ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 06

எரிக்கோ பட்டணம் முற்றுகைப் போடப்பட்டதும்--பிடிக்கப் பட்டதும்-இராக்காப் என்பவள் மீட்டு இரட்சிக்கப் பட்டதும்.

1. இஸ்றாயேல் புத்திரருடைய பயத்தைப் பற்றி எரிக்கோ அரணிக்கப் பட்டதும், அடைக்கப் பட்டதுமாயிருந்து, வெளியே போகவும், உள்ளே வரவுந் துணிந்தவர்கள் இல்லை.

2. கர்த்தர் ஜோசுவாவை னோக்கி: இதோ நாம் எரிக்கோவையும், அதின் அரசனையும், அதின் வீரமுள்ள போர்ச் சேவகர்களையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தோம்.

3. யுத்த புருஷராகிய நீங்கள் எல்லோரும் தினம் ஒரு தரம் பட்டணத்தைச் சுற்றி வாருங்கள். இப்படியே ஆறு நாள் செய்யக் கடவீர்கள்.

4. ஏழாம் நாளிலோ, ஏழு ஆசாரியர் ஜூபிலி காலத்தில் வழங்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்து உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் போக வேண்டும். நீங்கள் அன்றைக்கு ஏழு தரம் பட்டணத்தைச் சுற்றி வருவீர்கள். அந்நேரத்தில் ஆசாரியர் எக்காளங்களை ஊத வேண்டும்.

5. அவர்கள் எக்காளத்தால் முதலில் நெடுந்தொனியையும், பின்னே அடுத்தடுத்துப் பல தொனியையும் இடுவார்கள். அப்படி சப்திக்கக் கேட்கும்போது நீங்களெல்லோரும் கூடி மகா ஆரவாரமாய் ஆர்ப்பரித்துக் கூவக் கடவீர்கள். அப்போது பட்டணத்தின் அலங்கம் அஸ்திவாரத்தோடு இடிந்து விழும். உடனே சனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக உள்ளே போகக் கடவார்கள் (என்றார்.)

6. அந்தப் படியே நூனின் குமாரனான ஜோசுவா ஆசாரியரை அழைத்து: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு போங்கள். ஜூபிலி காலத்திற்கு வழங்கிய ஏழு எக்காளங்களையும் பிடித்து வேறு ஏழு ஆசாரியர் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக நடக்கக் கடவீரென்று சொன்னான்.

7. பிறகு அவன் சனங்களையும் பார்த்து: நீங்கள் யுத்த சன்னத்தராயிருந்து கர்த்தருடைய பெட்டிக்கு முன் நடந்து பட்டணத்தைச் சுற்றி வாருங்களென்று ஆக்கியாபித்தான்.

8. இப்படி ஜோசுவா சனங்களிடத்திற் பேசின மாத்திரத்திலே ஆசாரியர் தங்கள் எக்காளங்களை ஊதி கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடக்கத் தொடங்கினர்.

9. ஆயுதபாணிகளான வீரர்கள் அனைவரும் பெட்டிக்கு முந்தியும் சாதாரண சனங்கள் பிந்தியும் நடக்கவே எக்கா ளங்கள் ஆரவாரமாய்ச் சப்திக்கத் துவங்கினது.

10. ஆனால் ஜோசுவா சனங்களுடன் சொல்லியிருந்தது என்னவெனில்: ஆர்ப்பரித்துக் கூவுங்களென்று நான் உங்களுக்குச் சொல்லும் வரைக்குமே நீங்கள் ஆடம்பரம் ஒன்றுங் காட்டாமல் ஒரு வார்த்தையுஞ் சொல்லாமல் சுத்த மெளனிகளாயிருக்கக் கடவீர்கள்.

11. அப்படியே தினம் ஒரு தரம் கர்த்தருடைய பெட்டியைத் தூக்கிப் பட்டணத்தைச் சுற்றி வருவார்கள். பிறகு திரும்பவே பாளையத்தில் வந்து இராத் தங்குவார்கள்.

12. அதிகாலமே ஜோசுவா எழுந்திருக்கையில் ஆசாரியர் கர்த்தரின் பெட்டியைச் சுமந்து கொண்டு போவார்கள்.

13. ஜூபிலி காலத்தில் வழங்கும் எக்காளங்களைப் பிடித்த ஏழு ஆசாரியர்களும் ஊதிக் கொண்டு கர்த்தருடைய பெட்டிக்கு முன் நடப்பார்கள். ஆயித சன்னத்தரான போர் வீரர்கள் அவர்களுக்கு முந்திச் செல்லவே சாதாரண சனங்கள் பெட்டிக்குப் பிந்தி நடந்து கொம்புகளை ஊதிக் கொண்டிருப்பார்கள்.

14. (அவ்விதமே) இரண்டாம் நாளிலு; அவர்கள் பட்டணத்தை ஒரு தரம் சுற்றி வந்து பாளையத்துக்குத் திரும்பினார்கள். இப்படி ஆறு நாளுஞ் செய்து வந்தார்கள்.

