உபாகமம் - அதிகாரம் 15

ஏழாம் வருஷத்தின் ஜூபிலியைக் குறித்து.

1. ஏழாம் வருஷத்திலே (பொது) மன்னிப்பைப் பெறுவாயாக.

2. அதின் விபரமாவது: தன் சிநேகிதனுக்கு அல்லது தன் பிறத்தியானுக்கு அல்லது தன் சகோதரனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும் அந்தக் கடனைத் தண்டாமல் விட்டு விடக் கடவான். ஏனெனில் அது கர்த்தர் ஏற்படுத்திய மன்னிப்பு வருஷம்.

3. பரதேசியிடத்திலும் அந்நியனிடத்திலும் நீ கடனைத் தண்டலாம் ஆனால் உன் ஊரான் கையிலும், உன் பந்துக்களின் கையிலும் அதைத் தண்ட உனக்கு அதிகாரமில்லை.

4. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாய் அளிக்கப் போகிற தேசத்திலே உனக்கு ஆசீர்வாதங் கிடைக்கும்படி உங்களுக்குள்ளே ஏழையும் இரந்து சாப்பிடுகிறவனும் இருக்கலாகாது.

5. ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய வாக்கியத்திற்கு நீ செவிகொடுத்து, அவர் கற்பித்ததும் இன்று நான் உனக்கு விதித்ததுமெல்லாவற்றையும் நிறைவேற்றக் கடவாய். அப்பொழுது அவர் சொல்லியபடி உன்னை ஆசீர்வதிப்பார்.

6. நீ அநேக சனங்களுக்குக் கடன்கொடுப்பாயன்றி நீ எவனிடத்திலும் கடன் வாங்காய். அநேகம் ஜாதிகளை நீ ஆளுவாயன்றி உன்னை எவனும் ஆளுவானில்லை.

7. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கவிருக்கும் தேசத்தில் உன் பட்டணத்து வாசலுக்குள்ளே வசிக்கும் உன் சகோதரர்களில் ஒருவன் எளியவனாய்ப் போனால் நீ அவன் மட்டில் உன் இருதயத்தைக் கடினப் படுத்தாமலும் உன் கையைச் சுருக்கிக் கொள்ளாமலும்,

8. அதை ஏழைக்குத் தாராளமாய்த் திறந்து அவனுடைய அவசரத்திற்கு அளவாகக் கடன்கொடுப்பாயாக.

9. அதர்மமான ஒரு நினைவு உபாயமாய் உன்னிடத்தில் புகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. அதென்னவென்றால், மன்னிப்பு வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறது. ஏழையான உன் சகோதரனுக்கு நீ கடனைக் கொடுக்காமல் மறுத்தாலோஅவன் உன்னைக் குறித்துக் கர்த்தரிடத்திலே முறையிடுவான் என்றும் அதனால் உனக்குப் பாவம் வருமென்றும் நெஞ்சிலே யோசித்ததினாலும் நீ அவனுக்குக் கடனைக் கொடுக்க மனமில்லாதபடியால் அவனுடைய அவசரத்தைக் கண்டறிந்தாலும் அறியாதவன் போல் பாசாங்கு பண்ணுவதாம். (இப்படிப்பட்ட நினைவை மனதில் வைக்காதே.)

10. அவனுக்குக் கொடுக்க வேண்டுமே. நீ கையால் செய்வதெல்லாத்திலும் எல்லாக் காலத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆசீர்வதிக்கத் தக்கதாக, நீ உன் சகோதரனுடைய நெருக்கடையில் செய்யும் உதவியை நிஷ்கபடமாய்ச் செய்யக் கடவாய்.

11. நீ வாசம் பண்ணுந் தேசத்தில் எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை. ஆகையால் உன் தேசத்திலே வறுமைப்பட்டவனும் ஏழையுமாகிய உன் சகோதரனுக்கு நீ தாராளமாய் கை திறக்க வேண்டுமென்று நான் உனக்குக் கற்பிக்கிறேன்.

12. உன் சகோதரனாகிய எபிறேய புருஷனாகிலும் எபிறேய ஸ்திரீயயன்கிலும் உனக்கு விலைப்பட்டார்களானால் அவர்கள் ஆறு வருஷம் உன்னிடத்தில் வேலை செய்த பிற்பாடு ஏழாம் வருஷத்தில் நீ அவர்களைச் சுயாதீனமாய் அனுப்பி விட வேண்டியதன்றி,

13. இப்படி சுயாதீனமாய் அனுப்பி விடும் போது அவனை வெறுமையாய் அனுப்பாமல்,

14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தளித்த உன் மந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் கொஞ்சம் எடுத்து வழிச்செலவுக்கு இனாமாகக் கொடுத்தனுப்ப வேண்டும்.

15. நீயும் எஜிப்த்து நாட்டிலே அடிமையாயிருந்தாயயன்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சித்தாரென்றும் நினைத்துக் கொள். ஆதலால் நான் இன்று இந்தக் கட்டளையை உனக்கு விதிக்கின்றேன்.

16. ஆனால் அவன் உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிக்கிறதினாலும் உன்னிடத்திலிருப்பது தனக்கு நன்றென்று உணருகிறதினாலும் உன்னை விட்டுப் போகேன் என்பானாகில்,

17. நீ ஒரு குத்தூசியை எடுத்து உன் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவனுடைய காதைக் குத்துவாய். பின்பு அவன் என்றைக்கும் உனக்கு ஊழியனாயிருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் நீ அவ்வாறே செய்வாய்.

18. உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிட்டுச் செய்யும் வேலைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கத் தக்கதாக அப்படிப்பட்டவர்களை நீ சுயாதீனமாய் அனுப்பி விட்ட பின்பு: அவர்கள் ஆறு வருஷமும் கூலி வாங்க என்ன வேலை செய்தார்களென்று அவர்களை அவமதித்து விலக்க வேண்டாம்.

19. உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆண்பாலானதெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக் கடவாய். உன்மாட்டின் தலையீற்றை வேலைக்கு வைக்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக.

20. கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்திலே வருஷந்தோறும் நீயும் உன் குடும்பத்தாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் மேற்படிகளைப் புசிக்கக் கடவாய்.

21. ஆனால் தலையீற்றுக்கு யாதொரு பழுது இருக்குமாகில் (உதாரணம்:) அது முடம் அல்லது குருடு அல்ல எதிலேயும் குரூபியாயிருந்தால், உன் தேவனாகிய கர்த்தருக்கு அதைப் பலியிட வேண்டாம்.

22. அப்படிப்பட்டதை உன் பட்டணத்தின் வாசல்களினுள்ளே வெளிமான் கலைமான்களைப் புசிப்பது போல் புசிக்கக் கடவாய். தீட்டுப் பட்டவனும் தீட்டுப் படாதவனும் அதைப் புசிக்கலாம்.

23. ஆயினும் அவற்றின் இரத்தத்தைப் புசியாமல் அதைத் தண்ணீரைப் போலத் தரையில் ஊற்றி விடக் கடவாய்.