ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 08

தேவன் ஜோசுவாவுக்குப் புத்தி சொல்லியதும் -- ஆயி பட்டணம் பிடிபட்டதும் - அதின் அரசன் தூக்குமரத்திலே தூக்கப் பட்டதும் -- ஜோசுவா ஒரு பலி பீடத்தைக் கட்டினதும் -- சனங்களை ஆசீர்வதித்ததும்.

1. பிறகு கர்த்தர் ஜோசுவாவைப் பார்த்து: நீ பயப்படாதே, திடுக்கிடாதே ; நீ யுத்த வீரர் எல்லோரையும் கூட்டி எழுந்து ஆயி பட்டணத்திற்குட் போகக் கடவாய். இதோ அதன் அரசனையும் அதன் குடிகளையும், பட்டணத்தையும், நாட்டையும் நாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தோம்.

2. நீ எரிக்கோவுக்கும், அதன் இராசாவுக்கும் செய்தது போல் ஆயி பட்டணத்துக்கும் அதன் அரசனுக்கும் செய்யக்கடவாய். அதில் கொள்ளையிடப்படும் பொருட்களையோ எல்லாச் சீவ செந்துக்களையோ, உங்களுக்குச் சொந்தக் கொள்ளையாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைப்பாயயன்றருளினார்.

3. அப்பொழுது ஆயிக்குப் போக ஜோசுவாவும் அவனோடு கூடப் போர்வீரர்களெல்லோரும் எழுந்து புறப்பட எத்தனித்தார்கள். பலத்த யுத்த வீரரான முப்பதினாயிரம் பேரை ஜோசுவா தெரிந்தெடுத்து அன்று இராத்திரியிலே அனுப்பி,

4. அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் போய்ப் பட்டணத்துக்கு அந்தண்டை சென்று பதிவிருக்க வேண்டும். பட்டணத்துக்கு அதிதூரமாய்ப் போக வேண்டாம். அவ்விடத்தில் நீங்கள் அனைவரும் சாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

5. நானும் என்னோடேயிருக்கிற மற்றுமுள்ள சேனையும் நேராய்ச் சென்று பட்டணத்திற்கு அருகே போவோம். பிறகு அவர்கள் எங்களை எதிர்க்கப் புறப்பட்டு வருகையில் நாங்கள் முன்செய்தது போல முதுகு காட்டி ஓட்டம் பிடிப்போம்.

6. நாங்கள் முன்போலத் தங்களுக்குப் பயந்திருக்கிறோமென்று எண்ணி அவர்கள் எங்களைத் துரத்தப் புறப்படுகையில் நாங்கள் அவர்களைப் பட்டணத்துக்குச் சற்றுத் தூரமாக அழைத்து ஓடியோடிப் போவோம்.

7. இப்படி நாங்கள் ஓட அவர்கள் எங்களைப் பின்சென்று (பட்டணத்துக்கு த் தூரமாயிருக்கும் வேளையிலே) நீங்கள் பதிவிடையிலிருந்து எழுந்து பட்டணத்தில் (பிரவேசித்து) அதைப் பாழாக்கிப் போடுவீர்கள். ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் அதனை உங்கள் கைகளிலே ஒப்புக்கொடுப்பார்.

8. நீங்கள் பட்டணத்தைப் பிடித்தவுடனே அதைத் தீப்போட்டுச் சுட்டெரித்துப் போட்டு நான் கற்பித்தபடியயல்லாஞ் செய்வீர்கள் என்று சொல்லி,

9. அவர்களை அனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் பேட்டலுக்கும் ஆயிக்கும் நடுவே ஆயி பட்டணத்துக்கு மேற்காகப் பதிவிருக்கப் போனார்கள். ஜோசுவாவோ அன்று இராத்திரி மற்றுமுள்ள சனங்களுடன் இருந்து தங்கினான்.

10. பொழுது விடியா முன்னே அவன் எழுந்து தன் சேனையை அணிபார்த்து மூப்பர்கள் சூழப் படைக்கு முன்னாலே நடந்து போனவிடத்தில் போர்வீரர்கள் அவனை ஆதரிக்க அவனுக்குப் பின் சென்றார்கள்.

11. இவர்கள் பட்டணத்திற்குச் சமீபமாகச் சேர்ந்தபோது ஆயிக்கும் வடக்கே பட்டணத்துக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்குக் கண்டு அங்கு தங்கிக் கொண்டார்கள்.

