரிந்து கொள்ளப்பட்ட என்னுடையவர்களிடத்தில் வேரூன்று.

14. ஆதியிலிருந்தும், உலகத்திற்கு முந்தியும் நான் சிருஷ்டிக்கப்பட்டேன்; வரவிருக்கும் உலகம் வரையிலும், எக்காலத்துக்கும் நான் இராமலுமிரேன்; பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமுகத்தில் என் ஊழியத்தைச் செய்தேன்.

15. ஆனதால் சியோனில் ஸ்தாபிக்கப்பட்டேன்; அவ்வாறே, பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாறினேன்; எருசலேமில் என் அதிகாரம் இருந்தது.

16. மகிமையுள்ளதோர் மக்களினத்திலும், என் சர்வேசுரனுடைய உரிமைச் சொத்தாகிய அவருடைய பாகத்திலும் நான் வேரூன்றினேன். அர்ச்சியசிஷ்டவர்களின் முழுச் சபையில் என் வாசஸ்தலம் இருக்கிறது.

17. லிபானின் கேதுரு மரத்தைப் போலும், சியோன் மலையின் சைப்ரஸ் மரத்தைப் போலும் நான் உயர்த்தப்பட்டேன்.

18. காதேஸ் பனைமரத்தைப் போலும், ஜெரிக்கோவிலுள்ள ரோஜாச் செடியைப் போலும் நான் உயர்த்தப்பட்டேன்.

19. சமவெளிகளிலுள்ள அழகான ஒலீவ மரத்தைப் போலும், தெருக்களில் தண்ணீர் அருகே வேரூன்றியுள்ள பிளாத்தான் மரத்தைப் போலும் உயர்த்தப்பட்டேன்.

20. இனிய சுகந்தமுள்ள இலவங்கத்தைப் போலவும் நறுமணத் தைலத்தைப் போலவும் வாசனை வீசினேன், மிகச் சிறந்த வெள்ளைப்போளத்தைப் போலவும் இனிய சுகந்தத்தை வெளியிட்டேன்.

21. சுகந்த பன்னீர்போலும், பரிமளப் பிசின்போலும், கோமேதகம் போலும், கற்றாழைகளைப் போலும், வெட்டப்படாத தூப மரத்தைப் போலும் என் வாசஸ்தலத்தைப் பரிமளிக்கச் செய்தேன்; என் சுகந்தம் மிகப் பரிசுத்தமான பரிமளத் தைலம் போன்றது.

22. தெரெபிந்து மரம்போல் என் கிளைகளை விரித்தேன்; என் கிளைகள் மகத்துவத்தினுடையவும், வரப்பிர சாதத்தினுடையவும் கிளைகளாம்.

23. திராட்சைச் செடிபோல வாச னையின் சுகத்தைப் பிறப்பித்தேன்; என் மலர்களோ மகத்துவத்தினுடை யவும், செல்வங்களுடையவும் கனிகளாம்.

24. நான் அழகிய நேசத்தினுடை யவும், தெய்வபயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த தேவ நம்பிக்கையினுடையவும் மாதாவா யிருக்கிறேன்.

25. வழி மற்றும் சத்தியத்தின் சகல வரப்பிரசாதமும் என்னிடம் உண்டு; என்னிடம்தான் சீவியத்தினுடையவும், புண்ணியத்தினுடையவும், சகல நம்பிக்கையும்.

26. என்னை ஆசிக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து என் கனிகளினால் நிரப்பப்படுங்கள்.

27. என் உணர்வு தேனைவிட இனிப் பாயும், என் சுதந்தர பாகம் தேனை யும் தேனடையையும் விட இனிப் பாயும் இருக்கின்றது.

28. தலைமுறை தலைமுறையாய் என் ஞாபகம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

29. என்னை உண்பவர்கள் இன்னும் பசியாயிருப்பார்கள்; என்னைப் பருகுவோர் இன்னும் தாகமாயிருப் பார்கள்.

