ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 04

யோர்தான் நதியிலிருந்து ஞாபகத்துக்குப் பன்னிரண்டு கற்கள் எடுக்கப் பட்டதும்-வேறு பன்னிரண்டு கற்கள் நதியிலே நாட்டப் பட்டதும்.

1. (ஜனங்கள்) கடந்து தீர்ந்த பின்பு, கர்த்தர் ஜோசுவாவை நோக்கி:

2. நீ ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு,

3. யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் எந்த ஸ்தலத்தில் நிலையாய் நின்றதோ அந்த ஸ்தலத்திலிருந்து அவர்கள் பன்னிரண்டு கருங்கல்லை எடுத்து அக்கரைக்குக் கொண்டு போகும்படிக் கற்பித்து நீங்கள் இன்றிரவில் தங்கியிருக்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்களென்றார்.

4. அந்தப்படி ஜோசுவா இஸ்றாயேல் புத்திரரலே ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொருவராகத் தெரிந்து கொண்டிருந்த பன்னிரண்டு பேரை

5. நோக்கி: நீங்கள் யோர்தானின் நடுவில் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் திரும்பிப் போய் இஸ்றாயேல் புத்திரரின் இலக்கத்திற்குச் சரியாக உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின் மேல் எடுத்துக் கொண்டு வரக் கடவீர்கள்.

6. அது உங்களுக்குள்ளே அடையாளமாக இருக்கும். நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும் போது,

7. நீங்கள்: யோர்தான் நதியைக் கடந்த நாளில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகத் தண்ணீர்கள் வற்றிப் போயின. ஆதலால் இந்தக் கல்லுகள் இஸ்றாயேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளமாக ஸ்தாபிக்கப் பட்டதென்று மறுமொழி சொல்வீரகள் என்றான்.

8. ஜோசுவா கற்பித்தபடி இஸ்றாயேல் புத்திரர் செய்து அவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் யோர்தான் நதி அடி நடுவிலிருந்து இஸ்றாயேல் புத்திரருடைய இலக்கத்துக்குச் சரியாய்ப் பன்னிரண்டு கல்லையயடுத்து அவைகளைப் பாளையம் இறங்கின ஸ்தானம் மட்டும் கொண்டு வந்து அங்கு வைத்தார்கள். 

9, மேலும் யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர் நின்று கொண்டிருந்த இடத்திலே ஜோசுவா வேறு பன்னிரண்டு கல்லுகளை நாட்டினான். அவைகள் அந்நாள் மட்டும் அங்கேயிருக்கிறது.

10. அது நிற்க, ஜோசுவாவோடு மோயீசன் சொல்லியதும், கர்த்தருஞ் சனத்திற்குச் சொல்லக் கற்பித்ததுவெல்லாம் நடந்து தீருமட்டும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டிருந்த ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்று கொண்டிருந்தனர். சனங்கள் தீவிரித்து நதியைக் கடந்து போனார்கள்.

11. சனமெல்லாம் அக்கரைக்குச் சென்ற பின்னரே கர்த்தருடைய பெட்டியுங் கடந்தது. அப்பொழுது ஆசாரியர் சனத்திற்கு முன்பாகப் போனார்கள்.

12. மீளவும் ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் மோயீசன் தங்களுக்குச் சொன்னபடி ஆயுதபாணிகளாய் இஸ்றாயேல் மக்களுக்கு முன்பாகவே நடக்கத் துடங்கினார்கள்.

13. நாற்பதினாயிரம் வீரர் கூட்டங் கூட்டமாகவும், அணியணியாகவும், எரிக்கோவுக்கடுத்த சமமான வெளிகளிலும் நாட்டுப் புறங்களிலும் பாரிக்காவல் போக ஆரம்பித்தார்கள்.

14. அந்நாளிலே கர்த்தர் சகல இஸ்றாயேலியரின் கண்களுக்கு முன்பாகவும் ஜோசுவாவை மேன்மைப் படுத்தினார். அதின் தாற்பரியம்: அவர்கள் மோயீசனுக்குப் பயந்தது போல உயிரோடிருக்குமட்டும் ஜோசுவாவுக்கும் பயந்து நடக்கும்படியாகத் தானே.

15. கர்த்தர் ஜோசுவாவை நோக்கி:

16. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறக் கட்டளையிடுவென்றார்.

17. அந்தப் படி (ஜோசுவா): யோர்தானிலிருந்து கரையேறி வாருங்களென்று அவர்களுக்குக் கற்பித்தான்.

18. அவர்கள் அந்தப்படி செய்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கரைமேலேறிக் கட்டாந்தரையில் நடக்க ஆரம்பித்த மாத் திரத்தில் யோர்தான் தண்ணீர்கள் தங்கள் இடத்திற்குத் திரும்பி முன்போல் ஓடத் துடங்கின.

19. இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாந் தேதியிலே சனங்கள் யோர்தான் நதியிலிருந்து கரையேறிப் புறப்பட்டு எரிக்கோவுக்குக் கீழ்ப்புறமான கல்கலாவிலே பாளையம் இறங்கினார்கள்.

20. அவர்கள் யோர்தானில் எடுத்து வந்த பன்னிரண்டு கற்களை ஜோசுவா கல்கலாவிலே நாட்டி,

21. இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் தகப்பனாரைக் கேட்கும் போது,

22. நீங்கள் அவர்களுக்குப் புத்தி சொல்லி: இஸ்றாயேலியர் கட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்து வந்தார்கள்.

23-24-25. பூமியின் சமஸ்த குடிகளும் கர்த்தருடைய கரம் எல்லாவற்றிற்கும் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்களும் எப்பொழுதுமே உஙகள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தர் முந்நாளிலே செங்கடலின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப் போகப் பண்ணினது போல, அவர் யோர்தானின் தண்ணீருக்கும் அவ்விதமே செய்து நீங்கள் அதனைக் கடந்து தீருமட்டும் உங்களுக்கு முன்பாக அதை வற்றிப்போகப் பண்ணினாரென்று அறிவிக்கக் கடவீர்கள் என்றான்.