சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 11

ஞானத்தினால் உண்டாகும் நன்மைகள்.

1. தாழ்ச்சியுள்ளவனுடைய ஞானமானது அவன் தலையை உயர்த்தும்; பெரியோர் நடுவில் அவனை அமரச் செய்யும்.

2. ஒரு மனிதனை அவனுடைய அழகிற்காகப் புகழாதே; ஒருவனை அவனுடைய தோற்றத்திற்காக இகழாதே.

3. பறக்கிறவைகளில் தேனீ சிறிது; ஆனால் அதன் கனியானது தித்திப்பில் முதன்மையானது.

4. ஒருபோதும் உன் உடையைப் பற்றி மகிமை பாராட்டாதே; நீ மதிக்கப்படும் நாளில் மகிமை கொள்ளாதே; ஏனெனில் உன்னதக் கடவுளின் வேலைகள் மட்டுமே அற்புதமானவை, அவருடைய வேலைகள் மகிமையுள்ளவையும், இரகசியமானவையும், மறைந்தவையுமா யிருக்கின்றன.

5. கொடுங்கோலர் அனேகர் சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள்; ஒருவரும் நினையாதவன் கிரீட மணிந்தான்.

6. வலியவர்களில் அனேகர் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டார்கள்; மகிமையுள்ளவர்கள் மற்றவர்களின் கையில் ஒப்புவிக்கப்பட்டனர்.

7. விசாரிக்குமுன் எவனையும் குற்றஞ்சாட்டாதே. விசாரித்த பிறகு நீதியான முறையில் கண்டிப்பாயாக.

8. கேட்குமுன் ஒரு வார்த்தையும் பதில் சொல்லாதே; மற்றவர்கள் பேசும்போது இடைமறிக்காதே.

9. உன்னைச் சேராத காரியத்தைப் பற்றி வாதாடாதே; பாவிகளுடன் நியாயந்தீர்க்க அமராதே.

10. என் மகனே! பல காரியங்களில் தலையிடாதே; நீ செல்வந்தனாயிருந்தால், பாவத்திலிருந்து விடுபட்டிருக்க மாட்டாய்; ஏனெனில் நீ துரத்தினாலும், முந்திச் செல்ல மாட்டாய்; முந்தி ஓடினாலும், தப்ப மாட்டாய்.

11. அவபக்தியுள்ளவன் எவ்வளவு கடுமையாக உழைக்கிறானோ, எவ்வளவு துரிதப்படுகிறானோ, அவ்வளவுக்குத் துயரத்தில் இருக் கிறான், அவ்வளவுக்கு அதிக தரித் திரத்தில் இருக்கிறான்.

12. மேலும், உதவி தேடுகிற செயலற்ற ஒரு மனிதன் இருக்கிறான், திறமையில் மிக பலவீனமாகவும், தரித்திரம் நிறைந்துமிருக்கிறான்;

13. என்றாலும், சர்வேசுரனுடைய கண் தயவாய் அவனை நோக்கி, அவனுடைய தாழ்நிலையினின்று அவனைத் தூக்கி அவன் சிரசை உயர்த்தியது; அனேகர் அவனைப் பற்றி அதிசயித்து, சர்வேசுரனைப் போற்றினார்கள்.

14. நன்மையும், தின்மையும், சீவியமும், மரணமும், தரித்திரமும், ஆஸ்தியும் சர்வேசுரனிடமிருந்து உண்டாகின்றன.

15. ஞானமும், ஒழுக்கமும், கட்ட ளைகள் பற்றிய அறிவும் சர்வேசுரனோடு இருக்கின்றன; நேசமும் நற்காரியங்களுக்குரிய வழிகளும் அவரோடு இருக்கின்றன.

16. தப்பறையும் இருளும் பாவி களோடு உண்டாக்கப்படுகின்றன; ஏனெனில் தீயவற்றில் மகிமை கொள் பவர்கள், தீமையில் முதிர்ச்சியடை வார்கள்.

17. சர்வேசுரனுடைய கொடை நீதிமான்களோடு நிலைத்திருக்கிறது; அவனுடைய முன்னேற்றம் நித்தியத் திற்கும் வெற்றியைக் கொண் டிருக்கும்.

18. மட்டாய்ச் செலவிடுவதினால் வளமாக்கப்படும் காரியம் ஒன்று உண்டு. இதுவே அவனுடைய சம்பாவனையின் பங்காகும்.

19. நான் எனக்கு இளைப்பாற்றி யைக் கண்டடைந்தேன்; இப்போது என் உடைமைகளை நான் தனியாகப் புசிப்பேன் என்று இதில் அவன் சொல்கிறான்.

