ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 14

காலேபுக்குக் கொடுக்கப் பட்ட சுதந்தரத்தைக் குறித்து.

1. கானான் தேசத்திலே இஸ்றாயேலிய புத்திரர் சுதந்தரித்துக் கொண்ட நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தது யாரெனில்: ஆசாரியனான எலெயஸாரும், நூனின் குமாரன் ஜோசுவாவும், இஸ்றாயேலின் கோத்திரங்களிலுள்ள குடும்பத் தலைவருமேயாம்.

2. மோயீசன் முலியமாய்க் கர்த்தர் கற்பித்திருந்தபடி அவர்கள் திருவுளச் சீட்டுப் போட்டு ஒன்பது கோத்திரத்தாருக்கும் மனாசேயின் பாதி கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

3. ஏனெனில் மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான். லேவியருக்கோ சகோதரர்களின் நடுவே பூமிச் சுதந்தரம் ஒன்றுங் கொடுக்கப்படவில்லை.

4. ஆனால் மனாசே, எப்பிராயீம் என்னும் ஜோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த லேவியருக்குப் பதிலாகச் சுதந்தரம் பெற்றார்கள். லேவியர்கள் பூமியிலே யாதொன்றையும் பெறவில்லையயன்றாலும் குடியிருப்பதற்குப் பட்டணங்களையும் ஆடுமாடு முதலியவைகளை வளர்ப்பதற்குப் பட்டணத்தருகாமையிலுள்ள பேட்டைகளையும் பெற்றார்கள்.

5. கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்த படி இஸ்றாயேல் புத்திரர் செய்து தேசத்தைப் பங்கிட்டு வந்தார்கள்.

6. அக்காலத்திலே யூதாவின் புத்திரர் கல்கலாவிலே இருந்த ஜோசுவாவினிடத்திற்கு வந்தார்கள். கெனேசையனான எப்போனேயின் குமாரன் காலேப் அவனை நோக்கி: காதேஸ் பார்னே என்னும் இடத்தில் கர்த்தர் என்னைக் குறித்தும் உம்மைக் குறித்தும் தேவனுடைய தாசனான மோயீசனோடு சொன்ன வார்த்தையை நீர் அறிவீரன்றோ?

7. தேசத்தை வேவு பார்க்கக் கர்த்தருடைய தாசனான மோயீசன் காதேஸ் பார்னேயிலிருந்து என்னை அனுப்பினபோது எனக்கு நாற்பது வயது இருக்கும். என் இருதயத்திலுள்ளபடி யயல்லாம் நான் அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன்.

8. ஆனால் என்னோடு கூட வந்த என் சகோதரர் சனத்தின் மனதைக் கலக்கினார்கள். நானோ என் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி நடந்தேன்.

9. அந்நாளிலே மோயீசன் ஆணையிட்டு: நீ என் தேவனாகிய கர்த்தரைப் பின்சென்றாயாதலால் உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் குமாரர்களுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்குமென்று சபதங் கூறினார்.

10. அப்போது சொல்லியபடி இதோ கர்த்தர் இந்நாள் வரைக்கும் என்னை உயிரோடு வைத்துக் காத்து வந்தார். இஸ்றாயேல் வனாந்தரத்தில் அல்லாடித் திரிகையிலே கர்த்தர் அந்த வார்த்தையை மோயீசனிடத்தில் சொல்லி விட்டார். அது நடந்து நாற்பத்தைந்து வருஷமாயிற்று. இதோ நான் எண்பத்தைந்து வயதுள் ளவன்.

11. மோயீசன் என்னை வேவு பார்க்க அனுப்பின நாளில் எனக்கிருந்த பலன் இந்நாள் வரைக்கும் எனக்கிருக்கிறது. நடப்பதற்கும் யுத்தம் பண்ணுவதற்கும் எனக்கு முன்னிருந்த சக்தி இன்னுமிருக்கிறது.

12. ஆதலால் கர்த்தர் எனக்குக் கொடுப்பதாகச் சொல்லிய இந்த மலைச் சீமையை நீர் எனக்குத் தர வேண்டும். அவர் அவ்வித வார்த்தைப்பாடு கொடுத்ததற்கு நீரே சாட்சி. அந்த மலைநாட்டில் ஏனாக்கியர் குடிகளாம். அவர்களுடைய அரணிப்பான பெரிய பட்டணங்கள் அநேகமுண்டு. கர்த்தர் என்னோடிருப்பாரேயானால் அவர் சொல்லியபடி அவர்களை நான் நிர்மூலமாக்கிச் சிதைத்து விடுவேன் என்று விண்ணப்பம் பண்ணினான்.

13. அதைக் கேட்டு ஜோசுவா அவனை ஆசீர்வதித்து ஏபிரோனை அவனுக்குச் சுதந்தரமாய்க் கொடுத்தான்.

14. ஆதலால் கெனேசையனான ஜெப்போனேயின் குமாரனான காலேப் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றியபடியால் (அப்போது துவக்கி) இந்நாள் மட்டும் ஏபிரோனைச் சுதந்தரித்துக் கொண்டு வருகிறான்.

15. முன்னே ஏபிரோனுக்குக் கரியாட் அர்பே என்று பேர் இருந்தது. ஏனாக்கியருக்குள்ளே மகா புருஷனாய் மதிக்கப்பட்ட அந்த அர்பே என்பவன் அங்கே அடக்கம் பண்ணப்பட்டபடியால் அந்த மலைக்கு அந்தப் பேர் உண்டாயிற்று. அப்பொழுது யுத்தம் ஓய்ந்ததினால் அந்தத் தேசம் அமரிக்கையாய்ப் போயிற்று.