ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 07

ஆயி பட்டணத்தில் இஸ்றாயேலியர் தோல்வியடைந்த முகாந்தரமேதென்றும்--ஜோசுவா அதைக் குறித்துச் செபம் பண்ணினதும்--ஆக்கானென்பவன் கொல்லப் பட்டதும்.

1. இஸ்றாயேல் புத்திரர் கர்த்தருடைய கட்டளை மீறிச் சாபத் தீட்டான சில பொருட்களை அபகரித்தார்கள். எப்படியெனில் யூதா கோத்திரத்து ஜாரேயுடைய குமாரனாகிய கர்மீக்குப் பிறந்த ஆக்கானென்பவன் சாபத்தீடான பொருள்களிலே சில எடுத்துக் கொண்டான். ஆனது பற்றி இஸ்றாயேல் புத்திரர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

2. ஜோசுவா எரிக்கோவிலிருந்து பேட்டலுக்குக் கீழ்ப்புறத்திலிருந்த ஆயி பட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய் அந்த நாட்டைச் சுற்றிக் கொண்டு வேவு பாருங்களென்றான். அந்தப்படி அந்த மனுஷர் ஆயி நாட்டை வேவு பார்க்கப் புறப்பட்டார்கள்.

3. ஜோசுவாவிடத்தில் அவர்கள் திரும்பி வந்த போது அவனைப் பார்த்து: அவ்விடத்திலே வெகு கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். நம்மெல்லாச் சனங்களையும் அங்கே அனுப்புவது வீண் தொந்தரவாகுமே. பட்டணத்தைப் பிடித்து அழிக்க இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வீரர்கள் போதும். சேனையயல்லாம் போக வேண்டியதேயில்லை என்றார்கள்.

4. ஆனது பற்றிப் போர்வீரர்களில் மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள். ஆனால் இவர்கள் (போய்ச் சத்துருக்களைக் கண்டவுடனே) முறிய அடிக்கப் பட்டு ஓட்டம் பிடித்தார்கள்.

5. ஆயி பட்டணத்து வீரர்கள் அவர்களைத் தோற்கடித்து அவர்களில் முப்பத்தாறு பேரை வெட்டிப் போட்டதுமன்றிப் பட்டண வாசல் துவக்கிச் சாபரீம் மட்டும் அவர்களைத் துரத்தின போது (அவர்களில் அநேகர்) மலை இறக்கத்தில் விழுந்து செத்தார்கள். இதைக் கேள்வியுற்ற சனங்களின் இருதயம் அதிக பயத்தினாலே கலங்கித் தண்ணீராய்க் கரைந்து போயிற்று.

6. அப்பொழுது ஜோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு தானும் இஸ்றாயேலின் பெரியோர்களும் சாயங்காலம் மட்டும் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையில் குப்புற விழுந்து தங்கள் தலையின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு கிடந்தார்கள்.

7. அந்நேரத்தில் ஜோசுவா (சர்வேசுரனைப் பார்த்து): ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, இந்தச் சனங்களை அமோறையர் கையிலே ஒப்புக்கொடுத்துச் சங்காரம் பண்ணுவிப்பதற்குத்தானோ தேவரீர் எங்களை இந்த யோர்தான் நதியைக் கடக்கப் பண்ணினீர்? நாங்கள் முன்போல் நதிக்கந்தண்டை இருந்துவிட்டோமேயானால் நலமாயிருக்கும்.

8. ஆ, ஆண்டவரே! இஸ்றாயேலியர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டி ஓடக் கண்ட நான் என்ன சொல்லுவேன்?

9. இதைக் கேள்விப்பட்டுக் கானானையரும் தேசத்துக் குடிகள் யாவரும் ஒருங்குடன் கூடி எங்களை வளைத்துக் கொண்டு எங்கள் பேரைப் பூமியிலில்லாதபடிக்கு நிர்மூலமாக்கிப் போடுவார்களே; அப்போது உமது மகத்தான நாமத்துக்குத் தேவரீர் என்ன செய்வீரென்று பிரார்த்தித்தான்.

10. அந்நேரத்திலே கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: எழுந்திரு! நீ குப்புற விழுந்து கிடக்கிறது என்ன? 

11. இஸ்றாயேலியர் பாவம் செய்தார்கள். நாம் அவர்களுக்குக் கட்டளையிட்ட நம் உடன்படிக்கையை அவர்கள் மீறிச் சாபத் தீடான பொருட்களில் சிலதை எடுத்துக் கொண்டார்கள். களவு பண்ணினதொழிய, அவர்கள் பொய்யுஞ் சொல்லி (மேற்படி பொருட்களைத் தங்கள் பட்டணங்களுக்குள்ளே வஞ்சகமாய் ஒளித்து வைத்தார்கள்.

12. இப்படிப்பட்ட பாவதோஷத்தைப் பற்றி இஸ்றாயேலியர் சாபத்தீடானார்களாதலால் அவர்கள் தங்கள் சத்துருக்களுக்கு முன் நிற்க மாட்டாமல் ஓட்டம் பிடித்தார்கள். நீங்கள் அந்த அக்கிரமத்தைக் கட்டிக் கொண்டவனைத் தண்டனை பண்ணும் வரைக்கும் நாம் உங்களோடு இருப்பது கூடாது.