15. ஏழாம் நாளிலோவெனில் அதிகாலமே எழுந்திருந்து முந்திக் கற்பிக்கப் பட்ட பிரகாரமே அவர்கள் ஏழு தரமும் பட்டணத்தைச் சுற்றி வந்தார்கள்.

16. ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில் ஜோசுவா சனங்களை நோக்கி: ஆர்ப்பரித்துக் கூவுங்கள்; ஏனென்றால் கர்த்தர் உங்களுக்குப் பட்டணத்தை ஒப்புக் கொடுத்தார்.

17. ஆனால் இந்தப் பட்டணமும் அதிலுள்ள யாவுங் கர்த்தருக்குச் சாபத் தீட்டாயிருக்கக் கடவதாக.. நாம் அனுப்பின ஆட்களை இராக்காப்பென்னும் விலைமாது மறைத்து வைத்த படியால் அவளும் அவளோடு வீட்டுக்குள்ளிருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக் கடவர்.

18. நீங்களோ தோஷத்திற்கு ஆளாகாத படிக்கும், இஸ்றாயேலின் பாளயமுஞ் சாபத் தீட்டாகி அலங்கோலையாய்ப் போகாதபடிக்கும் நீங்கள் விலக்கப் பட்டவைகளில் ஒன்றையும் எடுக்க வேண்டாம், எச்ச ரிக்கை!

19. சகல பொன்னும் வெள்ளியும், வெண்கலத்தினாலாவது, இரும்பினாலாவது செய்யப் பட்ட பாத்திரங்களும் கர்த்தருக்குப் (பரிசுத்தமென்று) பிரதிஷ்டை செய்யப் பட்டு கர்த்தருடைய பொக்கிஷத்திலே சேர்க்க வேண்டுமென்றான்.

20, என்ற மாத்திரத்தில் இஸ்றாயேலயர் ஆரவாரமாய் ஆர்ப்பரித்துக் கூவ எக்காளங்கள் சத்தமாய் முழங்கச் சாதாரண சனங்களெல்லோரும் கேட்டுங் கேளாமலிருக்கையிலே அதோ மதில்கள் கடகடவென்று இடிந்து விழுந்தன. உடனே சனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் பிரவேசித்து அதைப் பிடித்து,

21. அதிலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், கிழவர்களையும் கொன்றுபோட்டு ஆடு மாடுகளையும் கழுதைகளையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

22. வேவு பார்க்கும்படி முன்னே அனுப்பப் பட்டிருந்த இரண்டு புருஷரை நோக்கி ஜோசுவா சொன்னதாவது: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய் நீங்கள் அவளுக்கு ஆணையிட்ட பிரகாரம் அவளையும் அவளுக்குண்டான யாவையும் அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்.

23. அந்த வாலிப மனிதர்கள் அந்தப்படி போய் இராக்காபையும், அவள் தாய் தந்தையரையும், அவள் சகோதரர்களையும், உறவின் முறையார்களையும், அவளுக்குண்டான தட்டுமுட்டு முதலியவைகளுடன் வெளியே அழைத்துக் கொண்டு வந்து இஸ்றாயேல் பாளையத்துக்குப் புறம்பே இருக்கும்படி திட்டம் பண்ணினார்கள்.

24. (இஸ்றாயேலியர்) பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். பொன்னும், வெள்ளியும், வெண்கலத்தினாலேயாவது, இரும்பினாலேயாவது அமைத்த பாத்திரங்களும் மாத்திரமே காப்பாற்றப்பட்டுக் கர்த்தருடைய பொக்கிஷத்தில் பரிசுத்தமென்று சேர்க்கப் பட்டன.

25. எரிக்கோவை வேவு பார்க்க அனுப்பப் பட்ட ஆட்களை இராக்காப் என்னும் விலைமாது மறைத்து வைத்த படியினாலே ஜோசுவா அவளுக்கும் அவள் தகப்பன் வீட்டாருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்து அவளுக்குள்ள யாவையுங் காப்பாற்றினான். அவர்கள் இந்நாள் வரையிலும் இஸ்றாயேல் நடுவிலே குடியிருக்கிறார்கள். அக்காலத்திலே ஜோசுவா சபதங் கூறி;

26. இந்த எரிக்கோ பட்டணத்தை மறுபடியுங் கட்ட எவன் துணிவானோ அவன் கர்த்தருடைய சமூகத்திலே சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவான்! அவன் அதின் அஸ்திவாரத்தைப் போடுகையில் தன் மூத்த குமாரனையும், அதன் வாசல்களை வைத்து வருகையில் தன் இளைய மகனையும் சாகக் கொடுக்கக் கடவன் என்று சாபம் போட்டான்.

27. இவ்விதமாய்க் கர்த்தர் ஜோசுவாவோடு கூட இருந்தார். அவனுடைய கீர்த்தி தேசம் எவ்விடத்துமே பரம்பிற்று.