ஓசே ஆகமம் - அதிகாரம் - 09

இஸ்றாயேலில் கருப்புண்டாக வாசிகள் அந்நிய தேசத்திற்கு ஏக வேண்டியதாகும்.

1. இஸ்றாயேலே! நீ ஆண்டவரை விலகிச் சோரம் போனதினாலும், அவ்வேசைத்தனத்துக்குக் கைம்மாறாக மிகுதியான கோதும்பைக்கு எல்லாப் (பொய்த் தேவர்) பீடங்கண்மீது நம்பிக்கைக் கொண்டிருத்தல் பற்றியும் நீ பூரித்துப் போகாதே, மற்றப் பிரசைகளைப் போல் தாண்டவம் போடாதே.

* 1-ம் வசனம். விக்கிரக ஆராதனைக்காரர் புது தானியத்தை விக்கிரகப் பீடத்தின் மீது வைத்து நன்றியாகச் சந்தோஷங் கொண்டாடுவது சகஜம்.

2. ஏனெனில், போரடிகளமும், இரசம் பிழி யந்திரமும் அவர்களைப் போஷிக்கமாட்டா; கொடிமுந்திரிகையும் அவர்களை ஏய்த்துவிடும்.

* 2-ம் வசனம். ஆண்டவர் இஸ்றாயேலைப் போஜன பானாதிகட்கு ஏதுவில்லாமல் வருத்துவர்.

3. அவர்கள் ஆண்டவரின் தேசமதில் வசிக்கமாட்டார்கள்; எப்பிராயீமோரில் ஒரு பாகந் தப்பித்து எஜிப்த்தில் சேரும்; மற்றதுவோ அசீரியரோடு தீட்டான மாமிசம் புசிக்கும்.

* 3-ம் வசனம். எப்பிராயீம் கோத்திரத்தவரில் கொஞ்சம் பெயர்கள் அசீரியருக்குத் தப்பித்து, எஜிப்த்துக்கு ஓடி சரணடைவார்கள்; மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

4. ஆண்டவருக்கு இனி இரச நிவேதனஞ் செய்யமாட்டார்கள்; (செய்யினும்) அவருக்குப் பிரியமாயிராது; அவர்களுடைய பலிகள் துக்க வீட்டு அப்பம் போலாம்; அதைப் புசிப்பாரெல்லோருந் தீட்டுடையவராவர்; அவர்கள் அப்பம் அவர்கட்கேயாகும்; அது ஆண்டவர் ஆலயத்தில் படைக்கப்படாது.

* 4-ம் வசனம். தங்களுக்கே அப்பமில்லாது வருந்துகையில், ஆண்டவருக்கு எங்ஙனம் நிவேதனஞ் செய்யப்போகிறார்கள்.

5. நிற்க, பண்டிகை நாளிலே, ஆண்டவருடைய உற்சவ ஞான்றிலே என் செய்யப் போகின்றீர்கள்.

6. இதோ அவர்கள் (தேச) சங்காரத்தினின்று ஓட்டம் பிடிக்கின்றார்கள்; எஜிப்த்திலே சேருவார்கள்; மேம்பீசில் அடக்கமாகின்றார்கள்; திரண்ட பணம் பிடித்த அவர்களுடைய அலங்கார மாளிகைகளில் காஞ்சொறிகள் மண்டிப் போவன் முட்செடிகள் அவர்கள் வீட்டின் மீது வளருவன.

7. (ஆண்டவருடைய) பழி நாட்கள் வந்தன; தண்டனை நாட்கள் உதித்தன; இஸ்றாயேலே! உன் பெருந்தொகையதாகிய அக்கிரமத்தைப்பற்றியும், மித மிஞ்சிய மதிகேட்டைப்பற்றியும், உன் தீர்க்கவசனர் கசமடையராகவும், உன் ஞானாநுஷ்டிகள் அறிவீனர்களாகவும் ஆயினரென உணரக்கடவை.

8. எப்பிராயீமில் (விளங்கும்) தீர்க்கத் தரிசி எம்பிரானுக்கு முகதாவில் சத்தியத் திற்குக் காவல் சேவகனாய் இருக்க வேண்டியதாயிருந்தது; (அங்ஙனமின்றி) அவனே அவர்கள் பாதைகளிலெல்லாம் நாச வலையாகவும், அவர்களின் தேவன் ஆலயத்துள் மதியீனமாகவும் ஆயினன்.

* 8-ம் வசனம். ஆண்டவரைக் கைவிட்டு விக்கிரகங்கள்மேல் வெகு பக்தி வைத்து, அவ்விக்கிரக ஆராதனையில் தவச தானியங்களும், நல்ல இளைப்பாற்றிச் சமாதானமுங் கிடைக்குமென மனப் பால் குடித்திருந்த இஸ்றாயேல், தன் எண்ணத்துக்கு மாறாகப் பசி பாதனையையும், தேசாநதிரத்தையுந்தான் அடையுமெனவும், அதின் தீர்க்கத்தரிசிகள் நிட்சயப் பாதையைக் காட்டவேண்டியிருக்க, அவர்கள் மோசக்காரராகிப் பாதாளத்தில் விழும்படி செய்தனர்களெனவுங் கூறப்பட்டிருக்கின்றது.

