உபாகமம் - அதிகாரம் 23

திருச்சபையில் சேரக் கூடாதவர்கள் இன்னாரென்றும்--பாளையத்துக்குள் இருக்கிறவர்கள் அசுத்தமா யிருக்கலாகாதென்றும் -- வட்டி ஆரிடத்தில் கேட்டு வாங்கலாமென்றும் -- நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டியதென்றுஞ் சொல்லுகிறது.

1. விரை அடிக்கப் பட்டவனும், கோசம் அறுக்கப் பட்டவனும், சிசினம் சேதிக்கப் பட்டவனும் கர்த்தருடைய சபையிலே பிரவேசிக்கலாகாது.

2. பத்தாம் தலைமுறை வரையில் மம்ஸர் என்னப்பட்ட வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபையிலே பிரவேசிக்கலாகாது.

3. அம்மோறையனும் மோவாபியனும் பத்தாந் தலைமுறைக்குப் பிறகு முதலாய் என்றைக்கும் கர்த்தருடைய சபையினுள் வரக்கூடாது.

4. ஏனென்றால் நீங்கள் எஜிப்த்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் கொணர்ந்து உங்களுக்கு எதிர்கொண்டு வரவில்லை. மேலும் அவர்கள் உன்னைச் சபிக்கும்படி சீரிய மெசொப்பொத்தாமியாவின் ஊரானும் பேயோரின் குமாரனுமான பலாமென்பவனுக்கு லஞ்சங் கொடுத்து வரச் செய்தார்கள்.

5. உன் தேவனாகிய கர்த்தரோ பலாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல் உன் மேல் அன்பாயிருந்து அந்தச் சாபனையை உனக்கு ஆசீர் வசனமாக மாற்றி விட்டார்.

6. நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் என்றைக்கும் அவர்களோடு சமாதானம் பண்ணவும் வேண்டாம். அவர்களுடைய நன்மையைத் தேடவும் வேண்டாம். 

7. உன் சகோதரனாயிருப்பதினால் ஏதோமியனை அருவருக்கவொண்ணாது. நீ எஜிப்த்து தேசத்திலே பரதேசியாயிருந்ததை நினைத்து எஜிப்த்தியனை அருவருக்கவும் வேண்டாம்.

8. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முன்றாந் தலைமுறையில் கர்த்தருடைய சபைக்குட்படலாம்.

9. நீ உன் சத்துருக்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணப் புறப்படும்போது தீதான காரியங்களெல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.

10. இராக்காலத்துக் கெட்ட கனவினாலே தீட்டுப்பட்டவன் ஒருவன் உங்களில் இருந்தால் அவன் பாளையத்திற்கு வெளியே போய்,

11. சாயுங்காலம் தண்ணீரில் ஸ்நானம் பண்ணிச் சூரியன் அஸ்தமித்த பின்பு மாத்திரம் பாளையத்திற்குள் வரக் கடவான்.

12. மலபாதைக்குப் போகத்தக்க ஒரு ஸ்தலம் பாளையத்திற்குப் புறம்பே உனக்கு இருக்க வேண்டும்.

13. கச்சையில் ஒரு சிறு கோலை வைத்திருக்கக் கடவாய். மலஜலபாதைக்குப் போய் அதனால் வட்டமாக மண்ணைத் தோண்டிப் பிறகு உன்னிலிருந்து கழிந்து போனதை அந்த மண்ணினாலே மூடிப் போட்டுப்

14. போகக் கடவாய். உன் தேவனாகிய கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவதற்கும் உன் சத்துருக்களை உன் கையில் வசப்படுத்துவதற்கும் பாளையத்தினுள் உலாவுகின்றமையால் அவர் உன் பாளையத்தில் யாதொரு அசுசியமுங் காணாதபடிக்குப் பரிசுத்தமாகவே இருக்க வேண்டியது. இல்லாவிட்டால் அவர் உன்னை விட்டுப் போனாலும் போகலாம்.

15. உன் அடைக்கலத்தைத் தேடிவந்த அடிமையானவனை அவனுடைய எசமான் கையில் ஒப்புக் கொடாயாக.

16. அவன் உனக்கிருக்கிற இடங்களில் தனக்கு வசதியான ஒன்றைத் தெரிந்து கொண்டு உன் பட்டணங்களில் ஒன்றிலே உன்னுடன் இருப்பான். நீ அவனைத் துன்பப் படுத்தாதே.

17. இஸ்றாயேலின் குமாரத்திகளில் விலைமகளாகிலும், இஸ்றாயேலின் குமாரரில் விலைமகன் என்கிலும் இருக்கக் கூடாது.

18. வேசிகள் வாங்கின வேசிப்பணத்தையும் நாயை விற்றுப் போட்டு வாங்கின பணத்தையும் எவ்விதப் பொருத்தனையினாலும் உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திலே நீ ஒப்புக்கொடாயாக. அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகளாம்.

19. கடனாகக் கொடுத்த பணத்துக்கும் தானியத்துக்கும் வேறெந்தப் பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்கக் கூடாது.

20. அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். நீ சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கத் தக்கதாக, நீ உன் சகோதரன் கையில் வட்டி வாங்காமலே அவசரமானவைகளை அவனுக்குக் கடனாகக் கொடுப்பாயாக.

21. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருப்பாயாகில், அதனைச் செலுத்தத் தாமதியாதே. ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார். தாமதம் பண்ணினால் அது உனக்குப் பாவமாகுமே.

22. நீ பொருத்தனை பண்ணாமலிருந்தால் அப்பொழுது உன்மேல் பாவமில்லை.

23. ஆனால் நீ வாயினால் சொன்னதை எப்படியும் நிறைவேற்றக் கடவாய். உன் தேவனாகிய கர்த்தருக்கு நீ வார்த்தைப்பாடு கொடுத்தபடியே செய்ய வேண்டும். ஏனெனில் நீ உற்சாகமான மனதுடன் அல்லோ சொல்லிப் பொருத்தனை பண்ணிக் கொண்டாய்.

24. நீ பிறனுடைய திராட்சத் தோட்டத்திலே பிரவேசித்த பின்பு உன் ஆசைதீரப் பழங்களைப் புசிக்கலாம். ஆனால் அதுகளில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகலாகாது.

25. உன் சிநேகிதனுடைய விளைச்சலில் பிரவேசித்தால் நீ கதிர்களைக் கொய்து கையால் கசக்கிச் சாப்பிடலாம். ஆனால் கதிர்களை அரிவாளைக்கொண்டு அறுக்கக் கூடாது.