ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 17

மனாசேயின் புத்திரர்களுடைய சுதந்தரம்.

1. மனாசேயின் கோத்திரத்திற்கும் ஒரு (விசேஷ) சுதந்தரம் கிடைத்தது. (ஏனெனில் அவன் ஜோசேப்புக்கு முதல் போனவன்.) மனாசேயின் மூத்த குமாரனும் கலாத்தின் தகப்பனுமான மாக்கீர் என்பவனுக்குக் கலாதும் பாசானும் கொடுக்கப் பட்டது. அந்த மாக்கீரென்பவன் மகா வீர சூரனாயிருந்தான்.

2. மனாசேயின் மற்ற புத்திரர்களாகிய ஆபியேசரின் குமாரர்களுக்கும், எலேக்கின் குமாரர்களுக்கும், எஸ்ரியேலின் குமாரர்களுக்கும், சேக்கேமின் குமாரர்களுக்கும் ஏப்பரின் குமாரர்களுககும் சேமிதாவின் குமாரத்திகளுக்கும் அவரவருடைய வமிசத்தின்படி சுதந்தரங் கொடுக்கப்பட்டது: தங்கள் வமிசங்களுக்குள்ளே அவர்களே ஜோசேப்பின் குமாரன் மனாசேயின் ஆண்மக்களாம்.

3. ஆனால் மனாசேயன் குமாரனான மாக்கீருக்குப் பிறந்த கலாதின் குமாரனான ஏப்பரின் மகன் சல்பாத்தென்பவனுக்குக் குமாரர் இல்லை. குமாரத்திகள் மாத்திரம் அவனுக்குப் பிறந்தனர். இவர்களுடைய நாமங்கள்: மாலாள், நோவாள், ஏகிலாள், மெல்காள், தெற்சாள் என்பவர்களே.

4. இவர்கள் ஆசாரியனான இலேயஸாருக்கும், நூனின் குமாரனாகிய ஜோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாக வந்து: எங்கள் சகோதரரின் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்க வேண்டுமென்று மோயீசன் மூலியமாய்க் கர்த்தர் கற்பித்திருக்கிறார் என்றார்கள். (இதைக் கேட்டு ஜோசுவா) ஆண்டவருடைய கட்டளைக்கிணங்கி அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

5. ஆகையால் யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கும் காலத் பாசானென்னும் தேசங்களைத் தவிர மனாசேக்குத் திருவுளச் சீட்டு விழுந்தபடி பத்துப் பங்குகள் கிடைத்தன.

6. ஏனெனில் மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரர்களுக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள். ஆனால் கலாத் தேசம் மனாசேயின் மற்றப் புத்திரருடைய வீதத்தில் அகப்பட்டதாம்.

7. ஆகையால் மனாசேயின் எல்லை ஆசேர் துவக்கிச் சிக்கேமுக்கு எதிரிலிருக்கிற மக்மேட்டாத் மட்டும் போய் அங்கிருந்து வலது திசையைத் திரும்பித் தப்புவா ஊற்று என்னும் ஊருக்கருகே செல்லுகின்றது.

8. உள்ளபடி தப்புவாவின் நாடு மனாசேக்குக் கிடைத்தது. தப்புவா என்கிற ஊரோவெனில் எப்பிராயீம் புத்திரரின் வசமாயிருக்கிறது.

9. அப்புறம் நாணல் பள்ளத்தாக்கின் எல்லையானது மனாசேயின் பட்டணங்களின் நடுவேயுள்ள எப்பிராயீம் நகரங்களுக்கடுத்த ஆற்றுக்குத் தென்திசையில் இறங்கிப் போகின்றது. மனாசேயின் எல்லையோ ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.

10. அதிப்படியிருக்க, தென்புறத்து நாடு எப்பிராயீமுடையது. வடபுறத்து நாடு மனாசேயுடையது. இரண்டுக்கும் சமுத்திரமே கடைசி எல்லை. அவ்விரண்டும் கீழ்த்திசை முகமாய்ப் போனால் இசாக்காரின் கோத்திரத்தாரோடும், வடக்கே போனால் ஆஸேர் கோத்திரத்தாரோடுங் கூடிச் சேரும்.

11. இசாக்காரிலும் ஆசேரிலும் இருந்த மனாசேயின் காணியாட்சி என்னவென்றால், பெத்சாலும், அதைச் சேர்ந்த கிராமங்களும், ஜெபிலாமும், அதன் ஊர்களும், தோரின் குடிகளும், அவர்களின் கிராமங்களும், எந்தோரின் குடிகளும், அவர்களின் ஊர்களும், தேனாக்கின் குடிகளும், அவர்களின் பட்டிகளும், மகெத்தாவின் குடிகளும் அவர்களின் சிற்றூர்களும், நோப்பெட் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதியும் என்னப் பட்டவைகளே யாம்.

12. மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களை அழிக்கக் கூடாமற் போயிற்று. கானானையரோ அவர்களுடைய சீமையில் குடியேறத் துடங்கினர்.

13. இஸ்றாயேல் புத்திரர் பலங்கொண்ட பிற்பாடோவெனில் கானானையரைத் தங்களுக்குப் பகுதி கட்டும்படி செய்தார்களேயயாழிய அவர்களைச் சங்காரம் பண்ணவேயில்லை.

14. அந்தக் காலத்திலே ஜோசேப்பின் புத்திரர் ஜோசுவாவை நோக்கி: நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயும் இருக்கையிலே நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே பங்கையும் ஒரே வீதத்தையும் கொடுத்ததென்ன என்று கேட்டார்கள்.

15. அதற்கு ஜோசுவா: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும் மலைகளின் சுதந்தரம் உங்களுக்கு நெருக்கமாயும் இருந்தால் பெரேசையர், இரப்பாயீமர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் மரங்களை வெட்டி உங்களுக்கு இடமுண்டாக்கிக் கொள்ளுங்கள் என்றான்.

16. அதற்கு ஜோசேப்பின் புத்திரர்: மலைகளுக்கு எப்படிப் போகக் கூடும்? சமபூமியிலிருக்கிற பெத்சானிலும் அதின் கிராமங்களிலும் பள்ளத்தாக்கின் நடுவே இருக்கிற ஜேஸ்றாயேலிலுங் குடியிருக்கிற கானானையர் இருப்பாயுதம் அணிந்து இரதங்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்களே என்றார்கள்.

17. ஜோசுவா ஜோசேப்புடைய வமிசத்தாராகிய எப்பிராயீமரையும், மனாசேயரையும் நோக்கி: நீங்கள் சனம் பெருத்தவர்கள். உங்களுக்கு வீரசூர பராக்கிரமம் உண்டு. ஒரு பங்கு உங்களுக்குப் போதாதாதலால்,

18. நீங்கள் (அவசியமாய்) மலை நாட்டுக்குப் போய் மரங்களை வெட்டி உங்களுக்கு இடம் உண்டாக்கிச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். கானானையர் பலசாலிகளாயிருக்கிறார்களே, அவர்களுக்கு இருப்பாயுதமணிந்த இரதங்கள் உண்டென்று சொன்னீர்களே; நீங்கள் அவர்களைச் சங்காரம் பண்ணினால் அவர்கள் நாட்டையும் அதின் கடையாந்தரத்திலிருக்கிற தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்ளலாம் என்று மறுமொழி சொன்னான்.