12. ஜோசுவா ஐயாயிரம் வீரர்களைத் தெரிந்தெடுத்துப் பேட்டலுக்கும் ஆயிக்கும் நடுப்புறத்திலே பட்டணத்துக்கு மேலண்டையில் பதிவிடையாயிருக்கச் சொல்லி,

13. மற்றுமுள்ள சமஸ்த படைவீரர்களையும் வடபுற முகமாய் அணிவகுப்பாக வைத்து, இவர்களுடைய கடைசிப் பட்டாளங்கள் பட்டணத்து மேற்புறம் மட்டும் பரம்பி விரிந்திருக்கும்படி திட்டம் பண்ணித் தான் அன்று இராத்திரி புறப்பட்டுப் பள்ளத்தாக்கிலே தங்கிக் கொண்டிருந்தான்.

14. ஆயியின் அரசன் அதைக் கண்டு காலமே பட்டணத்திலுள்ள தன் எல்லாப் போர்ப் புருஷரோடு தீவிரமாய் வெளிவந்டது வனாந்தர முகமாய்ச் செல்லத் துடங்கினான். தன் பின்னாலே பதிவிடை வைத்திருந்ததை அவன் அறியாதிருந்தான்.

15. உடனே ஜோசுவாவும் அவனோடுயிருந்த இஸ்றாயேலியர் எல்லோரும் பயந்தாற்போலப் பாசாங்கு பண்ணி அவர்களுக்கு முன்பாக நிலை விட்டு வனாந்தரத்துக்குப் போகும் வழியே ஓட்டம் பிடித்தார்கள்.

16. அப்பொழுது சத்துருக்கள் வெகு ஆரவாரத்துடன் கூவி, ஒருவரை ஒருவர் தூண்டி ஏவி, இஸ்றாயேலியரைத் துரத்திப் பின்செல்லத் தொடங்கினார்கள். இப்படி அவர்கள் பட்டணத்துக்குச் சற்றுத்தூரம் போனார்கள்.

17. அதற்குள்ளே பட்டண வாசல்கள் இன்னுந் திறந்திருந்தனவன்றி, ஆயி பட்டணத்திலும் பேட்டல் ஊரிலும் இஸ்றாயேலியரைப் பின்தொடராத யுத்த புருஷர் மீதியானவர் ஒருவருமில்லை என்றிருக்கும்போது,

18. கர்த்தர் ஜோசுவாவைப் பார்த்து: நீ உன் கையிலிருக்கிற கேடயத்தை ஆயிக்கு நேராகத் தூக்கி நீட்டு. அதை நாம் உன் கையில் ஒப்புக்கொடுப்போம் என்றார்.

19. அந்தப்படி அவன் தன் கேடயத்தைத் தூக்கிப் பட்டணத்தைச் சுட்டிக் காட்டின மாத்திரத்தில் பதிவிரா நின்ற அவனுடைய வீரர் தீவிரமாய் எழுந்து பட்டணத்தில் புகுந்து அதைப் பிடித்துத் தீ வைத்து எரித்துப் போட்டார்கள்.

20. ஜோசுவாவைத் துரத்தி இராநின்ற பட்டணத்துப் புருஷர் திரும்பிப் பார்த்த போது, அதோ பட்டணத்தில் நின்றெழும்பும் புகை வானமட்டும் ஏறியிருந்தது கண்டு (ஓடிப் போகப் பார்த்தும் ஓடிப் போவதற்கு இடமில்லாமல் போயிற்றென்றும் பாசாங்கு பண்ணி வனாந்தரத்தை நோக்கி ஓடின இஸ்றாயேலியர்கள் இப்போது திரும்பிக் கொண்டு மகா வீரசூரத்துடன் சண் டைக்கு நிற்கிறார்களென்றும் (கண்டு ஏங்கினர்).

21. (உள்ளபடி) ஜோசுவாவும் இஸ்றாயேலியரும் பட்டணம் பிடிபட்டதையும், புகை எழும்பி இருப்பதையும் கண்டபோது திரும்பிக் கொண்டு ஆயியின் புருஷரை முறிய அடிக்கத் துடங்குகையில்,

22. பட்டணத்தைப் பிடித்துச் சுட்டெரித்த ஜோசுவாவின் வீரர் ஊரிலிருந்து புறப்பட்டுத் தங்கள் சகோதரர்களுடன் சேர வேணுமென்று வரும்போது நடுவே அகப்பட்ட சத்துருக்களை அடிக்க ஆரம்பித்தாராகையால், இவர்கள் இப்புறத்தாராலும் அப்புறத்தாராலும் வெட்டுண்ட படியால் அவர்களில் ஒருவர் முதலாய்த் தப்பிப் போகாமல் கணக்கில்லாத பேர்கள் மாண்டு போயினர்.

