சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 14

எருசலேமின் மீட்பு

1. (சீயோன் மாதே!) இதோ ஆண்டவருடைய நாட்கள் வரப்போகின்றன; உன் நடுவிலேயே உன் பறிபொருட்கள் பிரிக்கப்படப் போகின்றன.

2. எருசலேமோடு சமர் செய்ய சகல சாதி சனங்களையும் யாம் ஒன்றுகூட்டுவோம்; பட்டணம் பிடிபடும்; வீடுகள் தகர்க்கப்படுவன; மாதர்கள் பங்கப் படுத்தப்படுவார்கள்; நகரத்(தவரில்) பாதி பெயர்கள் சிறையாகக் கொண்டு போகப்படுவர்; மீதி பிரசை பட்டணம் பெயராது.

* 2-ம் வசனம். அந்தியோக்குஸ் படை பலசாதி சனங்களால் திரட்டப்பட்டிருந்தது.

3. ஆண்டவர் கிளம்பி, (முன்) சமராடிய நாளில் செய்தது போல் சனங்களுக்கு விரோதமாய் யுத்தஞ் செய்வர்.

4. அந்நாளில் அவர் கீழ்த்திசையதாகிய எருசலேமுக்கு நேரிட்ட ஒலீவ் தருக்கள் பர்வதத்தில் கண் பாதங்களை அமர்த்துவர்; ஒலீவ் மலையானது கீழ்ப்பாகத்தும், மேற்பாகத்தும் நடுவே விரிந்து, அகன்ற பெரும் விடர்கொள்ள, பர்வதத்தின் ஓர் பாகம் உத்திர திசையும், மறுபாகந் தட்சண திசையுமாகப் பிரிந்து சாய்வன.

5. அப்போது நீங்கள் (அவ்விடர்லய) பர்வதக் கணவாயினது அடுத்த (மலை) பரியந்தஞ் சேர்தலின், (நமது) பர்வதங்களின் கணவாயை நோக்கி ஓடுவீர்கள்; (ஆம்!) யூதா அரசனாகிய ஓசியா காலத்து பூகம்பத்தின் முன் ஒட்டமெடுத்தது போல், நீங்கள் ஒடுவீர்கள்; அப்போது எம்பிரானான ஆண்டவர் எழுந்தருளப் பரிசுத்தர் இயாவரும் அவரோடு வருவாராமே.

* 5-ம் வசனம். ஆமோஸ் 1:1.

6. அந்நாளில் வெளிச்சமிராது, குளிரும் பனி விறைப்புமிருக்கும்.

7. ஆண்டவரறிந்த நாளொன்றுளது; அஃது பகலுமன்று, இரவுமன்று. (அன்றைய) சாயங்காலம் வெளிச்சந் தோன்றும்.

8. அந்நாளில் எருசலேமினின்று ஜீவாதார சலங்கள் புறப்படுவன; அவை களில் ஓர் பாகங் கீழ்த்திசைய சமுத்திரத்திலும், மற்றோர் பாகம் மேல்திசைய கடலிலும் வீழ்வன; அவைகள் வேனிற் காலத்திலும், குளிர் காலத்திலும் ஓடிக் கொண்டிருப்பன.

* 8-ம் வசனம். ஜீவாதார சலங்கள்--கிறீஸ்துவின் போதனை.

9. ஆண்டவர் அகிலமனைத்திற்கும் அரசராயிருப்பர்; அந்நாளில் ஆண்டவர் ஏகரெனவிருப்பர்; அவர் அபிதான மொன்றே வந்திக்கப் பெற்றிருக்கும்.

10. தேயமெல்லாம் வனாந்தரங்கள் வரையிலும், (கபஹா) குன்றுதொட்டு எருசலேமின் தென் திசைய இரெம்மோன் வரையாக வசிக்கப் பெற்றிருக்கும்; (எருசலேமானது) மகிமை வாய்ந்து, தன் முந்தியவிடமதில், பெஞ்சமீன் வாயில் தொட்டு முந்திய வாயிலிருந்த ஸ்தானம் வரைக்கும் கோணங்கள் வாயில் மட்டும், அனானேயல் கோபுரந் தொட்டு, அரசர் இரச ஆலை பரியந்த முமாய் வசிக்கப்படும்.

