உபாகமம் - அதிகாரம் 24

விவாக முறிவுக்கடுத்த கட்டளையும்-புதிதாய் விவாகம் பண்ணினவன் யுத்தத்திற்குப் போகவெண்டாமென்பதும்-குஷ்டரோகத்துக்கடுத்த கட்டளையும்-கூலியைச் சீக்கிரத்தில் கொடுக்க வேண்டுமென்பதும்--நீதியையும் ஈகையையும் குறித்ததும்.

1. ஒரு மனிதன் ஒரு பெண்ணை விவாகம் பண்ணி வைத்துக் கொண்ட பின்பு அவளிடத்தில் இலச்சையான துர்க்குணத்தைக் கண்டு அவள்மேல் பிரியமற்றவனாகில், அவன் தள்ளுதலின் பத்திரமெழுதி அவள் கையிலே கொடுத்து அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பி விடலாம்.

2. அவள் அப்படியே வெளியே போன பின் வேறொருவனுக்கு மனைவியானாள்.

3. இவனும் அவளைத் துவே´த்துத் தள்ளும்படி பத்திரம் எழுதி அவளை அனுப்பிவிட்டாலாவது, தானே மரணித்தாலாவது,

4.  முதல் புருஷன் அவளைத் திரும்பவும் மனைவியாகச் சேர்த்துக் கொள்ளலாகாது. காரணம்: அவள் தீட்டுப்பட்டுக் கர்த்தருடைய சமூகத்தில் அருவருப்புக் குரியவள். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாய்க் கொடுக்கப் போகிற தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணலாகாது.

5. ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் புதிதாய்க் கட்டியிருந்தால் அவனை யுத்தத்திற்குப் போகக் கூப்பிடாமலும், யாதொரு பொது வேலைக்கு அவனைப் பிரயோகப் படுத்தாமலும், அவன் ஒருவருஒ பரியந்தம் தன் வீட்டில் நல்ல வேலை தன் இஷ்டப்படி செய்து தான் விவாகம் பண்ணின ஸ்திரீயோடு சந்தோஷமாயிருப்பானாக.

6. நீ திரிகையின் மேல்கல்லையாவது, அடிக்கல்லையாவது அடமானமாக வாங்கலாகாது. அது அவன் பிராணனை அடகாக வாங்குவது போலிருக்கும்.

7. தன் சகோதரராகிய இஸ்றாயேல் புத்திரரில் ஒருவனை ஏய்த்துப் பணத்துக்கு விற்று அதன் கிரயம் வாங்கினவன் எவனோ அவன் கையும் பணமுமாகப் பிடிபட்டால் அவன் கொலை செய்ய்ப டப வேண்டும். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக் கடவாய்.

8. (தொற்று வியாதியாகிய) குஷ்டரோகத்துக்கு உள்ளாகாதபடிக்கு நீ எச்சரிக்கையாயிரு. லேவி வம்சத்தாராகிய குருப்பிரசாதிகள் என் கட்டளையின்படி உனக்கு எவ்விதப் புத்தி சொல்லுவார்களோ அந்தப் படிநடக்கக் கவனித்துக் கொள்ளக் கடவாய்.

9.  நீங்கள் எஜிப்த்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே கர்த்தர் மரியாளுக்குச் செய்ததை நினைத்துக் கொள்ளுங்கள்.

10. பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்ததைத் திரும்பி கேட்கையில், அடமானம் வாங்கி எடுக்கும்படி அவனுடைய வீட்டினுள் பிரவேசிக்க வேண்டாம்.

11. வெளியே நிற்பாய். அவனோ தனக்குண்டான அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டு வருவானாக.

12. அவன் தரித்திரனானால் நீ அவன் அடகை வாங்கி இராத்திரிக்கு வைத்துக் கொள்ளாமல், 

13. சூரியன் அஸ்தமிக்கும் முன்னே அதை அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். அதினால் அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக் கொண்டு உன்னை ஆசீர்வதிப்பான். அப்படி செய்வது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்குப் புண்ணியமாகவிருக்கும்.

14. உன் சகோதரரிலும் உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழை எளிமையான கூலிக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காமல் ஒடுக்காயாக.

15. அவன் வேலை செய்த நாளில் தானே சூரியன் அஸ்தமிக்கும் முன்னே அவன் கூலியை அவனுக்குச் செலுத்தி விடக் கடவாய். ஏனெனில் அவன் ஏழையாயிருக்கிறதினாலே அது அவன் பிழைப் புக்கு அவசரமாயிருக்கிறது. நீ அதைக் கொடாத பட்சத்தில் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறை யிடுவான்; அது உனக்குப் பாவமாகத்தான் இருக்கும்.

16. மக்களுக்குப் பதிலாகப் பெற்றோர்களாவது, பெற்றோர்களுக்குப் பதிலாய் மக்களாவது கொலை செய்யப் பட வேண்டாம். அவனவனே செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப் படுவான்.

17. அந்நியனுடைய நியாயத்தையும் தாய் தகப்பனில்லாத பிள்ளையின் நியாயத்தையும் நீ புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடமானமாக வாங்காமலும் இருப்பாய்.

18. நீயே எஜிப்த்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்தினின்று விடுதலைப் பண்ணினதையும் நினைத்துக் கொள். இது விஷயத்தில் நீ செய்யும்படி நான் உனக்குக் கற்பிக்கிறது என்னவென்றால்,

19. உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் விட்டுவிட்டாயானால் நீ அதை எடுத்து வரும்படித் திரும்பிப் போக வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்பொருட்டு அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைகளுக்கும் விட்டு விடக் கடவாய்.

20. நீ ஒலீவ் மரங்களைக் குலுக்கிக் கொட்டைகளை எடுத்துக் கொண்டு போனபிற்பாடு உதிராமல் நின்ற கொட்டைகளைப் பறிக்கும்படி நீ திரும்பிப் போக வேண்டாம். அதுளைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டுவிடக் கடவாய்.

21. உன் திராட்சப் பழங்களை அறுத்த பிறகு நீ மிஞ்சி நின்ற பழங்களை எடுத்துக் கொண்டு வரும்படி திரும்பிப் போகாதே. அதுகளைப் பரதேசிக்குந் தாய்தந்தையில்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் விட்டு விடுவாயாக.

22. நீயும் எஜிப்த்திலே அடிமையாயிருந்தாயயன்று நினைத்துக் கொள். ஆனது பற்றி நீ அவ்விதமாய்ச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குக் கற்பிக்கிறேன்.