ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 11

ஜோசுவா யாபின் அரசனையும் அவனோடு கூடிய பற்பல அரசர்களையும் முறிய அடித்ததும்--ஆசோர்ப் பட்டணத்தைப் பிடித்துக் கொளுத்திக் கர்த்தரின் கட்டளைகளையயல்லாம் அனுசரித்ததும்--ஏனாக்கியரை நிக்கிரகம் பண்ணினதும்.

1. ஆசோரிலிருந்த இராசாவாகிய யாபின் அவையயல்லாங் கேள்விப்பட்ட போது மாதோனின் அரசனான ஜொபாபுக்கும், செமெரோனின் அரசனுக்கும் அக்சாபின் அரசனுக்கும்,

2. வடக்கேயிருக்கிற மலைகளிலும் செனெரோட்டுக்குத் தென் தேசத்துச் சமபூமி நாட்டிலும் கடற்புறத்துத் தோரென்னும் நாட்டிலுமிருந்த அரசர்களுக்கும்,

3. கிழக்கும் மேற்கும் குடிகொண்டிருந்த கானானையர் இடத்துக்கும், மலை நாட்டிலிருக்கும் அமோறையர், ஏட்டையர், பெரேசையர், எபுசேயரிடத்துக்கும், மாஸ்பா தேசத்திலுள்ள எற்மோன் மலையின் அடியிலே குடிகொண்டிருக்கும் ஏவையரிடத்திற்கும் ஆட்களை அனுப்பினான்.

4-5. அவர்களெல்லோரும் தங்கள் தேசத்தை விட்டுக் கடற்கரை மணலைப் போன்ற ஏராளமான சனமாகிய கணக்கற்ற சேனைகளோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.

6. அப்பொழுது கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். நாளை இந்நேரத்திலே நாம் அவர்களையயல்லாம் இஸ்றாயேலியர் முன்பாக வெட்டுண்டு போகும்படி காட்டிக் கொடுப்போம். நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய இரதங்களைச் சுட்டெரிக்கக் கடவாய் என்றார்.

7. ஜோசுவாவும் அவனோடு கூடச் சமஸ்த போர்வீரர்களும் மேரோம் என்னும் ஏரி ஸ்தலத்திற்குத் திடீரென வந்து அவர்கள் மேல் விழுந்தார்கள்.

8. கர்த்தர் இஸ்றாயேலின் கையிலே அவர்களை ஒப்புக்கொடுத்தார். இஸ்றாயேலியர் அவர்ளை முறிய அடித்து பெரிய சிதோன் மட்டும் மசெரெப்போட் என்னும் ஏரி மட்டும் இதன் கீழ்ப்புறத்திலிருந்த மஸ்பே வெளி மட்டும் (ஆகிய மூன்று வழியாய்) அவர்களைத் துரத்தினர். ஜோசுவா அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடிக்கு எல்லோரையுமே வெட்டிப் போட்டான்.

9. அவன் கர்த்தரின் கட்டளைப்படி செய்து குதிரைகளின் கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டான்.

10. பிறகு சட்டெனத் திரும்பி ஆசோர் பட்டணத்தைப் பிடித்து அதன் அரசனைப் பட்டயத்தினால் வெட்டிப் போட்டான். ஆசோர் பூர்வீகமாய் அந்த இராச்சியங்களுக்கெல்லாம் முதன்மையான பட்டணமாம்.

11. அதிலிருந்த எல்லா ஜீவன்களையும் பட்டயக் கருக்கினால் வெட்டிப் போட்டான். மீதியானது ஒன்றுமில்லையயன்று கண்டோர் சொல்லும்படி ஒருவரையும் உயிரோடிருக்கவொட்டாமல் யாவற்றையும் அழித்துச் சங்காரம் பண்ணிப் பட்டணத்தையும் தீப்போட்டுச் சுடுகாடாக்கினான்.

12. சுற்றுப் புறத்திலுமுள்ள சமஸ்த நகரங்களையும் அவைகளுடைய இராசாக்களையும் அவன் பிடித்துக் கர்த்தருடைய தாசனான மோயீசன் தனக்குக் கட்டளையிட்டிருந்த படியே சங்காரம் பண்ணி அழித்தான்.

