சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 06

சிநேகிதனைக் கைவிடலாகாது.

1. உன் அயலானுக்கு சிநேகிதனா யிருப்பதற்குப் பதிலாய் அவன் எதிரியாகி விடாதே; ஏனெனில், தீயவன் கண்டனத்தையும் அவமானத்தையுமே சுதந்தரிப்பான்; அவ்வாறே காய்மகாரியும் இரட்டை நாககு உடையவனுமான பாவிக்கும் சம்பவிக்கும்.

2. மடமையால் உன் பலம் நசுக்கப் படாதபடி, காளையைப் போல் உன் ஆத்துமத்தின் எண்ணங்களில் உன்னை உயர்த்திக்கொள்ளாதே.

3. அது உன் இலைகளைத் தின்று, உன் கனிகளை அழித்துவிடும்; வனாந்தரத்தில் நிற்கும் பட்ட மரத் தைப் போல விடப்படுவாய்.

4. ஏனெனில், ஒரு தீய ஆத்துமம் தன்னைக் கொண்டிருப்பவனை அழித்து, அவனை அவனுடைய சத்துராதிகளின் சந்தோஷமாக ஆக்கி விடும், அது அவனை அக்கிரமிகளின் கூட்டத்தில் சேர்த்து விடும்.

5. இனிய சொல் சிநேகிதரைப் பெருகச் செய்யும்; பகையாளிகளைச் சாந்தப்படுத்தும். நல்ல மனிதனிட முள்ள கனிவுள்ள நாவு நன்மை களைப் பெருகச் செய்யும்.

6. அநேகரோடு சமாதானமாயிரு; ஆனால் ஆயிரத்திலொருவன் உன் ஆலோசனைக்காரானாயிருக்கக் கடவான்.

7. ஒருவனை சிநேகிதனாக்க நீ விரும்பும்போது அவனை ஏற்றுக் கொள்ளுமுன் பரிசோதித்துப் பார்; எளிதில் அவனை நம்பி விடாதே.

8. ஏனெனில் சுயநலத்தை நாடும் சிநேகிதனுமுண்டு; அவன் உன் துன்ப காலத்தில் நிலைத்திருக்க மாட்டான்.

9. எதிரியாய் மாறும் சிநேகிதனுமுண்டு; மேலும், பகையையும் சச்சரவும் நிந்தையுங் காட்டும் சிநேகிதனுமுண்டு.

10. பந்தியில் உடனிருக்கும் சிநேகிதனுமுண்டு; ஆனால் அவன் துன்ப நாளில் நிலைப்பவனல்ல.

11. பிரமாணிக்கமாய் நிலைத்திருக்கும் சிநேகிதனோ உனக்கு உன்னைப் போலிருப்பான்; உன் வீட்டார் நடுவில் நம்பிக்கையோடு செயல்படுவான்.

12. அவன் உனக்கு முன்பாகத் தன் னைத் தாழ்த்தினாலும், உன் முகத் தினின்று தன்னை மறைத்துக் கொண் டாலும் நீ எப்போதும் அவனோடு ஒருமித்த சிநேகம் கொண்டிருப்பாய். 

13. உன் சத்துராதிகளை அகற்றி உன் சிநேகிதர்களின் மீது கருத்தாயிரு.

14. பிரமாணிக்கமுள்ள சிநேகிதன் பலமான காவலுக்குச் சமானம்; அவனைக் கண்டடைந்தவன் பொக் கிஷத்தைக் கண்டவன்போலாவான்.

15. பிரமாணிக்கமான சிநேகித னோடு எதையும் ஒப்பிட இயலாது; அவனுடைய பிரமாணிக்கத்தின் நன்மைத்தனத்திற்கு நிறைந்த பொன் னும் வெள்ளியும் நிகரல்ல.

16. பிரமாணிக்கமுள்ள சிநேகிதன் உயிரும், அழியாமையும் தரும் மருந் தைப் போல் இருக்கிறான். ஆண்டவ ருக்குப் பயப்படுகிறவர்கள் அவனைக் கண்டடைவார்கள்.

17. சர்வேசுரனுக்குப் பயப்படு கிறவனும் அவ்வாறே நல்ல நட்பைக் கொண்டிருப்பான், ஏனெனில் அவனைப் போலவே அவன் சிநேகிதனுமிருப்பான்.

18. என் மகனே! வாலிபமுதல் நற்போதனைகளை ஏற்றுக்கொள்; அப்போது வயோதிகத்திலும் ஞானத்தைக் கண்டடைவாய்.

