உபாகமம் - அதிகாரம் 16

பாஸ்காப் பண்டிகையையும் ஒன்பது வாரங்களின் பண்டிகையையும் கூடாரப் பண்டிகையையும் குறித்ததும்--நியாயாதிபதிகள் செய்ய வேண்டிய நீதியைக் குறித்ததும்--விக்கிரக ஆராதனையைக் குறித்தும்.

1. வசந்த காலத்து முதல்மாதமாகிய முதற்பலன்களின் மாதத்தைக் கவனித்து ஆசரிக்கக் கடவாய். அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமாகப் பஸ்காவைக் கொண்டாடுவாய். ஏனெனில் இந்த மாதத்திலே இராக்காலத்திற் கர்த்தர் உன்னை எஜிப்த்திலிருந்து புறப்படப் பண்ணினாரே.

2. அப்போது உன் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி எந்த ஸ்தானத்தைத்தெரிந்து கொண்டாரோ அந்த ஸ்தானத்திலே உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவுக்கடுத்த பலிகளாகிய ஆடுமாடுகளை இடுவாயாக.

3. நீ எஜிப்த்து தேசத்திலிருந்து பயங்கரத்துடன் புறப்பட்ட படியால் நீ எஜிப்த்தை விட்ட நாளை உன் ஜீவிய நாளெல்லாம் நினைக்கும் படியாக அந்தப் பண்டிகையிலே புளித்த அப்பத்தைப் புசியாமல் சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழு நாள் வரைக்கும் புசிக்கக் கடவாய்.

4. ஏழு நாளளவும் உன் சகல எல்லைகளுக்குள்ளே புளிப்பானது காணப்படலாகாது. நீ முதல் நாள் மாலையில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் காலை பரியந்தம் வைக்கவும் வேண்டாம்.

5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப் போகிற உன் பட்டணங்களில் எல்லாம் நீ பஸ்காவை அடிக்காமல்,

6. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தலத்திலே நீ எஜிப்த்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய அஸ்தமான நேரத்திலே மாத்திரம் அதை அடிக்கக் கடவாய்.

7. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தலத்திலே அதைச் சமைத்துப் புசித்து விடியற்காலத்தில் எழுந்து உன் கூடாரங்களுக்குத் திரும்பிப் போவாய்.

8. ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பங்களைப் புசிப்பாய். ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமாகச் சபை கூடும் திருநாளாகையால் அன்றைய தினத்தில் (விலக்கப் பட்ட) வேலை செய்யலாகாது.

9. வெள்ளாண்மையில் அரிவாளை விட்ட நாள் முதற்கொண்டு நீ ஏழு வாரங்களை எண்ணிக் கொண்டு,

10. அவைகள் முடிந்தானபின்பு உன் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமாகக் கிழமைகளென்கிற திருவிழாவைக் கொண்டாடி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்காப் போல உன் கைக்கு நேர்ந்த பொருளை அவருக்கு உற்சாகக் காணிக்கையாகப் படைக்கக் கடவாய்.

11. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திலே நீயும் உன் குமாரன் உன் குமாரத்தியும் உன் வேலைக்காரன் உன் வேலைக்காரியும், உன் ஊரினுள்ளிருக்கிற லேவியரும், உன்னுடன் வசித்திருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவைகளும் உன் தேவனாகிய கர்த்தர் சமூகத்திலே விருந்தாடிக் கொண்டு,

12. நீ எஜிப்த்திலே அடிமையாயிருந்ததை நினைத்து கற்பிக்கப்பட்ட கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக் கடவாய்.

13. நீ உன் களத்தின் பலன்களையும் உன் ஆலையின் பலன்களையும் சேர்த்தபிற்பாடு கூடாரப் பண்டிகையை ஏழு நாளளவும் கொண்டாடி,

14. உன் பண்டிகையில் நீயும் உன் குமாரன் உன் குமாரத்தியும், உன் வேலைக்காரன், உன் வேலைக்காரியும், உன் வாசல்களிலிருக்கிற லேவியனும், பரதேசியும், தாயில்லாத பிள்ளையும், விதவைகளும் அகமகிழ்ந்து விருந்தாடுவீர்கள்.

15. கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திலே உன் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமாக ஏழு நாள் திருவிழாவைக் கொண்டாடுவாய். அப்படிச் செய்வாயானால் உன் தேவனாகிய கர்த்தர் உன் நிலங்களிலும் உன் கை செய்த எல்லாக் கிரியையிலும் உன்னை ஆசீர்வதிப்பார். ஆதலால் நீ சந்துஷ்டியாய் ஜீவிப்பாய்.

16. வருஷத்தில் மூன்று விசை, அதாவது: புளிப்பில்லா அப்பப் பண்டிகையிலும், கிழமைகளின் பண்டிகையிலும், கூடாரப் பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திலே அவருடைய சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக் கடவார்கள். அவர்கள் வெறுங்கையோடு அவருடைய சந்நிதிக்கு வராமல்,

17. தேவனாகிய கர்த்தர் அருளிய ஆசீர்வாதத்திற்கு அளவாக அவனவன் தன் தன் தகுதிக்கேற்ற படி காணிக்கையைக் கொண்டுவரக் கடவான்.

18. உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கப் போகிற எல்லாப் பட்டணத்து வாசல்களிலும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும் ஏற்படுத்தக் கடவாய். அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புச் செய்யக் கடவார்கள்.

19. அவர்கள் பட்சபாதஞ் செய்யாதிருப்பார்களாக. முகத்தாட்சணியம் பண்ணாமலும் இலஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக. பரிதானங்கள் ஞானிகளுடைய கண்களைக் குருடாக்கி நீதிமான்களுடைய வாக்கியங்களையும் புரட்டி விடும்.

20. நீ ஜீவிக்கும்படியாகவும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப் போகிற தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படியாகவும், நீதியை நியாயமாகப் பின்பற்றுவாயாக.

21. உன் தேவனாகிய கர்த்தருடைய பீடத்தண்டையில் யாதொரு சோலையையும் உண்டாக்காதே. யாதொரு மரத்தையும் நடாதே.

22. உனக்குச் சுரூபத்தைச் செய்யவும் நிறுத்தவும் துணியாதே. அவ்விதமான காரியங்களை உன் தேவனாகிய கர்த்தர் வெறுக்கிறாரே.