ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 05

கானானையர் பயப்பட்டதும் - ஜோசுவா மறுபடியும் விருத்தசேதனஞ் செய்ய வேண்டியதென்று கற்பித்ததும் --கல்கலாவில் பாஸ்காவை ஆசரித்ததும் -- மன்னா முன்போல் பெய்யாமல் நின்று விட்டதும் -- ஜோசுவாவுக்குத் தேவதூதன் தெரிசனமானதும்.

1. இஸ்றாயேல் புத்திரர் நதியைக் கடந்து தீருமட்டும் கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப் போகப் பண்ணினாரென்கிற சமாச்சாரம் கேள்வியுற்ற போது, யோர்தானுக்கு அப்பாலுள்ள மேல்கரையில் குடியிருந்த அமோறையரின் சகல அரசர்களும் பெரிய கடலுக்குச் சமீபமான நாடுகளில் குடியிருந்த கானானையரின் சகல இராசாக்களும் இஸ்றாயேல் புத்திரருக்குப் பயந்து சித்தங் கலங்கித் தைரியமற்றுச் சோர்ந்து போனார்கள்.

2. அக்காலத்திலே கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: நீ உனக்கு கற்கத்திகளை உண்டு பண்ணி இன்னொரு விசை இஸ்றாயேல் மக்களை விருத்தசேதனம் பண்ணுவென்றார்.

3. கர்த்தர் கற்பித்தபடி அவன் செய்து சுன்னத்தென்னப் பட்ட மேட்டின் மேல் இஸ்றாயேல் மக்களை விருத்தசேதனம் பண்ணினான்.

4. இவ்விரண்டாம் விருத்தசேதனத்தின் முகாந்தரமேதென்றால்: எஜிப்த்திலிருந்து புறப்பட்டிருந்த சனத்து ஆண்மக்களாகிய யுத்த வீரரெல்லோரும் வனாந்தரத்தில் நெடுநாளாய்த் திரிந்து கொண்டிருந்த பிற்பாடு அவ்விடத்தில்தானே மாண்டு போயினர்.

5-6. அவர்களெல்லாம் விருத்தசேதனம் பண்ணப் பட்டிருந்தவர்களே. ஆனால் அவர்கள் கர்த்தருடைய சப்தத்திற்குச் செவி கொடாதவர்களானபடியால் ஏற்கனவே கர்த்தர் அவர்களை நோக்கி: பாலுந் தேனுமோடுகிற தேசத்தை நாம் உங்களுக்குக் காணக் கொடுக்க மாட்டோமென்று ஆணையிட்டிருந்தார். (இந்தச் சபதத்துக்கேற்றபடி) அவர்கள் மாளுமட்டும் நாற்பது வருஷ யாத்திரைக் காலமாய் நிர்மானுஷ்ய விஸ்தாரம் பொருந்திய வனாந்தரத்திலே பிறந்தவர்கள் இன்னும் விருத்தசேதனம் பண்ணப்படாமலிருந்தார்கள்.

7. இவர்கள் தங்கள் பிதாக்களுக்குப் பதிலாய் எழும்பியிருந்தார்கள். ஜோசுவா அவர்களை விருத்தசேதனம் பண்ணினான். உள்ளபடி வழியிலே எவரும் அவர்களை விருத்தசேதனம் பண்ணாததினால் அவர்கள் பிறந்த கோலமாய் நுனித்தோலை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

8. சனங்களெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்பட்டுத் தீர்ந்த பிற்பாடு அவர்கள் குணமாகுமட்டும் பாளையம் வாங்காமல் அவ்விடத்தில்தானே தரித்திருந்தார்கள்.

9. அப்போது கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: எஜிப்த்தின் நிந்தை உங்கள் மேலிருந்தது. இன்று அதை நாம் ஒழித்துப் போட்டோம் என்றார். ஆனபடியால் அந்த ஸ்தலம் இந்நாள் வரைக்கும் கல்கலா என்னப் படுகிறதாம்.

10. அது நிற்க, இஸ்றாயேல் புத்திரர் கல்கலாவிலே தரித்துக் கொண்டு மாதத்தின் பதினாலாந் தேதி அந்தி நேரத்தில் எரிக்கோவின் சமவெளியில்தானே பாஸ்காவை ஆசரித்தார்கள்.

11. பாஸ்காவின் மறுநாளில் அவர்கள் பூமியின் விளைவுகளையும், புளிப்பில்லாத அப்பங்களையும், அந்த வருஷத்திய (வாற்கோதுமையின்) மாவையும் புசித்தார்கள்.

12. அவர்கள் தேசத்தின் விளைவுகளைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது. இனி இஸ்றாயேல் மக்களுக்கு மன்னா இல்லாமற் போயிற்று. ஆதலால் அது முதல் கானான் தேசத்து வருஷாந்தர விளைவுகளை அவர்கள் புசிக்கத் துடங்கினார்கள்.

13. பின்னும் ஜோசுவா எரிக்கோவுக்கு வெளியிலிருந்த நாளில் ஒரு நாள் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ ஒருவர் உருவிய பட்டயங் çகில் ஏந்தித் தனக்கு எதிரே நிற்பது கண்டான். ஜோசுவா சமீபித்துப் போய்: நீர் யார்? எம்மவரைச் சேர்ந்தவரோ? என் சத்துருக்களைச் சேர்ந்தவரோ? என்று வினவினான்.

14. அதற்கு அவர்: அல்ல ; நாம் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தோம் என்றார்,

15. அதைக் கேட்டு ஜோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்து அவரைப் பார்த்து: என் ஆண்டவர் தம் அடிமையானவனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்க,

16. அவர் உன் கால்களில் பாதரட்சையைக் கழற்றிப் போடு. ஏனெனில் நிற்கின்ற இடம் மகா பரிசுத்தமானது என்று கற்பித்தார். ஜோசுவா அந்தக் கட்டளைப் பிரகாரம் செய்தான்.