11. அதிலே வாசஞ் செய்வார்கள். சாபமென்பதே இராது; எருசலேம் விசாரமொன்றின்றி இருக்குமாமே.

12. அப்புறம் இதோ ஆண்டவர் எருசலேமுக்கு விரோதமாய்ச் சமராடிய எல்லாச் சனங்கள்மேல் பிரயோகிக்கும் பாதனை; ஒவ்வொருவனும் நடை உடை யோடு தேகம் அழிந்து வீழ்வன்; அவன் கண்கள் தம் குழிதனிலே அழுகிப் போவன; அவன் நாவானது வாயிலேயே உலர்ந்துபோம்.

13. ஆண்டவர் அந்நாளில் அவர்கட்குள் பெருங் கலகத்தை எழுப்புவர்; ஒருவன் மற்றொருவன் கரத்தைப் பிடித்துக் கொள்வன்; (சகோதரன்) தன் உடன்பிறப்போடு கைகலப்பன்.

14. ஆனால் யூதாவும் எருசலேமுக்கு விரோதமாய் யுத்தஞ் செய்யும்; சுற்றுப் பக்கத்திய சகல பிரசைகளின் திரவியங் களாகிய பொன், வெள்ளி, ஏராளமான ஆடைகள், (பூஷணாதிகள் முதலிய வற்றை) பெருங் குவையாய்ச் சேகரிக்கப்படும்.

15. இந்நாசத்தைப் போன்றே, (அவர் கள் பாளயத்திலிருக்கும்) அசுவத்திற்கும், வேசரிக்கும், ஒட்டகத்துக்கும், கழுதைக் கும் (ஏனையவெல்லா) மிருகங்களுக்கும் படுநாசம் உண்டாகும்.

16. எருசலேமுக்கு விரோதமாய்ச் சமராடிய சமஸ்த சனங்களிலும், மீதியாய் நிற்போர் இயாவரும் வருடா வருடஞ் சேனைகளின் தேவனாகிய இராசனை ஆராதிக்கவும் (அங்கு) வருவார்கள்.

17. அப்போது குடும்பங்களில் எவனேனுஞ் சேனைகளின் தேவனான அரசரைப் பிரபூசனஞ் செய்ய எழுந்து வராதிருப்பானேல் அவனுக்கு மழை வருஷமாகாது.

18. (ஆண்டவரை ஆராதிக்க) எஜிப்த்து குடும்பங்கள் எழாமலும் வராமலும் இருப்பர்களேயாமாகில், அவர்கள் பேரிலும் (மழை வருஷ) மாகாது; ஆனால் கூடார ஆலய உற்சவங் கொண்டாட வராத எல்லாச் சனங்கள் மீதும் ஆண்டவர் பிரயோகிக்கும் அநர்த்தமே அவர்களுக்கு உண்டாகும்.

19. கூடார ஆலய உற்சவக் கொண் டாட்டத்துக்கு எழுந்து வராத எஜிப்த்தின் பாபத்திற்கும், சகல சாதிய சனங்களது தோஷத்திற்கும் அங்ஙனமே யாகும்.

20. அந்நாளில் அசுவங்களில் பூணார பூஷணாதிகள் ஆண்டவருக்கு அர்ப்பண மாகும்; தேவாலயத்தின் (நெருப்பின் மேலேத்தும்) கடாரங்கள் பீடத்து முன் னிருக்கும் பாத்திரங்கள்போல் கையாடப் படுவன.

21. எருசலேமிலும் யூதாவிலுமுள கடாரங்களெல்லாஞ் சேனைகளின ஆண்டவருக்கு ஸ்வாதீனமாவன; பலியிடுவரெல்லாம் (பலி மாமிசத்தைச்) சமைக்க அவைகளைப் பிரயோகப்படுத் துவர்; இனி சேனைகளின் ஆண்டவர் ஆலயத்தில் சாமான்களைக் கிரயமாய் விற்பான் ஒருவனுமிரான்.


சக்காரியாஸ் ஆகமம் முற்றிற்று.