ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 13

வசப்படுத்தப்பட்ட தேசத்தை இஸ்றாயேலியருக்குப் பங்கிட வேணுமென்று ஜோசுவாவுக்குக் கர்த்தர் கற்பித்ததும்-ரூபனுக்கும் காத் புத்திரருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் முன் கொடுக்கப்பட்டிருந்த தேசத்தின் எல்லைகள் குறிக்கப் பட்டதும்.

1. ஜோசுவா வயதுள்ள கிழவனான போது கர்த்தர் அவனை நோக்கி: நீ வயது சென்றவனும் விருத்தாப்பியனுமாயிருக்கிறாய். பங்கிடப்படாமல் சும்மா கிடக்கிற தேசமோ மகா விஸ்தாரமான தேசமேயாம்.

2-3. அது யாதென்று கேட்டால் ஒருபுறத்திலே எஜிப்த்தில் ஓடும் சேறான நதி துவக்கி வடதிசை முகமாயிருக்கும் அக்கரோனின் எல்லை மட்டும்; மற்றொரு புறத்திலே காசையர், அசோத்தியர், அஸ்கலோனித்தர், கேட்டையர், அக்கரோனித்தர் என்னப்பட்ட பிலிஸ்தியரின் ஐந்து இராசாக்களின் நாடுகளாகிய கானான் தேசத்தில் அடங்கிய கலிலேயாவும், பிலிஸ்தீமும், கெசுரீம் முழுவதும்;

4. தெற்கேயோ ஏவையர் நாடும், கானான் முழு நாடும், சீதோனியருக்கடுத்த மாயாரா நாடும்; அது அப்பேக்காவும் அமோறையரின் எல்லையுமட்டும் பரவிப்போகுது.

5. அதற்கடுத்த எல்லை நாடும், ஏர்மோன் என்னும் மலைக்குத் தாழேயுள்ள பவால்காத் துவக்கி ஏமாட் மட்டும் கீழ்த்திசை முகமாயிருக்கும் லீபானின் நாடும்,

6. லீபான் முதல் மசெரேப்பொட் ஏரி மட்டும் மலையில் குடிகொண்டிருக்கிறவர்களுடைய நாடும் சிதோனியருடைய முழு நாடுமேயாம். இஸ்றாயேல் புத்திரருக்கு முன்பாக அவ்விடங்களில் இருக்கப் பட்ட சனங்களெல்லாம் நிர்மூலமாகும்படி நாமே செய்வோமாதலால் நாம் உனக்குக் கற்பித்தபடியே அவர்களுடைய தேசமெல்லாம் இஸ்றாயேலருக்குச் சுதந்தரமாக வேண்டிய தேசமாம்.

7. அப்படியிருக்க அந்தத் தேசத்தைப் பிரித்து ஒன்பது கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி கோத்திரத்திற்கும் சுதந்தரமாய்ப் பங்கிட்டுக் கொடுக்கக் கடவாய்.

8. மனாசேயின் மற்றொரு பாதி கோத்திரத்தாரோடு கூட ரூபன் புத்திரரும், காதின் புத்திரரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது. அதைக் கர்த்தரின் தாசனான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே கீழ்ப்புறத் திசையில் அவர்களுக்குக் கொடுத்தான்.

9. அர்னோன் என்னும் ஆற்றங்கரையிலிருக்கும் பள்ளத்தாக்கின் மத்தியிலே கிடக்கிற ஆரோயேரும் தீபோன் வரைக்குமுள்ள எல்லா மேதபாயயன்றழைக்கப்படும் வெளி வயல்களும்,

10. எஸ்போனிலிருந்து அம்மோனின் புத்திரருடைய எல்லை மட்டும் இராசாங்கம் பண்ணின செகோன் என்னும் அமோறைய இராசாவின் எல்லாப் பட்டணங்களும்,

11. கலாத் நாடும், ஜெசுரி, மாக்காத்தி நாடுகளும், எற்மோன் மலை முழுவதும், சாலேக்கா மட்டுமுள்ள பாசான் நாடு முழுவதும்,

12. பாசான் தேசத்தில் இருக்கும் ஓர் என்னும் அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மீதியிரானின்ற இராப்பாயீம் ஜாதியிலே பிறந்தவன். அஸ்தரோட்டிலும் எதிராயிலும் இராசாங்கம் பண்ணினவன். மோயீசன் அந்த இராப்பாயீத்தரைத் தோற்கடித்துச் சங்காரம் பண்ணியிருந்தான்.

13. அப்பொழுது இஸ்றாயேல் புத்திரர் ஜெசுரியர்களையும் மாக்காத்தியரையும் துரத்தி விடவில்லை. ஆனது பற்றி இவர்கள் இந்நாள் மட்டும் இஸ்றாயேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.

14. லேவியின் கோத்திரத்துக்கோவென்றால் மோயீசன் சுதந்தரத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில் கர்த்தர் அவனுக்குச் சொல்லியபடியே இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருக்குச் செலுத்தப் படும் பலிகளின் மிருகங்களே லேவியருக்குச் சுதந்தரமாம்.

15. ஆனது பற்றி மோயீசன் ரூபனின் கோத்திரத்தாருக்கு அவர்களுடைய வம்சங்களுக்கேற்றபடி சுதந்தரமான பூமியைக் கொடுத்தான்.