19. உழுது, விதைக்கும் ஒருவனைப் போல் அதனிடம் வந்து, அதன் நற்கனிகளுக்காகக் காத்திரு.

20. ஏனெனில் அதைக் குறித்து வேலை செய்வதில், நீ கொஞ்சமாக உழைப்பாய், ஆனால் விரைவாக அதன் கனிகளை உண்ணுவாய்.

21. நல்லறிவில்லாத மனிதருக்கு ஞானமானது எவ்வளவோ கசப்பா யிருக்கிறது; புத்தியீனன் தொடர்ந்து அதைக் கொண்டிருக்க மாட்டான்.

22. இந்த ஞானம் அவர்களுக்கு மனிதர் பலத்தைச் சோதிக்கும் பார மான கல் போலாகும்; அவர் விரைவில் அதைத் தங்களிடமிருந்து வீசியெறிந்து விடுவார்கள்.

23. ஏனெனில், ஞானம் தன் பெயருக் கேற்றதாயிருக்கின்றது; அநேகருக்கு அது வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆனால் தன்னைப் பற்றித் தெரிவிக் கப்பட்டவர்களிடமோ அவர்கள் தேவ காட்சியைப் பெறும் வரை யிலும் நிலைத்திருக்கின்றது.

24. என் மகனே கேள்! புத்தியுள்ள ஆலோசனையை ஏற்றுக்கொள்; என் யோசனையைத் தள்ளிவிடாதே.

25. அதன் விலங்குகளில் உன் கால் களையும், அதன் சங்கிலிகளில் உன் கழுத்தையும் பிணைத்துக்கொள்.

26.தோளைச் சாய்த்து அதைச் சுமந்துகொள்; அதன் கட்டுகளால் நீ சலிப்புக் கொள்ளாதே.

27. உன் முழு மனதோடு அதனிடம் வந்து, உன் முழு வலிமையோடும் அதன் வழிகளைக் காத்துக்கொள்.

28. அதைத் தேடு, அப்போது அது உனக்கு அறிவிக்கப்படும், அதைப் பெற்றுக்கொண்டபின், அதைப் போக விட்டுவிடாதே.

29. ஏனெனில், இறுதிக் காலத்தில் அதில் இளைப்பாற்றியைக் காண் பாய்;அதுவே உன் சந்தோஷமாக மாற்றப்படும்.

30. அப்போது அதன் விலங்குகள் உன் பலத்த காவலும் உன் உறுதியான அஸ்திவாரமுமாயிருக்கும். அதன் சங்கிலியோ உன் மகிமையின் மேலாடையாயிருக்கும்.

31. ஏனெனில், சீவியத்தின் அழகு அதிலுண்டு; அதன் கட்டுகள் நலமாக்கும் கட்டுகளாம்.

32. அதை நீ மகிமையின் மேலாடையாய் அணிந்துகொள்வாய்; அதை மகிழ்ச்சியின் மணிமுடியாக உன் சிரசில் தரித்துக்கொள்ளுவாய்.

33. என் மகனே! நீ என்னிடம் உன் மனதைத் திருப்புவாயானால், கற்றுக் கொள்வாய்; உன் மனதை ஈடுபடுத்து வாய் என்றால், ஞானியாவாய். 

34. நீ செவிசாய்க்க விரும்புவா யானால், போதகத்தைப் பெற்றுக் கொள்வாய்; கேட்கப் பிரியப்படுவா யானால், ஞானியாவாய்.

35. ஞானமுள்ள முதியோருடைய கூட்டத்தில் சேர்ந்துகொள்; கடவு ளைப் பற்றிய ஒவ்வொரு உரை யையும் நீ கேட்கும்படியாகவும், துதியின் வார்த்தைகள் உன்னிட மிருந்து தப்பாதபடியும், உன் இருதயத் திலிருந்து அவர்களுடைய ஞானத் தோடு உன்னைச் சேர்த்துக் கொள். 

36. புத்தியுள்ள ஒரு மனிதனை நீ கண்டால் அதிகாலையில் அவனிடம் போ; உன் பாதம் அவனுடைய வாசற்படிகளில் தேயக்கடவது.

37. சர்வேசுரன் கட்டளைகளின் மீது உன் சிந்தனைகள் இருக்கக் கடவது; தொடர்ந்து அவருடைய கட்டளைகளைத் தியானித்துக் கொண்டிரு; அவர் உனக்கு ஓர் இருதயத்தைத் தருவார். ஞானத்தின் மீதான ஆசை உனக்குக் கொடுக்கப் படும்.