உபாகமம் - அதிகாரம் 09

மோயீசன் சனங்கள் ஏற்கனவே பண்ணின கலகங்களை எடுத்துச் சொல்லி அவர்கள் தாங்கள் நீதிமான்களென்று எண்ணிய எண்ணம் கெட்டதென்று மறுத்து விட்டது.

1. இஸ்றாயேலே கேள்! நீ இன்று யோர்தானைக் கடந்து உன்னிலும் சனம் பெருத்ததும் வலியதுமான சாதிகளையும் வானத்தை யளாவிய மதில் சூழ்ந்த அரணிக்கப் பட்ட விசாலமான பட்டணங்களையும் வசப்படுத்தப் போகிறாய்.

2. அவர்கள் ஏனாக்கின் புத்திரர்; பலத்த சாதி நெடிய ஆட்கள். நீ அவர்களைக் கண்டிருக்கிறாய். அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்கத் தக்கவர் ஒருவருமில்லை என்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்.

3. அப்படியிருந்தும் உன் தேவனாகிய கர்த்தரே உனக்கு முன்பாக நடப்பாரென்பதை இன்று நீ கண்டறிவாய். அவர் பட்சித்து நீறாக்குகிற நெருப்பைப் போல அவர்களை அடித்து மடித்துச் சீக்கிரத்தில் அழித்துப் போடுவார். அவர் உனக்கு முந்திச் சொன்னது போல உன் கண்களுக்கு முன்பாகவே அவர்களை அதம் பண்ணுவார்.

4. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னிலையில் சங்கரித்த பின்னரோ, ஆ! இந்தச் சனங்கள் தங்கள் அக்கிரமத்தின் நிமித்தமே அழிவுண்டமையால், என்னை நீதிமானென்றுதானே கர்த்தர் இந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி என்னை அழைத்து வந்தாரென்று உன் இருதயத்தில் நினைக்காதே.

5. உள்ளபடி நீ அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும் பொருட்டுப் பிரவேசித்தது, உன்னுடைய புண்ணியமுமல்ல, தர்மமுமல்ல. அந்தச் சாதியாருடைய ஆகாமியத்தைப் பற்றியும், அபிரகாம், இசாக்கு, யாக்கோபு ஆகிய உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதைப் பற்றியும் அவர்கள் உன் கண்களுக்கு முன்னே அழிக்கப் பட்டார்கள்.

6. நீ வணங்காக் கழுத்துள்ள பிரசையாயிருக்க, உன் தேவனாகிய கர்த்தர் அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய்க் கொடுத்தது உன் புண்ணியத்தைப் பற்றி அல்லவே.

7. வனாந்தரத்திவே உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டானதற்கு நீ காரணமாயிருந்ததை நினை. எஜிப்த்திலிருந்து புறப்பட்ட நாள் முலற்கொண்டு இவ்விடஞ் சேரும் பரியந்தம் நீ எப்பொழுதுங் கர்த்தரை விரோதித்து முரண்டிக் கொண்டிருந்தாய்.

8. ஒரேபில் முதலாய் நீ அவருக்குக் கோபம் உண்டாக்கி, அவர் உக்கிரங் கொண்டு உன்னை அழிக்க நினைத்தார்.

9. கர்த்தர் உங்களோடு பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு நான் மலையில் ஏறினபோது, அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாள் இரவும் பகலும் மலையில் தங்கிக் கொண்டிருந்தேன்.

10. அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் கொடுத்தார். சபை கூடியிருந்த நாளில் அவர் மலையிலே அக்கினி நடுவில் இருந்து உங்களுடனே பேசியிருந்த சகல வாக்கியங்களும் அவைகளில் எழுதியிருந்தன.

11. நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்தான பின்பு கர்த்தர் உடன்படிக்கைப் பலகைகளாகிய இரண்டு கற்பலகைகளை எனக்குக் கொடுத்தபோதோ,

12. அவர் என்னை நோக்கி: நீ எழுந்து சீக்கிரமாய் இவ்விடம் விட்டு இறங்கிப் போ. ஏனெனில் நீ எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்த உன் சனங்கள் நீ காட்டிய மார்க்கத்தை விட்டு விலகி பால்மாறாமல் தங்களுக்கு வார்ப்பிக்கப் பட்ட ஒரு விக்கிரகத்தை உண்டாக்கினார்களென் றார். 

13. மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: இந்தப் பிரசையைப் பார்த்தேன். அது வணங்காக் கழுத்துள்ள சனம். 

