உபாகமம் - அதிகாரம் 19

அடைக்கலப் பட்டணங்கள்--இரண்டு சாட்சிகள் நியாயத்திற்கு வேண்டும்.-பொய்சாட்சிக்காரருக்கு விதித்த தண்டனை.

1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப் போகிற தேசத்தின் சாதிகளைத் துரத்தி விட்டதினாலே நீ அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டு அவர்களுடைய பட்டணங்களிலும் வீடுகளிலும் குடியேறின போது,

2. நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுத்த தேசத்தின் நடுவிலே உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக் கடவாய்.

3. கொலை செய்தவன் சுற்றுப்புறத்திலிருந்து தப்பித்தோடிப் போய்ச் சரணமடையத் தக்கதாக நீ (சுதந்தரித்திருக்கும்) தேசத்தின் எல்லையை மூன்று பங்காகச் சரியாய்ப் பகுக்கக் கடவாய். மேலும் (அந்த அடைக்கலப் பட்டணங்களுக்கு) வழியை உண்டுபண்ணக் கவனமாயிருப்பாய்.

4. கொலை செய்து ஓடிப்போய் உயிரோடு தப்பித்துக் கொள்ளவேண்டியவன் யாரெனில்: நேற்றும் மூன்று நாளும் பகைத்திராத பிறத்தியானை மனதறியாமல் எவன் கொன்று போட்டானோ அவனே.

5. (உதாரணம்:) அவன் யாதொரு கபடுமில்லாமல் மற்றொருவனோடு கூட விறகு வெட்டக் காட்டில் போய் மரத்தை வெட்டக் கையில் கோடரி கைநழுவியாவது இரும்பு காம்பை விட்டாவது கழன்று துணைவன்மேல் பட்டதினால் அவன் இறந்து போனான். இப்படிக் கொலை செய்தவன் அந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போய்த் தன் பிராணனைக் காப்பாற்று வான்.

6. இல்லாவிட்டால் கொலை செய்யப் பட்டவனுடைய சொந்தக்காரன் வயிற்றெரிச்சல் பட்டுப் (பழிவாங்க) அவனைப் பின்தொடரும்போது வழி அதி தூரமாய் இருக்கும் பட்சத்தில் அவனைப் பிடித்து அநியாயமாய்க் கொன்று போடுவான். உள்ளபடி அவன் செத்தவனை முன்னே பகைக்கவில்லை என்பது ருசுவாகையால் அவன் மேலே சாவுக்குப் பாத்திரமான குற்றம் ஒன்றுமில்லை.

7. அதுநிமித்தம் அந்த மூன்று பட்டணங்களும் ஒன்றுக்கொன்று சரிசமமான துலைவில் இருக்க வேண்டுமென்று கற்பிக்கிறேன்.

8. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற கற்பனைகளின்படி நடந்து கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய வழிகளில் எந்நாளும் நடந்தொழுகுவாயாகில்,

9. உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன் எல்லைகளை விஸ்தாரமாக்கி அவர்களுக்குக் கொடுப்போமென்று சொல்லிய தேசம் முழுவதையும் உனக்குத் தந்தருளிய பிற்பாடு நீ முன்குறிக்கப்பட்ட மூன்று பட்டணங்களோடு இன்னும் மூன்று பட்டணங்களைச் சேர்த்து அடைக்கலப் பட்டணங்களின் இலக்கம் இரட்டிக்கக் கவனிப்பாய்.

10. அதினால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பூமியில் மாசில்லாத இரத்தம் சிந்தப்படாதிருப்பதினாலே நீ இரத்தப்பழி சுமராதிருப்பாய்.

11. ஆனால் ஒருவன் தன் பிறனைப் பகைத்து அவனுக்குப் பதிவிருந்து எழும்பி அவன் மேல் விழுந்து சாகடித்தபின்பு அவன் முன் சொல்லப் பட்ட பட்டணங்களில் ஒன்றிலே ஒதுங்கினால்,

12. அவனுடைய நகரத்தின் பெரியோர்கள் அவனை அடைக்கல ஸ்தலத்தினின்று பிடித்துக் கொண்டு வரும்படி ஆள் அனுப்பி அவன் சாகும்படிக்கு அவனைக் கொலை செய்யப் பட்டவனுடைய சொந்தக் காரன் கையிலே ஒப்புக்கொடுப்பார்கள். இவன் அவனைச் சாகடிப்பான்.

13. உனக்கு நன்றாகும்படி நீ அவன்மேல் இரங்க வேண்டாம். மாசில்லாத இரத்தப்பழி இஸ்றாயேலில் இல்லாதபடிக்கு அவ்விதமே செய்யக் கடவாய்.

14. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாய்க் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாகும் காணியாட்சியிலே முன்னோர்கள் வைத்த எல்லைக்குறி கற்களை நீ எடுக்கவும் ஒற்றிப் போடவும் ஆகாது.

15. ஒருவன் எந்தக் குற்றம் அல்லது எந்த அக்கிரமம் செய்திருந்தாலும், ஒரே சாட்சியைக் கேட்டு நியாயந் தீர்க்கக் கூடாது. ஆனால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினாலே காரியம் ருசுவாக வேண்டும்.

16.  ஒருவன் மேல் குற்றஞ் சாட்ட ஒரு பொய்சாட்சிக் காரன் வந்து அவனுக்கு விரோதமாய்க் குற்றஞ் சுமத்தினாலோ,

17. வழக்காடுகிற இருவரும் அந்நாளிலிருக்கும் குருக்களுடையவும் நடுவர்களுடையவும் முன்னிலையில் கர்த்தர் சமூகத்தில் வந்து நிற்பார்களாக.

18. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணை பண்ணியபின்பு பொய்சாட்சிக்காரன் தன் சகோதரன் பேரில் சொல்லியது பொய் என்று கண்டுபிடித்தார்களானால்,

19. அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்த பிரகாரமே அவனுக்குச் செய்யக்கடவார்கள். அவ்விதமாய் உன் நடுவிலிருந்து தீமையை விலக்குவாயாக.

20. மற்றவர்களும் அதைக் கேள்விப்பட்டுப் பயந்து அப்படிப்பட்ட அக்கிரமத்தைச் செய்யத் துணியார்கள்.

21. நீ அவன் பேரில் இரங்க வேண்டாம். ஆனால் உயிருக்கு உயிரையும் கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும் வாங்குவாய்.