ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 18

சீலோவில் கூடாரத்தை நிறுத்தினதும்-பெஞ்சமீனரின் சுதந்தரமான வீதமும்.

1. இஸ்றாயேல் புத்திரர் எல்லோரும் சீலோவில் ஒன்றாய்க் கூடி, அங்கே சாட்சியக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

2. இஸ்றாயேலிய புத்திரரில் தங்கள் சுதந்தர வீதத்தை இன்னும் பெறாத ஏழு கோத்திரங்கள் இருந்தன.

3. ஜோசுவா அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்களித்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளப் போவதற்கு நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருந்து வாடிப் போகிறீர்கள்?

4. உங்கள் ஒவ்வொரு கோத்திரத்துக்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் அவர்களை அனுப்புவேன். அவர்கள் புறப்பட்டுப் போய் அத்தேசத்திலே சுற்றித் திரிந்து அதை ஒவ்வொரு கோத்திரத்து ஜனங்களின் கணக்குக்குத் தக்காப்போலப் பகிர்ந்தெழுதி என்னிடத்தில் கண்டதையும் எழுதியதையும் விவரமாய்ச் சொல்லிக் காட்டுவார்கள்.

5. தேசத்தை ஏழு பங்காகப் பாகிக்கக் கடவீர்கள். யூதா வமிசத்தார் தெற்கே இருக்கிற தங்கள் எல்லையிலும், ஜோசேப்பு வமிசத்தார் வடக்கே இருக்கிற தங்கள் எல்லையிலும் இருக்க,

6. அவர்களின் நடுவே கிடக்கிற தேசத்தை ஏழு பங்காகப் பகிர்ந்தெழுதிய பின்பு நீங்கள் இங்கே என்னிடத்தில் வாருங்கள். அப்பொழுது நான் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன். 

7. லேவியருக்கு உங்கள் நடுவே வீதம் கிடையாது. ஏனெனில் அவர்களுடைய திவ்விய பட்டமே அவர்களுக்குச் சுதந்தரம். காதும், ரூபனும், மனாசேயின் பாதி கோத்திரமும் யோர்தானுக்கு அந்தண்டை உள்ள கீழ்ப்புறத்திலே கர்த்தருடைய தாசனான மோயீசன் தங்களுக்குக் கொடுத்த தங்கள் வீதத்தைப் பெற்றுத் தீர்ந்தது என்றான்.

8. அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட முஸ்திப்புள்ளவர்களாயிருக்கையில் ஜோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் போய் தேசத்தில் சுற்றித் திரிந்து அதின் விவரத்தை எழுதி என்னிடத்தில் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் சீலோவிலேதானே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன் என்றனுப்பினான்.

9. அந்த மனுஷர் போய் அந்தத் தேசத்திலே சாக்கிரதையாய்ச் சுற்றித் திரிந்து அதனை ஏழு பங்காகப் பகிர்ந்து ஒரு புஸ்தகத்திலே எழுதிக்கொண்டு சீலோவிலிருக்கிற பாளையத்திலே ஜோசுவாவிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்.

10. அப்பொழுது ஜோசுவா சீலோவிலேதானே கர்த்தருடைய சந்நிதியிலே சீட்டுப் போட்டு இஸ்றாயேல் புத்திரருக்கு வீதம் வீதமாக ஏழு பங்காய்ப் பங்கிட்டுக் கொடுத்தான்.

11. பெஞ்சமீன் புத்திரருக்கு, அவர்களுடைய வமிசங்களின்படியே முதல் சீட்டு விழுந்தது. அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட தேசம் யூதா புத்திரருக்கும், ஜோசேப்பு புத்திரருக்கும் நடுவாந்தரமாயிருந்தது.

12. அவர்களுடைய வட எல்லை: யோர்தானிலிருந்து புறப்பட்டு எரிக்கோவுக்குச் சமீபமான வடபக்கமாகச் சென்று அப்புறம் மேற்கே மலையிலேறி பேட்டலின் வனாந்தரத்தை அடைந்து,

13. அங்கிருந்து பேட்டலாகிய லுஜாவுக்கு வந்து கீழ் பெத்தானுக்குத் தெற்கேயிருக்கிற மலை பக்கத்தில் கிடக்கிற அத்தரோட் ஆதாருக்கு இறங்கிப் போகுது.

14. அவ்விடத்திலிருந்து எல்லை பெட்டரோனை நோக்கும் வபிரிக்குசுக்கு எதிரே இருக்கிற மலைக்குத் தென்புறத்திலே கடல் முகமாய்த் திரும்பும். பிறகு கரியற்பாலென்னும் கரியாத்தியாரீமாகிய யூதா புத்திரரின் பட்டணத்தருகே போய் முடியும். இது மேற்குக் கடலுக்கு எதிரான ஓரமே.

15. தென்புறத்து எல்லை கரியாத்தி யாரீம் பக்கத்திலிருந்து சமுத்திர முக மாய்ப் போகும். அங்கிருந்து நெப்துவா என்னும் நீருற்றுக்குச் செல்லும்.

16. அவ்விடத்திலே நின்று என்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கை நோக்குகின்ற மலைப்பாகத்திற்கு இறங்கும். அது வட திசையில் இராப்பாயீம் பள்ளத் தாக்கின் கடையாந்தரத்திலே யிருக்கும். அங்கேயிருந்து மேற்கே திரும்பி கேயயன்னம் என்றழைக்கும் தெற்கே ஜெபுசையருக்குப் பக்கமான என்னோன் பள்ளத்தாக்கிலே போய் ரோகேல் என்னும் நீரூற்றுக்கு வந்து சேரும்.

17. அங்கிருந்து வடக்கே போய் சூரிய நீரூற்றென்று அழைக்கும் என்செமஸ் ஊருக்குச் சென்று,

18. அதொமிம் ஏற்றத்துக்கு எதிரே இருக்கும் மேடுகளுக்குப் போய் அபன் போவன் என்று அழைக்கும் ரூபனின் மகனாகிய போவனின் பாறைக்கு வந்து வடபக்கமாய் நாட்டுப்புறமாகிய சமமான வெளிகளிலே வந்து சேரும்.

19. அப்புறம் எல்லையானது பெட்டாகிலாவுக்கு வடபக்கமாய்ப் போய் யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உவர்க்கடலின் வட முனையோடு முடிந்து போம்.

20. கிழக்குப் புறத்தின் எல்லை யோர்தானேயாம். இது பெஞ்சமீன் புத்திர ருக்கு அவர்களுடைய வமிசங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.

21. பெஞ்சமீனுடைய பட்டணங்களாவது: எரிக்கோ, பெட்டாகில், காசீஸ் பள்ளத்தாக்கு,

22, பெட்டரபா, சமராயீம், பேட்டல்,

23. ஆலிம், ஆப்பரா, ஒப்பரா,

24. வில்லாவெமனா, ஒப்னீ, காபே என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளுக் கடுத்த கிராமங்களுமே.

25. காபாவோம், இராமா, பேரோட்,

26. மெஸ்பே காப்பரா, அமோஸா,

27. ரேக்கம், ஜாரெப்பல், தாரேலா,

28. சேலா, எலேப், ஜெபுஸ், அதாவது ஜெருசலேம், கபாட், கரியட் என்னும் பதினாலு பட்டணங்களும் அவைகளுக்கடுத்த கிராமங்களுமேயாம். பெஞ்சமீன் புத்திரருக்கு அவர்களுடைய வமிசங்களின் படி இருக்கப் பட்ட சுதந்தரம் அதுவே.