9. முன் கபாஹாவில் நடந்தது போல், அவர்கள் கனமான பாபங்களைக் கட்டிக் கொண்டார்கள்; அவர்கள் அக்கிர மத்தை ஆண்டவர் நினைவுகொண்டு அவர்கள் பாபங்களுக்குப் பழிவாங்குவர்.

* 9-ம் வசனம். நியாயாதிபதிகள் ஆகமம், 19:20-ல் சொல்லப்பட்டுள்ள சரித்திரத்தைப் பார்க்கவும்.

10. கானகத்திய (நூதன) கொடிமுந்திரிக் குலைபோல் இஸ்றாயேல் பேரில் ஆவல் கொண்டோம்; அவர்கள் பிதாக்களை அத்தி மரத்திய நுனி கிளைப் புது கனிபோல் பாவித்தோம்; அவர்களோ பெல்பெகோர் விக்கிரக ஆராதனையில் புகுந்தனர்; தங்களுக்கே வெட்கக் கேடாக நமக்கு அந்நியராகி, அவர்கள் நேசித்தவைகளைப்போல் அடாத கன்னிகளாய் ஆனார்கள்.

* 10-ம் வசனம். காட்டில் தாக வேட்கையில் களைத்தவனுக்கு ஒரு முந்திரிகைக் குலையகப்பட்டால் எங்ஙனமோ, அங்ஙனமாக இஸ்றாயேல்மீது இன்புற்றிருந்தனராம் ஆண்டவர்.

11. எப்பிராயீம் மகிமையானது பறவை போல் பறந்துவிட்டது; அதின் பிள்ளைகள் பிறப்பிலும், கருப்பத்திலும், உற்பவத்திலும் மாண்டார்கள்.

12. அவர்கள் மக்களை ஈன்றெடுத் தாலும், அவர்களை மனிதர் நடுவில் தோன்றாதவர்களாய் ஆக்கிவிடுவோம்; நாம் அவர்களை விட்டு அகலுங்கால் அவர்களுக்கு ஐயோ கேடாம்.

13. எப்பிராயீம் (வேறொரு) தீர் நகரைப்போல் பலமுடைத்தானதாயும், வனப்பு பொருந்தியதாயும் இருக்கக் கண்டோம்; ஆனால் எப்பிராயீம் தன் மக்களைக் கொலை புரிவானிடங் கூட்டிப் போகும்.

* 13-ம் வசனம். சகல சம்பத்துங் கொண்ட எப்பிராயீம், தனக்கு வந்த வாழ்வெல்லாம் ஆண்டவராலேயே என்று உணராமல், தன் பலத்தின்மீது நம்பிக்கை வைத்து, தன் பிள்ளைகளைச் சண்டைக்குக் கொண்டுபோக, அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது கருத்து.

14. ஆண்டவரே! அவர்கட்கு அநுக்கிரகஞ் செய்யும்; எதை அவர்கட்கு அநுக் கிரகிப்பீர்; கற்பந் தராத மடியையும், பாலூறாத் தனங்களையும் அவர்கட்கு அநுக்கிரகித்தீர்.

15. அவர்கள் அக்கிரமங்களெல்லாங் கால்காலாவில் தொடக்கமாயின; அங்கு தான் அவர்களை நாம் பகைக்கும்படியாயிற்று; அவர்களுடைய கிருத்தியங்களின் துர்க்கருத்தைப் பற்றி, நமது விடுதியில் நின்றவர்களை அகற்றுவோம்; அவர்களுடைய அதிபர் யாவரும் நம்மை விட்டு அகன்றதினாலே, இனி அவர்களை நேசிப்போமில்லை.

16. எப்பிராயீம் அடிபட்டது, ஆணி வேர் உலர்ந்தது, இனி ஒருபோதுங் கனி தராது; அப்படி தரினும் அவ்கள கற்பகர அன்பார்ந்த (குழவிகளை) மாய்த்து விடுவோம்.

17. கடைசியாக எம்பிரானானவர், அவர்கள் அவருக்குச் செவிகொடாத தாலே, அவர்களைத் தள்ளிவிட, அவர்கள் பல சாதி சனங்கள் நடுவில் தேசாந்திரிகளாய்த் திரிவார்கள்.

* 17-ம் வசனம். இஸ்றாயேலியருடைய சீர்கேடும், ஆண்டவர் அவர்கள் மீது வைத்திருந்த அன்பும், அவர்களுடைய நன்றிகெட்டத்தனமும், மதிகேடும், அதற்கான தண்டனையும் விவரிக்கப்படுகின்றன.