14. நம்மை விட்டு விடு. அவர்களை நாம் அழித்து; போட்டு அவர்கள் பெயரை வானத்தின் கீழிருந்து கிறுக்கி, அவர்களைப் பார்க்கிலும் சனம் பெருத்ததும் பலத்ததுமான இன்னொரு சாதிக்கு உன்னைத் தலைவனாயிருக்கச் செய்வோமென்றார்.

15. பிறகு நான் எரிகிற மலையிலிருந்து உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளையும் என்னிரு கைகளில் பிடித்துக் கொண்டிறங்கிப்

16. பார்த்தேன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகமாகப் பாவத்தில் விழுந்து, வார்ப்பிக்கப் பட்ட ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அவர் உங்கட்குக் காட்டின அவருடைய மார்க்கத்தை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விலகினீர்களென்று நான் கண்டபோது, 17.  என் கைகளிலிருந்த பலகைகளை எறிந்து விட்டு உங்கள் முன்னிலையில் உடைத்துப்போட்டு,

18.  பிறகு நீங்கள் கர்த்தருக்குக் கோபமுண்டாக அவருக்கு விரோதமாயக் கட்டிக் கொண்ட உங்கள் சகல பாவங்களினிமித்தமாக நான் முன்போலக் கர்த்தருடைய சந்நிதியில் விழுந்து இராப்பகல் நாற்பது நாளும் அப்பம் புசிக்காமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.

19. ஏனென்றால் உங்களை அழிக்கும் படி உங்கள் மேல் அவர் கொண்டிருந்த கோபாக்கினிக்கும் உக்கிரத்திற்கும் நான் அச்சமுற்றேன். கர்த்தரோ அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.

20. ஆரோனின் பேரிலும் அவர் மிகவும் சினங் கொண்டவராய் அவனைச் சங்கரிக்க வேண்டுமென்றிருந்தார். நானோ பிரார்த்தித்துக்கொண்டு ஆரோனையுந் தப்புவித்தேன்.

21. உங்கள் பாவப் பொருளாகிய அந்தக் கன்றுக் குட்டியையோ, நான் அதைப் பிடித்து எடுத்து அக்கினியிலே எரித்து உடைத்து நொறுக்கித் தூளாக்கி மலையிலிருந்திறங்கும் அருவியில் எறிந்து விட்டேன்.

22. நீங்கள் எரிவு ஸ்தலத்திலும் சோதனையிடத்திலும் இச்சை நாசமென்னும் இடத்திலும் கர்த்தருக்குக் கோபத்தை மூட்டினீர்கள்.

23. இன்னும் அவர் உங்களைக் காதேஸ் பர்னேயிலிருந்து அனுப்பி: நீங்கள் போய் நாம் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்ட போது நீங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவசியாமலும் அவருடைய குரல் சப்தத்திற்குச் செவிகொடாமலும் அவரிட்ட கட்டளையை மீறி நடந்தீர்கள்.

24. நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் அவ்விதமே மூர்க்கத்தனமாய்க் கலகம் பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.

25. கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொல்லி மிரட்டினதினால் நான் இராப்பகல் நாற்பது நாளும் அவருடைய சந்நிதியில் பணிந்திருந்து அவர் உங்களை அழிக்க வேண்டாமென்று வேண்டி வேண்டி விண்ணப்பம் பண்ணி,

26. அவரை நோக்கி: தேவனாகிய கர்த்தாவே! தேவரீர் உமது மகத்துவத் தாலே மீட்டு வலிய கரத்தாவே எஜிப்த்திலிருந்து கொண்டு வந்த உம்முடைய சனத்தையும் சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக்.

27. அபிரகாம், இசாக், யாக்கோபு என்கிற உமது ஊழியர்களை நினைத்தருளும். இந்தச் சனங்களுடைய மூர்க்கத்தனத் தையும் அக்கிரமத்தையும் பாதகத்தையும் பாராதீர்!

28. (அலர்களை நாசமாக்கினால்) தேவரீர் எங்களை மீட்டுப் புறப்படப் பண்ணின தேசத்தின் வாசிகள் நிந்தையாய்ப் பேசி: ஓகோ, கர்த்தர் இவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிப்பிக்கப் பண்ணக் கூடாமற் போனபடியினாலும், அவர்களை வெறுத்துப் பகைத்ததினாலும் அல்லவா இவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்பொருட்டு எஜிப்த்திலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்வார்களாக்கும்.

29. தேவரீர் உமது மகா வல்லபத்தினாலும் ஓங்கிய கரத்தினாலும் புறப்படப் பண்ணின இவர்கள் உம்முடைய சனமும் உம்முடைய சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று (விண்ணப்பம் பண்ணினேன்.)