ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 12

மோயீசன் காலத்திலும் ஜோசுவா நாளிலும் இஸ்றாயேலியரால் தோற்கடிக்கப் பட்ட இராசாக்களின் பெயர் தொகுக்கப்பட்டது.

1. யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதிக்குந் திசையிலே அர்னோன் ஆறு துவங்கி ஏற்மோன் மலையுங் கிழக்கே வனாந்தரத்தை நோக்குகிற எல்லாத் தேசமும் அது வரைக்கும் உள்ள எல்லைகளுக்குள்ளே இருந்த இராசாக்களை இஸ்றாயேல் முறியடித்து அவர்களுடைய இராச்சியங்களையும் சுதந்தரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இராசாக்கள் யாரென்றால்:

2. (முதலாவது) செகோன், இவன் அமோறையருக்கு அரசன். அவனுடைய இராசதானி ஏசெபோன். அவனுடைய இராச்சியமானது (ஒரு புறத்திலே) அர்னோனென்னும் ஆற்றங்கரையில் இருந்த ஆரோயேர்ப் பட்டணந் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதி கலயாத்திலும் அம்மோன் புத்திரர்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்னும் ஆறு மட்டுமே பரவியது.

3. (மற்றொரு புறத்திலே) வனாந்தர முதல் கிழக்கேயுள்ள கெனெரோட் கடலும், பெட்சிமோட்டுக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற வனாந்தரக் கடலாகிய உப்புக் கடலும், தென்புறத்திலே அசெரோட் பாஸ்காவுக்குத் தாழேயுள்ள தேசமுமட்டும் பரம்பிக் கொண்டிருந்தது.

4. (இரண்டாவது) பாஸானின் அரசன் ஓகென்பவன். இவன் இரப்பாயீம் என்னும் சாதியான். அஸ்தரோட்டிலும் எதிராயிலும் வாசம் பண்ணுபவன். எர்மோன் மலையிலும் சலேக்காவிலும்,

5. ஜெசூரி, மாக்காத்தி, ஏசெபோனின் அரசனானசெகோனுடைய எல்லையாகிய பாதி கலயாத் மட்டும் ஆண்டு கொண்டான்.

6. அவ்விரண்டு இராசாக்களைக் கர்த்தரின் தாசனான மோயீசனும் இஸ்றாயேல் புத்திரரும், முறிய அடித்தார்கள். பிறகு மோயீசன் அவர்களுடைய தேசத்தை ரூபனியர்களுக்கும் காதியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சுதந்தரமாய்க் கொடுத்திருந்தான்.

7. யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசை முகமாயுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப் போகும் வழியாகிய மலையின் பங்கு மட்டுங் கிடக்கிற தேசத்தை ஜோசுவாவும் இஸ்றாயேல் புத்திரரும் வசப்படுத்திய பின்பு ஜோசுவா அந்தந்தக் கோத்திரங்களுக்கு அதைப் பங்கு பங்காகப் பிரித்து இஸ்றாயேலியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்து விட்டான். அந்தத் தேசத்திலேயும்,

8. அதன் மலைகளிலேயும், சமபூமிகளிலேயும், வெளிக் காடுகளிலேயும், அசெரோட்டிலேயும், வனத்திலேயும் தென்புறத்திலேயும், ஏட்டையர், அமோறையர், கானானியர், பெரேசையர், ஏவையர், ஏபுசேயர் குடியிருந்த தேசத்திலேயும் ஜோசுவாவினாலே தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் யாரென்றால்:

9. எரிக்கோவின் அரசன் ஒன்று: பேட்டலுக்குச் சமீபமான ஆயியின் அரசன் ஒன்று;

10. எருசலேமின் அரசன் ஒன்று; ஏபிரோனின் அரசன் ஒன்று;

11. ஜெரிமோட்டின் அரசன் ஒன்று; லாக்கீசின் அரசன் ஒன்று;

12. ஏகிலோனின் அரசன் ஒன்று. காஜேரின் அரசன் ஒன்று.

13. தாபீரின் அரசன் ஒன்று; காதேரின் அரசன் ஒன்று;

14. ஏர்மாவின் அரசன் ஒன்று; ஏரேத் அரசன் ஒன்று.

15. லெப்னாவின் அரசன் ஒன்று; ஓதுலாமின் அரசன் ஒன்று;

16. மசேதாவின் அரசன் ஒன்று; பேட்டலின் அரசன் ஒன்று;

17. தாபுவாவின் அரசன் ஒன்று. ஓப்பேரின் அரசன் ஒன்று.

18. ஆப்போக்கின் அரசன் ஒன்று; சாரோனின் அரசன் ஒன்று;

19. மாதொனின் அரசன் ஒன்று; ஆஜோரின் அரசன் ஒன்று.

20. செமெரோனின் அரசன் ஒன்று; ஆக்சாபின் அரசன் ஒனறு.

21. தேனாக்கின் அரசன் ஒன்று. மகெதோவின் அரசன் ஒன்று.

22. காதேசின் அரசன் ஒன்று; கர்மேலுக்கடுத்த யக்கனானின் அரசன் ஒன்று;

23. தோர் பட்டணத்தினும் தோர் என்னும் நாட்டினும் அரசன் ஒன்று; கல்கலாவின் சாதிகளுடைய அரசன் ஒன்று;

24. தேற்சாவின் அரசன் ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு அரசர்களாம்.