ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 09

கபயோனித்தர் தந்திரமாக இஸ்றாயேலியரோடு கூட உடன்படிக்கை பண்ணி உயிரோடு தப்பிப் போனதும் -- ஆனால் அவர்கள் என்றைக்கும் அடிமைகளாயிருப்பார்களென்று தண்டிக்கப் பட்டதும்.

1. யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் வெளிகளிலும், கடலுக்குச் சமீபமான நாடுகளிலும், மகாசமுத்திரத்தின் ஓரத்திலும், லீபான் என்னும் பர்வதத்தின் அருகில் குடியிருந்தவர்களும், ஏட்டையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் இவர்களுடைய இராசாக்களும்

2. தங்களுக்குள்ளே பேசி, ஒருமனப்பட்டு ஜோசுவாவோடும் இஸ்றாயேலியரோடும் தயிரியமாய் யுத்தம் பண்ணக் கூடிக் கொண்டார்கள்.

3. ஆனால் கபயோனின் குடிகள், எரிக்கோவுக்கும் ஆயிக்கும் ஜோசுவா செய்ததைக் கேள்விப்பட்ட போது,

4. ஒரு தந்திரமான யோசனை பண்ணினார்கள். எப்படியயனில், அவர்கள் தங்களுடைய வழிக்கு உணவாகத் தின்பண்டங்களையும், பழைய இரட்டுப் பைகளையும் பீறுண்டு பொத்தல் தைக்கப் பட்ட திராட்ச இரசத் துருத்திகளையும் கழுதைகளின் மேலேற்றி,

5, பழுது பார்க்கப் பட்ட பழைய பாதரட்சைகளையும் தங்கள் கால்களில் போட்டுப் பல வர்ணமுள்ள ஒட்டுப் போடப்பட்ட பழைய வஸ்திரங்களையும் உடுத்திக் கொண்டார்கள். வழிக்கு அவர்கள் கோண்டு போன அப்பங்களோ உலர்ந்ததும் துண்டு துண்டாகப் பிய்க்கப் பட்டதுமாயிருந்தது.

6. அவர்கள் கல்கலாவிலிருந்த பாளையத்துக்கு ஜோசுவாவிடத்தில் போய் அவனையும் இஸ்றாயேலின் முழுச் சபையையும் நோக்கி: நாங்கள் அதிதூர தேசத்திலிருந்து வந்தோம். உங்களோடு சமாதான உடன்படிக்கையைப் பண்ண இச்சிக்கிறோம் என்றார்கள். இஸ்றாயேலின் பெரியோர்கள் அவர்களுக்கு மறுவுத்தாரஞ் சொல்லி:

7. நீங்கள் எங்களுக்குச் சுதந்தரமாய்க் கொடுக்கப்படுந் தேசத்தில் குடியிருக்கிறீர்களாக்கும். (அப்படியானால்) நாங்கள் எப்படி உங்களோடு உடன்படிக்கை பண்ணலாமென்றார்க்ள.

8. அவர்கள் ஜோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்று சொன்னார்கள். அதற்கு ஜோசுவா: நீங்கள் யார்? எங்கேயிருந்து வந்தீர்கள் என,

9. அவர்கள்: உமதடியார்கள், உமது தேவனாகிய கர்த்தருடைய பேரைச் சொல்லி மகா தூர தேசத்திலிருந்து வந்தவர்கள். ஏனெனில் நாங்கள் அவருடைய வல்லபத்தின் கீர்த்தியையும் அவர் எஜிப்த்திலே செய்த யாவையும்,

10. எசெபோனின் இராசாவாயிருந்த செகோனும், அஸ்தரோட்டிலிருந்த பாசானின் இராசாவான ஓகும் என்னப்பட்ட யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த அமோறையரின் இரண்டு இராசாக்களுக்கும் அவர் செய்த யாவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.

11. ஆகையால் எங்கள் பெரியோர்களும் எங்கள் தேசத்துக் குடிகள் அனைவரும் எங்களைப் பார்த்து: உங்கள் கைகளில் தூரப் பயண வழிக்கு வேண்டிய ஆகாரம்ட நீங்கள் எடுத்துக் கொண்டு இஸ்றாயேலியருக்கு எதிர்கொண்டு போய்: நாங்கள் உங்கள் அடியாராயிருக்கிறோம், எங்களோடு உடன்படிக்கைப் பண்ண வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லச் சொன்னார்கள்.

12. உங்களிடத்தில் வர எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் புறப்பட்ட அன்றுதானே இந்த அப்பங்களைச் சுடச்சுட எடுத்துக் கொண்டு வந்தோம். இப்பொழுது அதுகள் நெடுநாள் வழியில் உலர்ந்து பழையதாகித் துண்டுதுண்டாய்ப் பிய்ந்து போயிற்று.

13. நாங்கள் இந்தத் திராட்ச இரசத் துருத்திகளை நிரப்பின போது அதுகள் புதிதாயிருந்தன. இப்பொழுது இதோ கிழிந்து போயின; நாங்கள் உடுத்திக் கொண்ட வஸ்திரங்களும், போட்டுக் கொண்ட பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாண நாட்களிலே எவ்வளவோ பழசாகித் தேய்ந்து போயிற்று பாருங்கள் என்றார்கள்.