30. நான் சொல்வதைக் கேட்பவன் வெட்கிப் போக மாட்டான்; என் னால் செயல்படுகிறவர்கள் பாவஞ் செய்ய மாட்டார்கள்.

31. என்னைப் பற்றிப் பிறருக்கு விளக்கிச் சொல்பவர்கள் நித்திய சீவியத்தை அடைவார்கள்.

32. இவையெல்லாம் சீவியத்தின் புத்தகமாகவும், உன்னத கடவுளின் உடன்படிக்கையாகவும், சத்தியத்தின் அறிவாகவுமிருக்கின்றன

33. மோயீசன் நீதிகளின் கற்பனைகளில் ஒரு சட்டத்தையும், யாக்கோபின் இல்லத்திற்குச் சுதந்திர பாகத்தையும், இஸ்றாயேலுக்கு வாக்குத் தத்தங்களையும் கட்டளையிட்டார்.

34. தமது ஊழியனான தாவீது தமது குடும்பத்திலிருந்து மிகுந்த வல்லமையுள்ளவரும் மகிமையின் சிம்மாசனத்தில் என்றென்றும் வீற்றிருக்கிறவருமான ஒருவரை எழுப்பும்படி அவரை நியமித்தார்.

35. அவர் பீசோன் நதியைப் போலும், புதுப்பலன்களின் காலத் தில் டைக்ரிஸ் நதியைப்போலும் ஞானத்தை நிரப்புகிறார்.

36. அவர் யூப்ரட்டீஸ் நதியைப் போலப் புத்தியைப் பெருகச் செய் கிறார், அறுப்புக்கால யோர்தானைப் போல் அவர் அதைப் பலுகச் செய்கிறார்.

37. அவர் அறிவை ஒளியைப் போல் அனுப்புகிறார். திராட்சை பறிக்கும் காலத்தில் ஜெகோன் நதியைப் போல் அதை எழச் செய்கிறார்.

38. அதை முதன்முதலில் அவரே அறிந்திருந்தார்; பலவீனர்கள் அதைத் தேடிக் கண்டடைய மாட் டார்கள்.

39. அதன் எண்ணங்கள் கடலை விட விஸ்தாரமானவை; அதன் ஆலோசனைகள் மிகப் பெருங்கட லையும் விட ஆழமானவை.

40. ஞானமாகிய நான் நதிகளை ஓடச் செய்தேன்.

41. நான் நீர்ப்பெருக்குள்ள நதியினின்று புறப்படும் நீர் வாய்க்கால் போலும், நதியின் ஓடை போலும், தண்ணீர் கொண்டுபோகப்படும் நீர்வழியைப் போலும் பரலோகத் தினின்றுபுறப்பட்டேன்.

42. என் செடித் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவேன்; என் புல் வெளியின் கனிகளைத் தண்ணீரால் நிரப்புவேன் என்று சொன்னேன்.

43. உடனே என் வாய்க்கால் ஒரு பெரிய நதியானது: என் நதி கடலைப் போலானது.

44. ஏனெனில், போதகம் சகலருக் கும் காலை வெளிச்சத்தைப் போலப் பிரகாசிக்கும்படி செய்வேன்; தொலைவிலிருந்தே அதை நான் அறிக்கையிடுவேன்.

45. பூமியின் கீழான பகுதிகளை ஊடுருவி, உறங்குபவர்கள் அனை வரையும் கண்டு, ஆண்டவரில் நம்பிக்கை வைக்கும் அனைவரையும் ஒளிர்விப்பேன்.

46. இன்னமும் தீர்க்கதரிசனம் போல போதகத்தைப் பொழிவேன்; ஞானத்தைத் தேடுகிறவர்களுக்கு அதை அளிப்பேன்; அவர்களுடைய சந்ததியாருக்கு பரிசுத்த யுகம் வரைக்கும் கூட அதைக் கற்பிப்பதை நிறுத்த மாட்டேன்.

47. நான் எனக்காக மட்டுமின்றி, சத்தியத்தைத் தேடும் சகலருக்காக வும் உழைத்தேன் என்று கண்டு கொள்ளுங்கள்.