13. இப்படியயல்லாம் பாழாக்கினாலும் குன்றுகளிலும் மேடுகளிலும் இருந்த பட்டணங்களை இஸ்றாயேலியர் சுட்டெரித்துப் போடாமல் காப்பாற்றி வைத்தார்கள். மகா உறுதியாய் அரணிக்கப் பட்ட ஆசோர் (பட்டணத்தை) மாத்திரந் தீப்போட்டு அழித்து விட்டார்கள்.

14. அந்தப் பட்டணங்களிலுள்ள எல்லா மனுஷரையுங் கொன்று போட்ட பின்பு கொள்ளைப் பொருட்களையும் மிருக ஜீவன்களையும் இஸ்றாயேல் புத்திரர் தங்களுக்கென்று பங்கிட்டுக் கொண்டார்கள்.

15. கர்த்தர் தமது தாசனாகிய மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியே மோயீசனும் ஜோசுவாவுககுக் கட்டளையிட்டிருந்தான். ஜோசுவா அந்தப் படியயல்லாம் நிறைவேற்றி வந்தான். கர்த்தர் மோயீசனுக்குச் சொன்னவைகளிலும் கற்பித்தவைகளிலும் ஜோசுவா ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.

16. அந்தப் பிரகாரமாய் அவன் நடந்து தென்புறத்துத் தேசத்தையும், மலைகள் நிறைந்த தேசத்தையும், கோசன் என்னும் தேசத்தையும், சமவெளிகளையும், மேற்கிலுள்ள கடலோரத்துத் தேசத்தையும், இஸ்றாயேல் பர்வதத்தையும் அதனடிவாரத்தில் உள்ள வெளிக் காடுகளையும், 

17. லிபானின் வெளிக்காட்டு வழியாகச் செயீர் துவக்கி எற்மோன் மலையடியில் இருந்த பாகால்காத் மட்டுமுள்ள மலைகள் செறிந்த நாட்டின் ஒரு பங்கையும் பிடித்து அடித்துப் பாழாக்கினான்.

18. ஜோசுவா நெடுநாளாய் இந்த இராசாக்களோடு யுத்தம் பண்ணி வந்தான்.

19. கபாவோன் (பட்டணத்தில்) குடிகொண்டிருந்த ஏவையரைத் தவிர வேறெந்தப் பட்டணமும் வலிய இஸ்றாயேலியர் கையில் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. மற்றெல்லாப் பட்டணங்களையும் அவர்கள் யுத்தம் பண்ணித்தான் பிடித்தார்கள்.

20. ஏனெனில் அந்த ஊரார் கடின மனதுள்ளவர்களாகி இஸ்றாயேலுக்கு விரோதம் பண்ண வேணுமென்றும், அதனால் அவர்கள் தோற்றுப் போனபின்பு இரக்கத்துக்கு அபாத்திரவான்களாய் இருக்க வேணுமென்றும், ஆனது பற்றிக் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்த பிரகாரமாய் அவர்கள் நிர்மூலமாக வேணுமென்றுங் கர்த்தர் திருவுளமுள்ளவராய் இருந்தாராம்.

21. அக்காலத்தில் ஜோசுவா போய் ஏனாக் புத்திரரைச் சங்காரம் பண்ணினான். அவர்கள் ஏபிரோனின் மலைகளிலும், தாபீரின் மலைகளிலும், ஆபினான் மலைகளிலும், யூதாவின் மலைகளிலும், இஸ்றாயேலின் மலைகளிலுமே குடிகொண்டிருந்தார்கள். அவன் அவர்களுடைய பட்டணங்களை நிக்கிரகித்து,

22. இஸ்றாயேலிய புத்திரரின் தேசத்திலே ஏனாக்கியரில் ஒருவருமுதலாய் உயிராயிருக்கவொட்டவில்லை. ஆனாலும் காஜா, கேட், அஜோத் என்னும் பட்டணங்களிலிருந்த ஏனாக்கியரை அவன் சங்காரம்பண்ணவில்லை. அங்கு மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.

23. அவ்விதமே கர்த்தர் மோயீசனிடத்தில் கற்பித்திருந்தபடியே ஜோசுவா தேசம் அனைத்தையும் பிடித்து அதை அந்தக் கோத்திரத்திற்கு அமைந்த பங்குகளின்படியே இஸ்றாயேலியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். அப்பொழுது யுத்தம் ஓய்ந்ததினாலே தேசம் அமரிக்கையாய் இருந்து விட்டதாம்.