23. ஆயி பட்டணத்து இராசா உயிரோடு அவர்களால் பிடிக்கப்பட்டு ஜோசுவாவினிடத்திற்குக் கொண்டு வரப்பட்டான்.

24. வனாந்தரத்தை நோக்கி ஓடிய இஸ்றாயேலியரைத் துரத்தினவர்கள் அனைவரும் அவ்விதமே வெட்டுண்டு ஒரே இடத்தில் விழுந்து இற்நத பிற்பாடு இஸ்றாயேலியர் ஒருங்குடன் கூடிப் பட்டணத்துக் குடிகளையும் சங்காரம் பண்ணத் திரும்பினார்கள்.

25. அன்று ஆணும் பெண்ணுமாக இறந்து போனவர்கள் பன்னீராயிரம் பேர். அவர்கள் எல்வோரும் ஆயி பட்டணத்து வாசிகள்.

26. ஆயியின் குடிகள் எல்லாருஞ் சங்கரிக்கப்பட்டுத் தீருமட்டும் ஜோசுவா கையை மட்க்கி வாங்காமல் தன் கேடயத்தை உயரத் தூக்கிக் கொண்டு நின்றான்.

27. பிறகு கர்த்தர் ஜோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தபடி ஜீவ செந்துக்களையும், பட்டணத்தில் அகப்பட்ட கொள்ளையையும் இஸ்றாயேல் புத்திரர் எடுத்துக் கொண்டு தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டார்கள்.

28. ஜோசுவா பட்டணம் முழுவதுஞ் சுட்டெரித்து அநவரத காலத்திற்கும் அதைப் பாழாய்க் கிடக்கும் மண்மேடாக்கினான்.

29. அவ்வூர் இராசாவையும் தூக்கு மரத்தில் ஏற்றி வைத்துச் சாயுங்காலத்துச் சூரியன் அஸ்தமனமாகுமட்டுமே அதிலே தொங்க விட்டான். பிறகு ஜோசுவாவின் கட்டளைப்படி இஸ்றாயேலியர் அவ்வரசனுடைய உடலை மரத்திலிருந்து இறக்கிப் பட்டண வாசலில் போட்டு இந்நாள் வரைக்குங் கிடக்கிற பெரிய கற்குவியலால் அதை மூடினார்கள்.

30. அப்பொழுது ஜோசுவா கேபால் என்னும் மலையிலே இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருக்குத் (தோத்திரமாக) ஒரு பீடத்தைக் கட்டினான்.

31. கர்த்தரின் தாசனாகிய மோயீசன் இஸ்றாயேலிய புத்திரருக்குக் கட்டளையிட்டுத் தன் நியாயப் பிரமாண நூலில் எழுதி வைத்த பிரகாரம், அந்தப் பீடமானது இருப்பாயுதம் படாநின்ற கற்களாலே கட்டப்பட்டது. அதின்மேல் ஜோசுவா கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலிகளையும் செலுத்தி, சமாதானப் பலிகளையும் இட்டான்.

32. பிறகு இஸ்றாயேலிய புத்திரருக்கு முன்பாக மோயீசன் எழுதியிருந்த உபாகமமென்னும் நியாயப் பிரமாணத்தை அந்தக் கற்களில் கொத்தி எழுதுவித்தான்.

33. மேலும் இஸ்றாயேல் சனங்களெல்லாங் கூடி, சபை மூப்பரும், அதிபதிகளும், நீதிக் கர்த்தாக்களும், அந்நியர்களும், இஸ்றாயேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியருக்கு வாக்குத்தத்தப் பெட்டிக்கு இருபுறத்திலும் நிற்க, கர்த்தருடைய தாசனான மோயீசன் கற்பித்திருந்தபடி கால்ஜிம் மலை சமீபத்தில் பாதிபேரும் கேபாரி மலை அண்டையில் பாதி பேரும் பிரிந்து போயிருக்கும்போது ஜோசுவா இஸ்றாயேல் சபையை முதல் முதல் ஆசீர்வதித்தான்.

34. பிறகு அவன் நியாயப் பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் மற்றுமுள்ள நூலின் சகல வசனங்களையும் வாசித்தான்.

35. மோயீசன் கற்பித்திருந்த எல்லாவற்றிலும் ஒரு வசனத்தை முதலாய் விடாதபடிக்கு, இஸ்றாயேலின் முழு சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் சஞ்சரித்திருந்த அந்நியர்களுக்கும் கூட எல்லாவற்றையும் வாசித்தான்.