உபாகமம் - அதிகாரம் 10

தேவன் நியாயப் பிரமாணத்தின் இரண்டு பலகைகளையும் மீண்டுங் கொடுத்ததும்-லேவியர்களைத் தெரிந்து கொண்டதும்-மோயீசன் கீழ்ப்படிதலுக்கடுத்த புத்திமதிகளை இஸ்றாயேலியருக்குச் சொன்னதும்.

1. அக்காலத்தில் கர்த்தர் என்னை நோக்கி: முந்தினவைகளைப் போல உனக்கு இரண்டு கற்பலகைகளைச் சீவிக் கொண்டு மலையில் நம்மிடம் ஏறி வருவாய். ஒரு மரப் பெட்டகத்தையும் செய்வாயாக.

2. நீ முன் உடைத்துப்போட்ட பலகைகளில் எழுதியிருந்த வார்த்தைகளை நாம் இந்தப் பலகைகளிலும் எழுதுவோம். நீ அவைகளைப் பெட்டகத்திலே வைப்பாய் என்றார்.

3. அப்படியே நான் சேத்தீம் மரங்களால் ஒரு பெட்டகத்தைச் செய்து, முந்தினவைகளின் வடிவாக இரண்டு பலகைகளை வெட்டிச் சீவி அவைகளை என் கையில் ஏந்தினவனாய் மலையில் ஏறினேன்.

4. முன்னே சனங்களின் சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினி நடுவில் நின்று உங்களுக்குத் திருவாக்கருளிய பத்து வார்த்தைகளையும் அவர் முன் எழுதிய பிரகாரமே இந்தப் பலகைகளிலும் எழுதி அவைகளை என்னிடத்தில் தந்தாரே.

5. அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கி நான் செய்திருந்த பெட்டகத்திலே பலகைகளை வைத்துக் கொண்டேன். கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி அவைகள் இன்னும் அதிலே இருக்கின்றன.

6. அதன்பின் இஸ்றாயேல் புத்திரர் ஜக்கான் புத்திரரைச் சேர்ந்த பெரோத்திலிருந்து பாளையம் வாங்கிப் போட்டு மோசராவுக்கு வந்தார்கள். அங்கே ஆரோனும் இறந்து அடக்கம் பண்ணப் பட்டான். அவன் குமாரனாகிய எலெயஸாரும் அவனுக்குப் பதிலாகப் பிரதான ஆசாரியனானான்.

7. அங்கேயிருந்து புறப்பட்டுக் காற்காதுக்கும் காற்காதிலிருந்து ஆறுகளும் வெள்ளங்களுமுள்ள நாடாகிய ஜெத்தெபத்தாவுக்கும் பாளையமிறங்கினர்.

8. அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுமப்பதற்கும், இந்நாள் வரைக்கும் நடந்து வருகிறது போலக் கர்த்தருடைய சந்நிதியில் நின்று அலுவலைச் செய்வதற்கும், அவருடைய நாமத்தை ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்துக் கொண்டார்.

9. அம்முகாந்திரத்தைப் பற்றி லேவிக்கு அவன் சகோதரர்களோடு பங்குமில்லை, சுதந்தரமுமில்லை. ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.

10. நானோ முன்போல் நாற்பது நாளும் இராப்பகல் மலையிலே இருந்தேன். கர்த்தரோ அந்த முறையிலும் என் மன்றாட் டைக் கேட்டருளி உன்னை அழிக்காமல் விட்டார்.

11. அவர் என்னை நோக்கி: நாம் ஜனங்களுக்கு அளிப்போமென்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படியான நீ போய்ச் சனத்துக்கு முன்பாகச் செல்லுவாய் என எனக்குத் திருவுளம்பற்றினார்.

12. இப்பொழுது இஸ்றாயேலே! நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருடைய மார்க்கத்தில் ஒழுகி, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத்தோடும் அவரைச் சேவித்து,

13. உனக்கு நன்றாகும் பொருட்டு, நான் இன்று உனக்குக் கற்பிக்கின்ற கர்த்தருடைய கற்பனைகளையும், ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு காக்க வேண்டுமென்பதையே அல்லது உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் வேறு என்னத்தைக் கேட்கிறார்?

14. இதோ வானமும் வானாதி வானங்களும் பூமியும் இதிலடங்கிய சமஸ்தமும் உன் தேவனாகிய கர்த்தருக்கு உடைத்தானவைகளே!

15. ஆயினும் கர்த்தர் உன் பிதாக்களோடு ஒன்றித்து அவர்களை நேசித்தமையால் அவர்களுடைய சந்தானமாகிய உங்களைச் சகல சனக் கூட்டங்களுக்குள்ளே தெரிந்து கொண்டருளினார்! இது இந்நாளிலே எண்பிக்கப் பட்டதல்லோ?

16. ஆகையால் நீங்கள் உங்கள் இருதயத்தின் மிஞ்சின (ஆசையயன்னும்) நுனித்தோவை விருத்தசேதனம் பண்ணி உங்கள் சிரசை இனி கடினப் படுத்தாதீர்கள்.

17. ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தானே தேவாதி தேவரும் கர்த்தாதி கர்த்தரும் மகத்துவரும் வல்லவரும் பயங்கரமான தேவனுமாயிருக்கிறார்.  அவர் பட்ச பாதம் பண்ணுகிறவரல்ல, பரிதானங்களை வாங்குகிறவருமல்ல.

18. அவர் அநாதப் பிள்ளைக்கும் விதவைக்கும் நீதி நியாயஞ் செய்தவரும் பரதேசியை நேசித்து அவனுக்கு அன்னவஸ்திரந் தந்தருளுகிறவருமாயிருக்கிறார்.

19. நீங்களுமல்லோ எஜிப்த்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்கள். ஆகையால் பரதேசிகளை நேசியுங்கள்.

20. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரையே சேவித்து, அவரோடு ஒன்றித்திருந்து அவருடைய நாமத்தைக் கைக்கொண்டு ஆணையிடுவாயாக.

21. உன் புகழும் அவரே, உன் தேவனும் அவரே, உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான விஷயங்களை நடத்தினவரும் அவரே.

22. உன் பிதாக்கள் எழுபது ஆத்துமாக்களாய் எஜிப்த்துக்குப் போனார்கள். ஆனால் இதோ தேவனாகிய கர்த்தர் வான நட்சத்திரங்களைப் போல உன்னை விருத்திக்கச் செய்தருளினார்.