உபாகமம் - அதிகாரம் 17

பலிகள் பழுதற்றவையாயிருக்க வேண்டும்--விக்கிரக ஆராதனையைப் பண்ணுபவர்கள் கொல்லப் பட வேண்டும்-கடினமான வழக்குகளிலே ஆசாரியர்களுடைய ஆலோசனை கேட்க வேண்டும்-இராசாவை நியமிக்க வேண்டிய விதத்தையும் அனுசரிக்க வேண்டிய கடமைகளையும் குறித்து.

1. அவலட்சணமும் யாதொரு பழுதுமுள்ள ஆட்டையாவது மாட்டையாவது உன்தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடலாகாது. அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.

2. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்களின் வாசல்கள் யாதொன்றில் ஒரு புருஷனாவது ஒரு ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தருடைய சமூகத்தில் அக்கிரமஞ் செய்து அவருடைய உடன்படிக்கையை மீறி,

3. என் கற்பனைக்கு விரோதமாகப் போய் அந்நியத் தேவர்களையாவது சந்திரன், சூரியன் முதலிய வான சேனைகளாவது ஆராதிக்கிறதாகக் கண்டுபிடிக்கப் பட்டால்,

4. அது உனக்கு அறிவிக்கப் பட்டபோது நீ கேட்டுக் கவனமாய் விசாரிக்கக் கடவாய். பிறகு அது உண்மையயன்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்றாயேலரில் நடந்தேறியது வாஸ்தவமென்றும் நீ கண்டாயாகில்,

5. அதிபாதகமான அக்கிரமத்தைக் கட்டிக் கொண்ட புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் பட்டண வாசல்களுக்குப் (புறம்பாய்) நீ கூட்டிக் கொண்டு போவாய். அப்படிப்பட்டவர்கள் கல்லாலெறியப்படுவார்கள்.

6. சாவுக்குப் பாத்திரமானவனுடைய குற்றம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தாவ் ருசுப்படுத்தப் பட்டுத் தானே அவன் கொலை செய்யப் படக்கடவான். ஒரே சாட்சியுடைய வாக்கினாலே எவனும் கொலைசெய்யப் படலாகாது.

7. அவனைக் கொலைசெய்யும்போது, சாட்சிகளுடைய கை முந்தியும் மற்றுமுள்ள ஜனங்களுடைய கை பிந்தியும் அவன் மேலிருக்க வேண்டும். இப்படிச் செய்துதானே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக் கடவாய்.

8. இரத்தப் பழிகளைக் குறித்தும் வியாச்சியங்களைக் குறித்தும், குஷ்டரோகத்தைக் குறித்தும் வழக்கு நேரிட்டு நியாயந் தீர்க்க வேண்டிய கடின விஷயத்தில் உனக்குச் சந்தேகமுண்டென்றும், நியாயாதிபதிகளுடைய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருக்கின்றதென்றும் கண் டால் நீ எழுந்து உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

9. வேலியின் சந்தானராகிய குருக்களிடமும் அக்காலத்தில் ஏற்பட்ட அதிபதிகளிடமும் வந்து அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கக் கடவாய். அவர்கள் நியாயமான தீர்ப்பை உனக்கு உணர்த்துவார்கள்.

10. கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திலே வீற்றிருக்கிற அதிகாரிகள் தேவப் பிரமாணப்படி உனக்குச் சொல்லி உணர்த்தும் பிரகாரமே நீ கேட்டு அந்தப் படியயல்லாஞ் செய்து,

11. அவர்களுடைய ஆலோசனைக்கிணங்கி வலதுபுறம் இடது புறம் சாயாமல் நடக்கக் கடவாய்.

12. எவன் ஆங்காரங்கொண்டு உன் தேவனாகிய கர்த்தருக்குத் தற்காலம் ஊழியஞ் செய்கிற ஆசாரியனுடைய கட்டளைக்கும் அதிபனுடைய தீர்ப்புக்கும் அடங்காமல் மீறுவானோ அவன் சாகக் கடவான். இப்படித் தீமையை இஸ்றாயேலிலிருந்து விலக்கக் கடவாய்.

13. அப்பொழுது சனங்கள் எல்லோரும் கேள்வியுற்றுப் பயப்படுவதால் இனி இடும்பு செய்ய ஒருவனுந் துணிய மாட்டான்.

14. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொண்டு அதில் குடியேறின பின்பு, நீ என்னைச் சுற்றிலுமிருக்கும் சமஸ்த சாதிகளைப் போல நானும் எனக்கு ஒரு இராசாவை ஏற்படுத்த வேணுமென்று தீர்மானிப்பாயாகில்,

15. உன் தேவனாகிய கர்த்தர் உன் சகோதரரிலிருந்து எவனைத் தெரிந்து கொண்டாரோ அவனை நீ ஏற்படுத்தக் கடவாய். உன் சகோதரருக்குள் ஒருவனை நீ இராஜாவாக வைக்கலாமொழிய அன்னியனைப் பரிச்சேதம் வைக்கக் கூடாது.

16. அவன் இராசாசனத்தில் ஏறிய பின்பு, அநேகம் குதிரைகளைச் சம்பாதித்ததினாலும், திரளான குதிரை வீரரைச் சேர்த்ததினாலும் கர்வமடைந்து சனங்களை எஜிப்த்துக்குத் திருப்பிக் கொண்டு போகவே கூடாது. ஏனெனில் வந்த வழியாய் நீங்கள் ஒருக்காலும் திரும்பிப் போக வேண்டாமென்று கர்த்தர் உங்களுக்குக் கற்பித்திருக்கிறார்.

17. அரசன் தன் மனதைக் கவரத்தக்க அநேக ஸ்திரீகளைப் படைக்கவும் வேண்டாம். வெள்ளியும் பொன்னும் அபரிமிதமாய்ச் சேர்க்கவும் வேண்டாம்.

18. அவன் தன் இராசாங்க சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது உபாகமமென்னும் இந்த நீதி நியாய நூலின் ஒரு பிரதியை லேவிக் கோத்திரத்தார் ஆகிய ஆசாரியரிடத்திலே பெற்றுக் கொண்டு தனக்கு ஒரு பிரதி தானே எழுதக் கடவான்.

19. அந்தப் பிரதியை அவன் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தேவனாகிய தன் கர்த்தருக்குப் பயப்படவும், வேதத்தில் கற்பிக்கப்பட்ட அவருடைய நீதிவாக்கியங்களையும், இரீதி ஆசாரங்களையும் அனுசரிக்கவும் வேண்டியதென்று கண்டுபிடித்து மேற்படி நூலைத் தினமும் வாசிக்கக் கடவான்.

20. அவன் இறுமாப்படைந்து தன் சகோதரர்மேல் தன்னை உயர்த்தாமலும், வலதுபுறம் இடதுபுறஞ் சாயாமலும் இருப்பானாகில் இஸ்றாயேல் நடுவே அவனும் அவன் குமாரர்களும் நெடுநாள் இராசாங்கம் பண்ணுவார்கள்.