13. அப்படியிருக்க, நீ எழுந்திரு! சனங்களைப் பரிசுத்தம் பண்ணு. அவர்களுக்கு நீ சொல்ல வேண்டியது யாதெனில்: (சனங்களே) நாளைய தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பார்த்து: இஸ்றாயேலே, சாபம் உன் நடுவில் இருக்கிறதாகையால் இந்தத் தோஷம் யாராலே வந்ததோ அவன் உன்னிடத்திலே நின்று நிர்மூலமாகுமட்டும் நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக நிற்பதில்லை.

14. நாளைக்குக் காலமே நீங்கள் கோத்திரங் கோத்திரமாய் வரக் கடவீர்கள். அப்பொழுது எந்தக் கோத்திரத்தின் மேலே திருவுளச் சீட்டு விழுந்திருக்குமோ, அந்தக் கோத்திரத்தாரில் ஒவ்வொரு வம்சமும், வம்சத்தில் ஒவ்வொரு குடும்பமும் குடும்பத்தில் ஒவ்வொரு புருஷனும் கிட்ட வர வேண்டும்.

15. அப்புறங் குற்றவாளியாக எவன் குறிக்கப் பட்டிருப்பானோ அவன் கர்த்தரின் உடன்படிக்கையை மீறி இஸ்றாயலரிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியால் அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப் படக் கடவதென்று திருவுளம் பற்றினார் என்பாய் (என்றார்.)

16. அந்தப்படி ஜோசுவா அதிகாலமே எழுந்திருந்து இஸ்றாயேலியரைக் கோத்திரங் கோத்திரமாக வரப் பண்ணித் திருவுளச் சீட்டுப் போட்டான். யூதா கோத்திரமே கண்டுபிடிக்கப் பட்டது.

17. பிறகு யூதா கோத்திரத்தின் ஒவ்வொரு வம்சமும் வந்த போது அவைகளுக்குள்ளே ஜாரே வம்சங் கண்டுபிடிக்கப் பட்டது. மறுபடியும் குடும்பங்களை விசாரிக்கையில் ஜப்தி குடும்பம் குறிக்கப் பட்டது.

18. இவனுடைய வீட்டுப் புருஷர்களைப் பிரித்துப் பேர் பேராக அழைத்துச் சோதித்துப் பார்த்தபோதோவெனில் யூதா கோத்திரத்து ஜாரேயின் குமாரனான ஜப்திக்கு மகனாயிருந்த கர்மீக்குப் பிறந்த ஆக்கானென்பவன் வெளிப்படுத்தப் பட்டான்.

19. அப்பொழுது ஜோசுவா ஆக்கானை நோக்கி: பிள்ளாய், நீ இப்பொழுது இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து; அவருக்கு முன்பாக ஒன்றும் ஒளியாமல் நீ செய்த பாவத்தை எனக்குச் சொல்லு.

20. அப்பொழுது ஆக்கான் ஜோசுவாவுக்குப் பிரத்தியுத்தாரமாக: மெய்யாகவே நான் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன். எப்படியயன்று கேட்டால்:

21. கொள்ளையிலே மகா நேர்த்தியான சிவப்புச் சால்வையும், இருநூறு வெள்ளிச் சீக்கலையும், ஐம்பது சீக்கல் நிறையுள்ள ஒரு பொன் பாளத்தையும் நான் கண்டு அவைகளை இச்சித்து எடுத்துக் கொண்டு போய் என் கூடாரத்தின் மத்தியிலே பூமிக்குள் மறைத்து விட்டு வெள்ளியையும் பள்ளத்திலே வைத்துப் புதைத்தேன் என்றன்.

22. உடனே ஜோசுவா ஆட்களை அனுப்பினான். இவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சோதித்துப் பார்க்கையில் எல்லாவற்றையும் ஒரே ஸ்தலத்திலே கண்டுபிடித்தார்கள். வெள்ளியும் அங்கேதானிருந்தது.

23. அவைகளைக் கூடாரத்திலிருந்து எடுத்து ஜோசுவாவினிடத்திலும், இஸ்றாயேலியரின் சகல புத்திரர் இடத்திலும் கொண்டு வந்து பிறகு கர்த்தருடைய சந்நிதியில் போட்டார்கள்.

24. அப்பொழுது ஜோசுவாவும் இஸ்றாயேலியர் எல்லாருங் கூட ஜாரே குமாரனான ஆக்கானையும், அங்கே வெள்ளியையும், சால்வையையும், பொன் பாளத்தையும், அவனுடைய குமாரர் குமாரத்திகளையும், அவன் ஆடு மாடு கழுதைகளையும், அவன் கூடாரத்தையும், அவனுடைய தட்டுமுட்டுகளையும் பிடித்து ஆக்கோரென்னும் பள்ளத்தாக்குக்குக் கொண்டு போனார்கள்.

25. அங்கே ஜோசுவா: நீ எங்களைக் கலங்கப் பண்ணினதினால் இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப் பண்ணுவாராக என்றான். எனவே இஸ்றாயேலியர் யாவரும் அவன் மேல் கல்லெறிந்து அவனுக்கு உண்டானவையயல்லாம் அக்கினியில் சுட்டெரித்து,

26. பிறகு மிகுதியான கற்களை அவன் மேலே போட்டு மூடினார்கள். அந்தக் கற்குவியல் இந்நாள் வரையிலும் இருக்கிறது. அதினாலே கர்த்தருடைய கோபத்தின் உக்கிரமம் அவர்களை விட்டு நீங்கிற்று. அதுபற்றி அவ்விடம் இந்நாள் வரைக்கும் ஆக்கோர் பள்ளத்தாக்கென்னப் படும்.