சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 12

நன்மையும் பகுத்தறிந்து செய்யவேண்டும்.

1. நீ நன்மை செய்தால் அதை யாருக்குச் செய்கிறாயென்று தெரிந்துகொள்; அப்போது உன் நற்செயல்களுக்கு அதிக நன்றி உண்டாயிருக்கும்.

2. நீதிமானுக்கு நன்மை செய், அப்போது பெரும் சம்பாவனையடைவாய்; அவனிடமிருந்து பெறாவிடினும் நிச்சயம் ஆண்டவரிடம் இருந்து அதையடைவாய்.

3. ஏனெனில் எப்போதும் தீமையில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளவனும், தர்மம் செய்யாதவனும், நன்மை எதையும் அடைவதில்லை; ஏனெனில் உன்னத கடவுள் பாவிகளை வெறுக்கிறார்; மனந்திரும்பித் தவம் செய்கிறவர்கள் மேல் இரக்கமாயிருக்கிறார்.

4. இரக்கமுள்ளவனுக்குக் கொடு; பாவியை ஆதரிக்காதே. அவபக்தியாளருக்கும், பாவிகளுக்கும் சர்வேசுரன் பழிவாங்குதலால் பதிலளிப்பார். அவர்களைப் பழிவாங்கும் நாளுக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்.

5. நல்லவனுக்குக் கொடு; பாவியை ஏற்றுக்கொள்ளாதே.

6. தாழ்ச்சியுள்ளவனுக்கு நன்மை செய்; அவபக்தியுள்ளவனுக்கு ஒன் றும் கொடாதே; அவன் உன்னிலும் அதிக பலவானாகாதபடி உன் அப்பத்தைத் தருவதை நிறுத்தி வை, அதை அவனுக்குத் தராதே.

7. ஏனெனில் நீ அவனுக்குச் செய்யும் சகல நன்மைக்கும் பிரதி பலனாக, இருமடங்கு தின்மைகளைப் பெற்றுக்கொள்வாய்; ஏனெனில், உன்னத கடவுளும் பாவிகளை வெறுக்கிறார்; பக்தியற்றவர்களை அவர் பழிவாங்குவார்.

8. உன் செல்வச் செழிப்பில் நல்ல நண்பன் அறியப்பட மாட்டான்; எதிரி உன் நிர்ப்பாக்கியத்தில் மறைந் திருக்க மாட்டான்.

9. ஒரு மனிதனின் செல்வச் செழிப்பில் அவனுடைய எதிரிகள் துக்கப்படுகிறார்கள்; ஒருவனுடைய நிர்ப்பாக்கியத்தில் நல்ல நண்பன் அறியப்படுகிறான்.

10. உன் பகையாளியை ஒருபோதும் நம்பாதே; ஏனெனில், பித்தளைக் குடத்தைப் போல் அவனுடைய துஷ்டத்தனமும் துருப்பிடிக்கிறது;

11. தன்னைத் தாழ்த்தி அவன் பதுங்கியபடி சென்றாலும், விழிப்பா யிருந்து, அவனிடம் எச்சரிக்கையா யிரு.

12. அவன் உன் இடத்திற்குத் திரும்பி, உன் ஆசனத்தைப் பிடித்துக் கொள்ளாதபடியும், இறுதியில் நீ என் வார்த்தைகளை ஒப்புக்கொண்டு, என் கூற்றுகளால் மனம் குத்துண்டு போகாதபடி, உன் அருகில் அவனை இருத்தாதே, உன் வலப் பக்கத்தில் அவன் உட்காரவும் விடாதே.

13. சர்ப்பத்தால் கடிபட்ட பாம்பாட்டியின்மீதும், மிருகங்களின் அருகில் போகும் எவன்மீதும் இரக்கங்கொள்பவன் யார்? அப்படியே, அக்கிரமியான மனிதனோடு பழகுகிறவனும், அவனுடைய பாவங் களோடு சம்பந்தப்படுவான்.

14. அவன் சிறிது நேரம் உன் னுடன் தங்குவான்; ஆனால் நீ சோர்ந்துபோகத் தொடங்கினால் அவன் சகித்துக்கொள்ள மாட்டான்.

15. பகைவன் தன் உதடுகளைக் கொண்டு இனிப்பாகப் பேசுகிறான்; ஆனால் தன் இருதயத்திலோ அவன் பதுங்கியிருந்து உன்னைக் குழியில் தள்ள வழி தேடுவான்.

16. பகையாளி தன் கண்களைக் கொண்டு அழுகிறான்; ஆனால் வாய்ப்புக் கிடைக்குமெனில், உன் இரத்தத்தைக் காணாமல் திருப்தி யடைய மாட்டான்.

17. உனக்குத் தீமைகள் நேரிடும் போது, முதலில் நீ அங்கே அவனைத் தான் காண்பாய்.

18. பகையாளியின் கண்களில் கண்ணீர் இருக்கிறது; உனக்கு உதவி செய்பவன்போல் பாசாங்கு செய்யும் போதே, உன் பாதங்களின் கீழ் அவன் குழிதோண்டுகிறான்.

19. அப்போது தன் தலையை அசைத்து, கைதட்டி, அதிகமாய் முறுமுறுத்துத் தன் முகத்தை மாற்றுவான்.