14. இதைக் கேட்டு இஸ்றாயேலியர் கர்த்தருடைய ஆலோசனையைக் கேளாமலே அவர்களுடைய போஜனப் பதார்த்தத்தில் சிறிது வாங்கிக் கொண்டார்கள்.

15. ஜோசுவா அவர்களுடன் சமாதானங் காட்டித் தான் அவர்களை உயிரோடு காப்பாற்றுவதாக உடன்படிக்கையைப் பண்ணிச் சபதங் கூறினான். மற்றுமுள்ள சபை அதிபதிகளும் அவர்களுக்கு ஆணையிட்டுக் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

16. இந்த உடன்படிக்கைப் பண்ணின மூன்று நாள் சென்ற பின்பு இவர்கள் அருகில்தான் குடியிருக்கிறார்களென்றும், அவர்களுக்குள்ளே தாங்கள் சஞ்சரிக்கப் போகிறார்களென்றுங் கேள்விப்பட்டார்கள்.

17. உள்ளபடி, இஸ்றாயேல் புத்திரர் பாளையம் விட்டுப் புறப்பட்டு மூன்றா; நாளில் அவர்களுடைய பட்டணங்களுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தப் பட்டணங்களேதெனில்: கபயோன், கப்பீரா, பேரோட், கரியாத்தியார்மேயாம்.

18. சபையின் அதிபதிகள் இஸ்றாயேலியரின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தினாலே ஆணையிட்டு அவர்களுக்கு அபயங் கொடுத்தபடியால் இஸ்றாயேலியர் அவர்களைச் சங்காரம் பண்ணவில்லை. ஆனது பற்றிச் சாதாரண சனங்கள் எல்லோரும் அதிபதிகளின் மேல் முறுமுறுத்துப் பேசினர்.

19. அதிபதிகள் அவர்களை நோக்கி: நாங்கள் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பேரில் அவர்களுக்கு ஆணையிட்டோம். ஆதலால் நாம் அவர்களைத் தொடவே கூடாது.

20. ஆனால் நாம் செய்யப் போகிறதைக் கேளுங்கள். கர்த்தருடைய கோபம் நம்மேல் வராதபடிக்கு நாம் இட்ட ஆணையின்படி அவர்களை உயிரோடு காப்பாற்றுவோம்.

21. ஆனாலும் சபையார் எல்லோருக்கும் விறகு வெட்டவும், தண்ணீர் கொண்டு வரவும் அவர்கள் மேல் கடன் வைக்கப் படும் என்று மறுவுத்தாரஞ் சொன்னார்கள். இப்படிச் சொன்னதைக் கேட்டு,

22 ஜோசுவா கபயோனியரை அழைப்பித்து: எங்கள் தேசத்தின் நடுவே நீங்கள் கு யிருக்க நீங்கள் பொய்யைச் சொல்லி, நாங்கள் வெகு தூரமாயிருக்கிறவர்களென்று எங்களை ஏமாற்றி வஞ்சிக்கத் தேடினதென்ன?

23. ஆனது பற்றி நீங்கள் சபிக்கப் பட்டவர்கள். என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகு வெட்டவும், தண்ணீர் கொண்டுவரவும் கடவீர்கள். இந்த ஊழியந் தலைமுறை தலைமுறையாய் உங்களை விட்டு நீங்க மாட்டாதென்று (தீர்ப்புச் சொன்னான்.)

24. அதற்கு அவர்கள்: தேசத்தையயல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் சகல குடிகளையும் அழித்துப் போடவும், உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோயீசனுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தாரென்கிற செய்தி உம்முடைய அடியார்களுக்கு அறிவிக்கப் பட்டதினால் நாங்கள் எங்கள் ஜீவன் நிமித்தம் மிகவும் பயந்து அதைக் காப்பாற்றுவதற்கு இந்த உபாயம் பண்ணினோம். எங்களுக்குண்டான பயங்கரமே எங்களைக் கட்டாயப் படுத்தினது.

25. இப்பவும் நாங்கள் உம்முடைய கையிலிருக்கின்றோம். எது நன்மையும் நியாயமுமாக உமக்குத் தோன்றுகிறதோ நீர் அந்தப்படி எங்களுக்குச் செய்யுமென்றார்கள்.

26. ஜோசுவா அப்படியே செய்தான். அவன் இஸ்றாயேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடக்கூடாதென்று கட்டளையிட்டு அவர்களைக் காப்பாற்றி இரட்சித்தான்.

27. ஆனால் அவரகள் சர்வ சனங்களுக்கும் கர்த்தர் தெரிந்து கொள்ளும் இடத்திலுள்ள தேவ பலி பீடத்துக்கும் பணிவிடையராகி, விறகு வெட்டுவதிலும், தண்ணீர் கொண்டுவருவதிலும் இவை முதலிய பொது வேலை செய்வார்கள் என்று ஜோசுவா அன்றுதானே தீர்ப்புச் சொல்லிக் கற்பித்தான். அப்படியே அவர்கள் இந்நான் வரைக்கும் அந்தப் பணிவிடையைச் செய்து வருகிறார்களாம்.