20. காலங் கடந்து போமென்றும், மரணம் நெருங்கி வருமென்றும், அப்போது மற்றர்களுக்குச் சகலத் தையும் விட்டுவிட்டுப் புறப்பட வேண்டுமென்றும், சாக வேண்டு மென்றும் அவன் அறிவதில்லை.

21. உன் உடன்படிக்கையில் நிலைத்திரு; அதைப்பற்றியே உரை யாடு; உன் கட்டளைகளின் வேலையில் முதிர்ச்சியடைவாயாக.

22. பாவிகளுடைய செயல்களில் தங்கியிராதே; சர்வேசுரன் மட்டில் உன் நம்பிக்கையை வைத்து உன் இடத்தில் தங்கியிரு.

23. ஏனெனில், தரித்திரனை ஒரே கணத்தில் செல்வந்தனாக்குவது சர்வேசுரனுடைய கண்களில் எளிதான காரியமாயிருக்கின்றது.

24. சர்வேசுரனுடைய ஆசீர்வாதம் நீதிமானுக்கு சம்பாவனையளிக்கத் துரிதப்படுகிறது. மிக விரைவாக அவருடைய ஆசீர்வாதம் பலன் தருகிறது.

25. எனக்கென்ன தேவை இருக் கிறது, இதினின்று எனக்கு என்ன நன்மை உண்டாகும் என்று சொல்லாதே.

26. எனக்கு நானே போதுமானவன், இதனால் எனக்கென்ன அதிக மோசம் வந்து விடும் என்று சொல்லாதே.

27. நற்காரியங்களின் நாளில் தீமைகளை நினைக்காமல் இருந்து விடாதே, தீமைகளின் நாளில் நற்காரியங்களைப் பற்றி நினைக் காமல் இருந்து விடாதே.

28. ஏனெனில் ஒவ்வொருவனுக் கும் அவன் செய்கைகளுக்குத் தகுந்த படி, அவனுடைய மரண நாளில் அவனுக்குச் சம்பாவனையளிப்பது சர்வேசுரனுக்கு எளிதான காரியமே.

29. ஒரு மணி நேரத் துன்பம் பெரிய இன்பங்களை மறக்கச் செய்கிறது. மனிதனுடைய மரண நேரத்தில் அவன் செய்கைகள் யாவும் வெளிப்படுத்தப்படும்.

30. ஒருவன் சாவதற்கு முந்தியே அவனைப் புகழாதே; ஏனெனில் தன் பிள்ளைகளால் அவன் அறியப் படுகிறான்.

31. எல்லோரையுமே உன் வீட்டிற் குள் அழைத்துப் போகாதே; ஏனெனில் வஞ்சகனிடம் கண்ணிகள் அநேகமுண்டு.

32. கெட்டுப்போன குடல் சுவாசத் தைத் துர்நாற்றமுள்ளதாக ஆக்குவது போலவும், கவுதாரி கூண்டுக்குள் கொண்டுவரப்படுவது போலவும், மான்குட்டி வலையில் அகப்படுவது போலவும், ஆங்காரிகளுடைய இருதயமுமிருக்கின்றது. அது தன் அயலானின் வீழ்ச்சியைக் காண்கிற ஒற்றனைப் போலிருக்கிறது.

33. ஏனெனில், அவன் பதுங்கி யிருந்து, நன்மையைத் தின்மையாக மாற்றுகிறான்; தெரிந்துகொள்ளப் பட்டவர்களின்மீது அவன் ஒரு கறையை ஏற்படுத்துவான்.

34. ஒரே தீப்பொறியினின்று பெரு நெருப்புண்டாகும்; ஒரு வஞ்சகனால் அதிக ரத்தம் சிந்தப்படும்; பாவியான மனிதன் இரத்தத்திற்காகப் பதிவிருக் கிறான்.

35. தீமை விளைவிக்கக்கூடிய மனிதனிடத்தில் சாக்கிரதையாயிரு; ஏனெனில், அவன் தீமைகளைச் செய் கிறான்; அவன் உன்மீது என்றென் றைக்குமாக கண்டனத்தை வருவிக் காதபடி எச்சரிக்கையாயிரு.

36. அந்நியனுக்கு நீ இடங் கொடுத்தாலோ சுழற்காற்றைக் கொண்டு உன்னை வீசியெறிந்து, உனக்குச் சொந்தமானவர்களுக்கும் உன்னை அந்நியானாக்குவான்.