ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 16

ஜோசேப் புத்திரருடைய நாட்டின் எல்லைகள், -- எப்பிராயீமின் சுதந்தரத்தின் எல்லைகள் -- கானான் தேசத்தார் செயிக்கப் படாதது.

1. ஜோசேப் புத்திரருக்கு விழுந்த திருவுளச் சீட்டினால் உண்டான வீதமாவது: எரிக்கோவுக்கெதிரிலிருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தண்ணீர்களுக்குச் சென்று, எரிக்கோ துவக்கிப் பேட்டலின் மலை மட்டும் பரவிநின்ற வனாந்தர வழியாய்ப் போய்,

2. பேட்டலிலிருந்து லுசா முகமாய்ச் சென்று அத்தரோட் திசையிலுள்ள அர்க்கி என்னும் எல்லையின் நெடுகப் போய்,

3. மேற்கே எப்லேத்தின் எல்லைக்கும் பெத்தரோன் என்னும் தாழ்வான நாட்டின் எல்லைக்கும் காஜேருக்கும் இறங்கிப் பெரிய சமுத்திரம் வரைக்கும் போய் முடியும்.

4. இதை ஜோசேப்பின் குமாரராகிய மனாசேயும், எப்பிராயீமும் சுதந்தரித்துக் கொண்டார்களாம்.

5. எப்பிராயீம் புத்திரர்களுக்கு, அவர்களின் வமிசக் கிரமப்படி உண்டான சுதந்தரத்தின் எல்லையாவது என்னவெனில்: கீழ்ப்புறத்திலே அத்தரோட், ஆதார் துவக்கி மேல் பெட்டரோன் மட்டும் போய்,

6. கடல் வரைக்கும் போகின்றது. மக்மேட்டாத்தோவெனில் வட திசையை நோக்கிக் கீழ்த்திசையிலுள்ள தானாச்சேலோ இடத்தில் எல்லைகளைச் சுற்றிப் போய்க் கீழ்ப்புறத்திலிருந்து ஜனோவேயுக்குப் போய், 

7. அங்கிருந்து அத்தரோட்டுக்கும் நவரட்டாவுக்கும் சென்று எரிக்கோவை அடைந்து யோர்தான் மட்டும் போகின்றது.

8. அப்புறந் தப்புவாவை விட்டு சமுத்திரத்தோரமாய் நாணல் என்கிற பள்ளத்தாக்குக்குச் சென்று உவர்க்கடலை அடைந்து முடியும். எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு உண்டான அவர்களுடைய வமிசங்களின் படி உண்டான சுதந்தரம் அதுவேயாம்.

9. ஆனால் மனாசேயின் புத்திரர்களின் சுதந்தரத்திலிருந்த (பற்பல) பட்டணங்களும் அவைகளைச் சேர்ந்த கிராமங்களும் அவர்களுடைய கையினின்று எடுக்கப்பட்டு எப்பிராயீமின் புத்திரர்களுக்குக் கொடுக்கப் பட்டன.

10. எபிராயீமின் சந்ததியார்கள் காஜேரில் குடியிருந்த கானானையரைச் சங்கரித்ததில்லை. ஆகையால் கானானையர் இந்நாள் மட்டும் எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களாய் அவர்களுக்குச் சேவிக்கிறார்கள்.