உபாகமம் - அதிகாரம் 21

அறியாமல் செய்த கொலைக்கு நிவிர்த்தி -- சிறைப்பட்ட ஸ்திரீகளை விவாகம் பண்ணுவதற்கேற்ற கட்டளை --- சிரேஷ்ட புத்திரனுடைய சுதந்தரம் -- அடங்காத புத்திரனைக் கல்லாலெறிந்து கொல்லல் - தூக்கில் போடப்பட்ட குற்றவாளி இராமுழுதும் தூக்குமரத்தின் மேல் இருக்கக் கூடாது.

1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் நீ கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிரேதம் வெளியே கிடக்கக் கண்டு கொலைசெய்தவன் இன்னானென்று தெரியாத பட்சத்தில்,

2. பெரியோர்களும் நியாயாதிபதிகளும் வந்து பிரேதங் கிடக்கிற இடத்திற்கும் சுற்றிலுமுள்ள அந்தந்த நகரத்துக்கும் எவ்வளவு தூரம் என்று அளப்பார்களாக.

3. இப்படி அளந்து எந்த நகரம் கொலை செய்யப் பட்ட ஸ்தானத்திற்கு அதிக சமீபமென்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப்பெரியோர்கள் நுகத்தடியில் இன்னும் பிணைக்கப் படாததும், கலப்பையால் பூமியை உழாததுமான ஒரு கடாரியை மந்தையிலிருந்து தெரிந்து,

4. உழுது விதையாத கல்லுங் கரடுமான ஒரு பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோய் அதின் தலையை அங்கே வெட்டக் கடவார்கள்.

5. அப்பொழுது உன்தேவனாகிய கர்த்தர் தம்மைச் சேவிக்கவும், தமது பெயரால் ஆசீர் வசனம் புரியவும், சகல வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் அவர்களுடைய வாக்கினால் தீர்ப்பிடவும் எவனைத் தெரிந்து கொண்டாரோ அந்த லேவிப் புத்திரக் குருக்கள் அத்தருணத்தில் வருவார்கள்.

6. (அவர்களோடு கூட) அந்நகரத்துப் பெரியோர்களும் கொல்லப்பட்டவனருகில் வந்து பள்ளத்தாக்கிலே கழுத்து அறுக்கப்பட்ட கடாரியின்மீது தங்கள் கைகளைக் கழுவி,

7. எங்கள் கைகள் இவ்விரத்தத்தைச் சிந்தினதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை!

8. கர்த்தாவே! தேவரீர் மீட்டிரட்சித்த இஸ்றாயேலாகிய உமது பிரஜையின்மீது இரக்கமாயிரும். இஸ்றாயேலாகிய உமது பிரஜையின் நடுவில் மாசில்லாத இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று பிரார்த்திக்கக் கடவார்கள். அப்பொழுது இரத்தப்பழி அவர்களின் மேலிராமல் நீங்கிவிடும்.

9. நீயோ கர்த்தருடைய கற்பனைப் படி செய்த பின்பு குற்றமற்றவனுடைய இரத்தப் பழிக்கு உட்படாதிருப்பாய்.

10. நீ உன் சத்துருக்களோடு யுத்தம் பண்ணப் போயிருக்க, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கைவசப்படுத்தினதால் அவர்களை நீ சிறைப்பிடித்து வந்து,

11. சிறைப்பட்டவர்களில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக் கண்டு அவள் மீது காதலித்து அவளை விவாகம் பண்ணிக் கொள்ள விரும்புவாயாகில்,

12. அவளை உன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகலாம். அவளோ தன் தலைமயிரை சிரைப்பித்துத் தன் நகங்களையும் களைந்து,

13. தான் பிடிபட்ட போது எந்த வஸ்திரத்தை அணிந்து கொண்டிருந்தாளோ அதை நீக்கி உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக் கொண்ட பின் அவள் உனக்கு மனைவியாவாள்.

14. அதின் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த பட்சம் அற்றுப்போகுமாகில் அவளைச் சுயாதீனமாய்ப் போகவிடு. நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியால் அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம். உன் அதிகாரத்தால் அவளை உபத்திரியப் படுத்தவு மாகாது.

15. இரண்டு மனைவிகளையுடைய ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பமாகவும், மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்கள். வெறுக்கப்பட்ட ஸ்திரீயின் புத்திரனோ சிரேஷ்ட புத்திரனாயிருக்கும் பட்சத்தில்,

16. அவன் தனக்குண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில் அவன் வெறுக்கப் பட்டவளுடைய குமாரனுக்கு சிரேஷ்ட புத்திர சுதந்தரத்தைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல் விரும்பப் பட்ட மனைவியின் குமாரனுக்கு அதைப் பரிச்சேதங் கொடுக்கலாகாது.

17. அவன் வெறுக்கப் பட்டவளிடத்தில் பிறந்த தன் குமாரனை சிரேஷ்ட புத்திரனாகவே அங்கீகரித்து அவன் தனக்குண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்க வேண்டும். உள்ளபடி அவன் தன் தகப்பனுக்கு முதல் குமாரனாயிருக்கிறதினால் சிரேஷ்ட புத்திர சுதந்தரம் அவனுக்கே உரியதாம்.

18. தகப்பனுடைய சொல்லையும், தாயுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

19. தாயும் தகப்பனும் அவனைப் பிடித்து அந்த நகரத்தின் பெரியோரிடத்தில் நீதி ஸ்தலத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்,

20. எங்கள் மகனாகிய இவன் குறும்பும், அகந்தையுமுள்ளவனாய் எங்கள் புத்திமதிகளைக் கேளாமல் தள்ளி கெட்ட நடக்கை நடக்கிறான். பேருண்டிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று சொல்லுவார்கள்.

21. அப்பொழுது அவன் சாகும்படி அந்த நகரத்து வாசிகளெல்லோரும் அவன் மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிப் போட்டு, இஸ்றாயேலியர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று பயப்படுவார்கள்.

22. ஒரு மனிதன் சாவுக்குப் பாத்திரமான பாவத்தைக் கட்டிக் கொண்டான். அவன் கொலை செய்யப்பட வேண்டுமென்று தீர்ப்பு உண்டாகில் தூக்குமரத்திலே தூக்கப் பட்ட பிற்பாடு,

23. இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. ஆனால் அதே நாளில் அவனை அடக்கம் பண்ண வேண்டும். ஏனெனில் மரத்திலே தொங்குகிறவன் சர்வேசுரனாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாய் அளிக்கும் தேசத்çத் தீட்டுப் படுத்துகிறது பரிச்சேதம் ஆகாது.