ஓசே ஆகமம் - அதிகாரம் - 08

தினை விதைத்தவன் தினை அறுப்பான், - வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

1. (ஓசே) உன் குரலைச் சங்கத் தொனி போல் கிளப்பி, அவர்கள் நமது உடன்படிக்கையைக் கடந்ததாலும், நமது வேதச் சட்டங்களுக்குத் துரோகஞ் செய்ததாலும் “இதோ ஆண்டவர் வீட்டின் மீது கழுகு போல் சத்துரு வருகின்றன” எனச் சொல்வையாக.

* 1-ம் வசனம். சத்துரு என்பது ஆண்டவர் சனத்தைச் சங்காரஞ் செய்யவேண்டிய அசீரியரையும், கல்தேயரையுங் குறிக்கின்றது.

2. அப்போது நம்மை நோக்கி: இஸ்றாயேல் பிரசையாகிய நாங்கள் நீரே எம் தேவனாக அங்கீகரிக்கின்றோம் எனப் பிரார்த்திப்பார்கள்.

3. இஸ்றாயேல் தன் நலனைத் தவிர்த்தது ஆதலின் நாம் செவி கொடோம்; சத்துராதி அதை உபத்திரியப் படுத்துவன்; (இது திண்ணம்.)

4. அவர்கள் அரசர்களைத் தாங்களே ஏற்படுத்தினர்கள்; நமது சித்தப்படியல்ல, அதிபர்களை ஸ்தாபகஞ் செய்தனர்கள்; நாம் ஒன்றையுமறியோம்; தாங்கள் அழிந்துபோகத் தம் வெள்ளி பொன் உலோகங்களை விக்கிரகங்களாக சமைத்துக் கொண்டனர்கள்.

* 4-ம் வசனம். எரோபோவாமும், தேவ தூஷணராகிய மற்ற இஸ்றாயேல் அரசரும் ஆண்டவரின் சித்தப் பிரகாரம் நடந்தவரல்லர்.

5. சமாரியா நகரமே! நமது கோபாக்கிரம் உன் கன்றுகுட்டிமேல் பொங்க, அது கீழே தள்ளப்படும்; எவ்வளவு காலந்தான் உங்களைச் சுத்தி கரியாமல் இருப்பீர்கள்.

6. அக்கன்றுகுட்டி விக்கிரகம் இஸ்றாயேலினின்று புறப்பட்டதாகும்; அதை ஒரு தொழிலாளி சமைத்ததால், அஃது தேவனல்ல: ஆதலின் சமாரியாவின் கன்று சிலந்தி பூச்சி வலைபோலாகும்.

* 6-ம் வசனம். சிலந்திப் பூச்சி வலைபோலாகும்; அவ்வலையானது எவ்வளவு எளிதில் அழிக்கப்படக்கூடியதோ அதுபோலச் சுலபமாய் அவ்விக்கிரகம் அழிந்துபோம்.

7. காற்றை விதைத்துப் புயலைத் தான் அறுப்பர்; நின்றிருக்குங் கதிர் ஒன்றேனும் அங்கிராது; (இருந்தாலும்) மாவின்றி மணி பதராயிருக்கும்; (மாவுடையதாயினும்) அதை அந்நியர் தான் புசிப்பர்.

8. இஸ்றாயேல் (சத்துராதிகளால்) விழுங்கப்பட்டது; இப்போது அது சகல சனங்களுக்குள் மல ஜல பாத்திரத்துக் கொப்பானது.

9. தன் சுய நலத்தை மாத்திரந் தேடுங் கானக வேசரிக்குச் சமதையான அசூரிடம் அவர்கள் (உதவிக் குப்) போனார்கள்; எப்பிராயீமோரும் காதலருக்கு வெகுமதிகளைச் செய் தார்கள்.

* 9-ம் வசனம். காதலருக்கு: அசீரியருடைய விக்கிரக ஆராதனையைத் தாங்களுங் கைக் கொண்டதால், இவர்கள் அவர்களுடைய கொள்கையோடு சோரம் போனவர்களாகின்றார்கள்.

10. (இங்ஙனம்) பிறதேச சனங்களை அவர்கள் கைக்கூலிக்கு அமர்த்திய பின்னர், நாம் அவர்களை (அசீரியரிடங் கைதிகளாகக்) கூட்டிப் போவோம்; அவர்கள் அரசனுடையவும், அதிபருடையவுஞ் சுமையின்றி கொஞ்சம் இளைப்பாறுவார்கள் போலும்.

* 10-ம் வசனம். இளைப்பாறுவர்கள் போலும் ஆண்டவர் இஸ்றாயேல் சனத்தைப் பகடி செய்கின்றனர்.

11. எப்பிராயீம் தான் பாவஞ் செய்யவே, பலிபீடங்களை எண்ணிறந்தவைகளாய்ச் சமைத்ததாதலின், அப் பீடங்களே அதுக்கு பாபத் தண்டனையாய் நின்றன; (இதுதான் கண்ட பலன்.)

12. நாம் அதுக்கு அநந்த வேத முறைமைகளை நிருமித்திருந்தோம்; அதுவே தன்னைச் சேர்ந்ததல்லவென்று அவைகளை ஏந்து கொள்ளவில்லை.

13. அவர்கள் (ஆண்டவருக்கும்) அப்பங்களை ஒப்புக்கொடுப்பார்கள், மாமிச பலியிடுவார்கள், அதனையும் புசிப்பார்கள்; (ஆயினும்) ஆண்டவர் அவைகளைப் பிரியமாய் ஏற்றுக் கொள்ளவறியார்; அந்நேரத்தில் அவர்கள் அக்கிரமத்தையே நினைவுகொண்டு, அவர்கள் பாபத்துக்குப் பழிவாங்குவர்; அவர்களோ எஜிப்த்து தேசத்தை நோக்கி ஏகக் கருதுவார்கள்.

* 13-ம் வசனம். சமாரிய பிடிபட்ட உடனே அநேகர் அசீரியர் கைக்குத் தப்பித்து, எஜிப்த்து தேசத்துக்கு ஓட்டம் பிடித்தனர்.

14. இஸ்றாயேல் தன் சிருஷ்டிகரை மறந்து, புதிய தேவாலயங்களைக் கட்டினது; யூதாவோ அனந்த பட்டணங்களைப் பலப்படுத்தியது; நாமோ அவர்கள் பட்டணங்களில் தீவைக்க, அதின் தேவஸ்தானங்கள் எல்லாம் நீறாகி விடும்.

* 14-ம் வசனம். சொல்லியபடி இராசாக்கள் IV. ஆகமம் 25 அதிகாரத்தில் நிகழ்ந்தனவைகளைக் காணலாம்.