16. அவர்களுடைய எல்லைகளேதென்றால்: அர்னோன் ஆற்றங்கரையிலும், அர்னோன் பள்ளத்தாக்கும் நடுவிலும் இருக்கப் பட்ட ஆரோவர் பட்டணந் துவக்கி மேற்பாவுக்குப் போகும் வழியாகிய அந்தச் சமபூமி முழுவதுமே.

17. ஏசேபோனும் அதின் காட்டுப் புறத்திலடங்கி நின்ற சமஸ்த ஊர்களும், தீபோனும், பாமட்பாவாலும், பாவால்மோன் பட்டணமுமே.

18. யாஜா, கேடிமோட், மேப்பாட்,

19. காரியாத்தாயீன், சபமா, இரண்டு பள்ளத்தாக்கின் மலைமேல் கட்டப் பட்ட சரட்சார்,

20. பெட்பொகார், அசெதொட், பஸ்கா, பெட்ஜெசிமோட்,

21. வெளிவயலிலுள்ள எல்லாப் பட்டணங்களும், ஏசெபோனில் இராசாங்கம் பண்ணிவந்த செகோன் என்னும் அமோறைய அரசனின் இராச்சிங்களும் அவர்களுடைய எல்லைக்குள்ளாயின. அந்தச் செகோனையும் மாதியானிலிருந்த செகோனின் அதிபதிகளையும் தேசத்திலே குடிகொண்டிருந்த ஏவே, ரேக்கே, சூர், ஊர், ரேபே என்னும் செகோனின் சேனைக் கர்த்தரையும் மோயீசன் தோற்கடித்திருந்தான்.

22. அப்போது இஸ்றாயேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடு கூட பேயேரின் குமாரனாகிய பலாமென்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப் போட்டிருந்தார்கள்.

23. அப்படியே ரூபனின் புத்திரர்களுக்கு யோர்தான் நதியே எல்லையாயிற்று. அந்தத் தேசமும், அதில் அடங்கிய பட்டணங்களும், கிராமங்களும் வம்சங்களின் கிரமப்படியே ரூபனியருக்குச் சுதந்தரமாயிற்று.

24. காதின் கோத்திரத்தாருக்கு மோயீசன் அவர்களுடைய வம்சங்களின் கிரமப்படியே கொடுத்த சுதந்தரப் பங்குகள் என்னவென்றால்:

25. யாஜோரின் எல்லையும், கலாத் தேசத்தின் எல்லாப் பட்டணங்களும், அம்மோனின் சந்ததியார்களுடைய பாதி தேசமுமேயாம். அது இரபாவுக்கு எதிரேயுள்ள ஆரோயேர் மட்டும்,

26. ஏசெபோன் துவக்கி, இராமோட், மஸ்பே, பேத்தனிம் மட்டும்; மானாயிம் துவக்கித் தாபீரின் எல்லை வரைக்குமுள்ள தேசமெல்லாம் அதில் அடங்கியிருந்தது.

27. மேலும் ஏசெபோனின் அரசனாயிருந்த செகோனுடைய இராச்சியத்தின் மற்ற பங்குகளாகிய பெட்டராம், பெட்நெமரா, சொத்கொட், சாப்போன் என்னும் பள்ளத்தாக்குகளிலேயும் விரியும்; கடைசியிலே கீழ்த்திசைமுகமாய் யோர்தானுக்கு அப்புறத்திலே பரவி நின்ற கெனெரேட் கடலோரம் மட்டும் யோர்தான் அதுக்கு எல்லையாயிருக்கின்றது.

28. இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் காத் புத்திரருக்கு அவர்களுடைய வமிசங்களின் படி சுதந்தரமாய்ப் போயிற்று.

29. மனாசே புத்திரரின் பாதி கோத்திரத்துக்கும், அவர்களுடைய சந்ததியா ருக்கும், அவரவர்களின் வம்சக் கிரமப்படி மோயீசனால் கொடுக்கப்பட்ட சுதந்தரமாவது:

30. மானாயீம் துவக்கிப் பாசான் முழுவதும்; பாசானின் அரசனான ஓக் என்பவனுடைய எல்லா இராச்சியங்களும்; பாசானிலேயுள்ள ஜயீரின் எல்லாக் கிராமங்களும் ஆன அறுபது பட்டணங்களேயாம்.

31. அதுதவிர பாதி கலாதையும் பாசானிலே அஸ்தரோட், எதிராய் என்னும் ஓக் அரசனுடைய பட்டணங்களையும் மனாசேயின் குமாரனாகிய மாக்கீரின் புத்திரர் பாதி பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கொடுத்தான்.

32. கீழ்த்திசை முகமாய் எரிக்கோவுக்கு எதிராக யோர்தானுக்கு அக்கரையிலிருக்கும் மோவாபின் வெளிவயல்களில் மோயீசன் ஒரு பாகம் பிரித்து அவர்களுக்குச் சுதந்தரமாய்க் கொடுத்தான்.

33. லேவி கோத்திரத்திற்கு மோயீசன் சுதந்தரமான பூமியைக் கொடுக்கவில்லை ; ஏனெனில் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொல்லியிருந்தபடி அவரே மேற்படி கோத்திரத்தினுடைய சுதந்தரம்.