அபாக்கூக் ஆகமம் - அதிகாரம் - 1

கல்தேயரின் படையெடுப்பு.

1. அபாக்கூக் எனும் தீர்க்கவசனர் கண்ட நிற்பந்தக் காட்சி.

2. ஆண்டவரே! எத்தனை காலந் தான் யான் உம்மை நோக்கி அபயமிட, நீரும் செவிகொடாதிருப்பீர்; (எவ்வளவு காலம்) என் பாதனையில் உம்மை நோக்கி யான் ஓலமிட, என்னை நீர் இரட்சியாதிருப்பீர்?

3. என் கண் முன்பாகப் பாபத் தையும், தீமையையும், பலாத்காரத் தையும், அநியாயத்தையும் யான் பார்க்கும்படி தேவரீர் செய்ததென்ன? வழக்குக்குத் தீர்ப்பளிக்க, நீதியதிபன் விருத்துவம் யோசிக்கின்றனனே.

4. அதினால் (அன்றோ) சட்டங் கிழிபடுகிறது; நீதி கோரிக்கை நிறை வேறுகிறதில்லை; ஏனெனில், அக்கிரமி நீதிமானை மேற்கொள்ளுகின்றனன்; தீர்ப்புகளும் அநீதமாகின்றன.

5. கண்களை ஏறெடுத்து (வரும்) சனங்களைப் பாருங்கள்; ஆச்சரியப் படுங்கள், பிரமை கொள்ளுங்கள்; உங்கள் நாட்களின் அதிசயம் ஒன்றுண் டாகப் போகிறது; அதனைச் சொல்லக் கேட்டால், ஒருவனும் நம்பான்.

* 5-ம் வசனம்: அப். நட. 13:41.

6. ஏனெனில், இதோ கொடுமையுள் ளதும், தீவிரமுள்ளதும், பிறர் மனை களை அபகரிக்கப் பூமி பரப்பின்கண் திரிகிறதுமான கல்தேயர் சனத்தை நாம் கிளப்புவோம்.

7. அது கோரமுள்ளதும் பயங்கரத் துக்குரியதுமானது. சித்தமே பிரமாணமென அது (ஐயமின்றி) சங்காரத்தை நடத்தும்.

8. அதின் அசுவங்கள் வேங்கையைப் போல் இலகுவானவை; மாலைப் பொழுதிய கரடிகள் போல் தீவிரமுடை யன் அதின் துரகபதாதி எங்கும் பரம்பும்; குதிரை வீரர் தூர துலையிலிருந்தும் வந்து (கழுகென) தம் வேட்டை மீது பாய்வர்.

9. யாவரும் நெருப்புக் காற்றைப் போன்ற முகமுடையராய்ப் பறிபொருள் மீது ஓடிவருவர்; கடற்கரை மணல் போல் கணக்கற்ற (மனிதரைக்) கைது செய்வர்.

10. (அதின் வேந்தனே, ஏனைய) அரசர் பேரில் செயங்கொள்வன்; கொடுங்கோலரசரைப் பார்த்துக் கேலி செய்வன்; (வலுவுடைய) அரணிப் பெல்லாம் (பார்த்து) நகைப்பன்; மண் மேடெழுப்பி அதையும் பிடித்துக் கொள்வன்.

11. அப்போது (நபுக்கோதனசாரின்) புத்தியானது மாற்றமடையும்; அவன் கொஞ்சந்தூரம் போய் வீழ்வன்; தன் பலன் தன் தேவன் அநுக்கிரகத்தால் உண்டானதென (நம்பினான்.)

* 11-ம் வசனம்: புத்தியானது மாற்றமடையும்--இறுமாப்பு அடைவான்.

12. ஆண்டவரே! நீரன்றோ தொன்று தொட்டு எங்கள் தேவனாகவும், எங்கள் பரிசுத்தராகவுமிருந்து எங்களை மரணத் தினின்று காக்கிறவர்; தேவரீர் உமது தீர்ப்பை (எங்கள் பேரில் நிறைவேற்ற) அவ்வரசனை ஏற்படுத்தி, (எங்களைத் தண்டிக்கும் பொருட்டு) அவனைப் பலப்படுத்தினீர்.

13. ஏனெனில், உமது கண்கள் தின்மையைப் பாரா பரிசுத்த (நேத்திரங்களா)யிருக்கின்றன, நீர் அகிர்த்தியத் தைப் பார்க்கச் சகியாதவராயிருக்கின்றீர்; (நிற்க, எங்களுக்கு) அதிக்கிரமங்களை நடத்துவோர் பேரில் நீர் சாந்தமா யிருப்பதென்ன; தன்னை விட நீதிமானா யிருப்பானைப் பட்சிக்கும் அக்கிரமியின் முன் நீர் மோனஞ் சாதிப்பதென்னே.

14. சமுத்திர மச்சங்களைப் போலும், பாதுகாவலனில்லா சலசரங்களைப் போலும் மானிடரை விட்டதென்னே.

15. அவன் (சிலரைத்) தன் தூண்டிலால் பிடிப்பான்; (சிலரைத்) தன் வலையால் அரிப்பன்; (பலரைத்) தன் கண்ணியால் கவருவன்; (இதைக் குறித்துச்) சந்தோ­ம் பூரித்து நிர்த்தனஞ் செய்வன்.

16. ஆதலின் தன் வலைக்குப் பலி நிவேதனமும், தன் கண்ணிக்குப் பூஜா நமஸ்காரமும் புரிவன்; ஏனெனில், அவை களால் அவனுக்கு இராச்சியம் பெருகியது; உருசிகர பட்சணங் கிடைத்தது.

17. ஆனது நிமித்தமே, அவன் தன் வலையை விரித்தே வைத்திருக்கின்ற னன்; என்றுஞ் சனங்களைக் கொலை செய்யப் பால்மாறாதிருக் கின்றனன்.