யோனாஸ் ஆகமம் - அதிகாரம் - 04

யோனாசின் வருத்தம்.

1. யோனாஸ் என்போர் பெருமிதமான வருத்தங் கொண்டவராய்ச் சினந்து,

* 1-ம் வசனம். வருத்தங் கொண்டவராய்--தான் கூறியது நிறைவேறாததால் தன்னைப் பொய்த் தீர்க்கதரிசி என உலகம் நினைக்குமென்று வருத்தங் கொண்டார்.

2. ஆண்டவரை நோக்கி விண்ணப்பஞ் செய்து: என் நாட்டில் யானிருக்கையிலேயே, இஃதை யான் விளம்பினேனன்றோ? இதை முன்னிட்டே யான் தார்சீசுக்கு ஓடிப்போகப் பிரயத்தனஞ் செய்தேன்; ஏனெனில், நீர் சாந்தமுள்ள கடவுளரெனவும், நீர் தயையுளராகவும், பொறுமையுளராகவும், மிகுந்த இரக்கமுடையராகவும், பாபங்களை க்ஷமிக்கிறவராகவும் இருக்கின்றீர் எனவும் யானறிவேன்.

* 2-ம் வசனம். சங். 85:5; யோவேல் 2:12.

3. இப்போது ஆண்டவரே! என் ஆத்துமாவை என்னினின்று பிரித்துவிட உம்மை மன்றாடுகிறேன்; ஏனெனில், சீவியத்தைவிட மரணம் எனக்கு உசிதமா மென்றார்.

4. நீ நியாயமாகவே கோபிப்பதாய் எண்ணுகின்றனையோ என ஆண்டவர் அவரைக் கேட்டனர்.

5. பட்டணத்தினின்று யோனாஸ் புறப்பட்டு, நகரத்துக் கீழ்ப்பக்கத்தில் (உயரமான விடத்தில்) போய் உட்கார்ந் தார்; அங்கு தனக்கோர் (தழைப்) பந்தற் சமைத்து, அதின் நிழலில் அமர்ந்து, பட்டணத்துக்கு என்ன சம்பவிக்கிறது என அறியுந்தனையும் (காத்திருந்தார்.)

6. தேவனாகிய ஆண்டவர் ஓர்வித கொவ்வைச் செடியைக் கிளம்பச் செய்தனர். அது யோனாசுக்கு நிழலிட வும், (அவர் கானலால் வருந்தினமையால்) அவரைப் பாதுகாக்கவும் அவர் சிரசுக்கு நேரே படர்ந்தது; யோனாஸ் என்போ ரும் கொவ்வைச் செடியைக் குறித்துப் பகு சந்தோஷ பூரிப்புக் கொண்டனர்.

7. ஆண்டவர் மறுநாள் வைகறை யில் ஒரு புழுவை அனுப்பினர்; அது கொவ்வைச் செடியின் வேரை மேய்ந்து விட, அது உலர்ந்து போயிற்று.

8. பின்பு சூரியன் மேல் கிளம்பவே, ஆண்டவர் உக்கிரமான நெருப்பு காற்றுக்கு உத்தரவு செய்தனர்; யோனாஸ் சிரசில் வெய்யோன் அடிக்க, அவர் திக்குமுக்காடி, தன் உயிருக்கு மரணத்தைக் கோரி, உயிரைவிட மரணம் எனக்கு மிகு நலமே என்றார்.

9. அப்போது ஆண்டவர் யோனாசைப் பார்த்து: இந்தக் கொவ்வைச் செடியைப் பற்றி நீ ஞாயமாகச் சினங் கொள்வதாய் எண்ணுகின்றனையே எனக் கேட்டனர்; அதற்கு அவர்: மரணத்தைக் கோரும்படியான விதமாய் ஞாயத்தோடேயே கோபித்தேன் என்றார்.

10. ஆண்டவர் அவரைப் பார்த்து: உன் பிரயாசத்தால் உண்டாகாததும், வளர நீ ஒரு சிரமமும் எடுத்துக் கொள்ளாததுமாகிய ஒரு இரவில் கிளம்பி ஒரு இரவில் மாண்டுபோன கொவ்வைச் செடிக்காக (இத்தனைத் துயரப் படுகின்றனையே.

11. வலது கரம் எது இடது கரம் எதுவெனப் பகுத்தறியாத நூற்றிருபதினாயிரம் பேர்களும், பெருந் தொகையதாகிய மிருகங்களும் அடங்கியிருக்கும் மாநகராகிய நினிவுக்கு யாம் பொறுதி தராதிருப்போமாவென்றார்.


யோனாஸ் ஆகமம் முற்றிற்று.