மலாக்கியா ஆகமம் - அதிகாரம் - 04

பொதுத் தீர்வை.

1. ஏனெனில் சூளைபோன்று தீ பற்றிய நாளொன்றுதிக்கும்; சமஸ்த அகங்காரிகளும் அபகீர்த்தியஞ் செய்வோர் யாவருஞ் சருகெனக் கிடப்பர்; வரவேண்டிய நாளானது வேரையும், கருவையும் விடாது அவர்களைச் சுட்டெரிக்குமெனச் சேனைகளின் தேவனார் இயம்புகின்றனர்.

2. நமது நாமகரணத்தைப் பயபக்தியாய்ப் புசிக்கும் உங்களுக்கு நீதியின் சூரியகிரணம் உதயமாகும்; அதின் செட்டைகளில் ஈடேற்றம் (கிடைக்கும்;) நீங்கள் கிளம்பி, கிடையினின்று புறப்பட்ட இளங்கன்றுகளெனத் துள்ளுவீர்கள்.

* 2-ம் வசனம். லூக். 1:78.

3. நாம் (நீதி) செலுத்தும் அந்நாளில், உங்கள் உள்ளங்காலடியில் அக்கிரமிகள் சாம்பலாய்க் கிடக்க, அவர்களை நீங்கள் துவைத்திடுவீர்கள் என்கிறார் சேனைகளின் நாயகர்.

4. (நம்) கற்பனைகளையும், முறைமைகளையும் இஸ்றாயேல் பிரசையனைத்தும் பிரசித்தஞ் செய்ய ஒரேப் மலைக்கண் நமது தாசன் மோயீசனுக்கு அருளிச் செய்த (வரி) வேதத்தைச் சிந்தை கொள்ளுங்கள்.

* 4-ம் வசனம். யாத். 20; உபா. 4:5,6.

5. மகத்துவமுடையதும், பயப் பிராந்தி கொள்ளத்தக்கதுமான ஆண்டவருடைய நாள் வருமுன், யாம் உங்களுக்கு எலியாஸ் தீர்க்கவசனரை அனுப்புவோம்.

* 5-ம் வசனம். மத்.17:10; மாற். 9:10; லூக். 1:17.

6. யாம் வந்து பூதலத்தைச் சபித்து அதோகதியாக்காதிருத்தல் பொருட்டு, அவர் பிதாக்களுடைய இருதயத்தைப் புதல்வரிடத்தும், புத்திரர் இருதயத்தைப் பிதாக்களிடத்துமாய்ச் சேர்த்து வைப்பார்.


மலாக்கியா ஆகமம் முற்றிற்று.