உபாகமம் - அதிகாரம் 04

கீழ்ப்படிதலுக்கேற்ற புத்தி போதனைகளும்,-மோயீசன் யோர்தான் நதியின் கீழ்ப்புறத்திலே மூன்று அடைக்கலப் பட்டணங்களை நியமித்ததும். ககீழ்ப்படிதலுக்கேற்ற புத்தி

1. இப்பொழுது, ஓ! இஸ்றாயேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும் படிக்கும் உங்களுக்கு நான் சொல்லி வருகிற கட்டளைகளையும் நியாயங்களையும் உற்றுக் கேளுங்கள்.

2. நான் உங்களுக்குச் சொல்லும் வசனங்களில் ஒன்றுங் கூட்டவும் வேண்டாம். அதில் ஒன்றுங் குறைக்கவும் வேண்டாம். நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளை நீங்கள் அநுசரித்துக் கொள்ளக் கடவீர்கள்.

3. பெல்பெகோரின் விஷயத்திலே கர்த்தர் செய்ததெல்லாவற்றையும் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள். அவர் பெல்பெகோரைக் கும்பிடுகிறவர்களை உங்கள் நடுவிலிராதபடிக்கு அழித்துப் போட்டார் அல்லவா?

4. உங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் பற்றுதலான நீங்களோ இந்நாள் வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.

5. என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கற்பனைகளையும் நீதி முறைமைகளையும் படிப்பித்தேனென்று அறிவீர்கள். ஆகையால் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளப் போகிற தேசத்திலே அவற்றை அநுசரிக்க வேண்டியதாயிருக்கும்.

6.  நீங்கள் அவற்றைக் கைக்கொள்ளுகிறது போதாமல், அந்தப்படி நடந்து கொள்ளவும் வேண்டியது. உங்கள் ஞானமும் உங்கள் விவேகமும் (புறத்துச் ) சனங்களின் முன்பாக எப்படி விளங்கும்? அவர்கள் உங்களுடைய சகல பிரமாணங்களையும் குறித்துச் சொல்லக் கேட்டு: ஆ! இவர்கள் பெரிய சாதி, ஞானிகளும் புத்திசாலிகளுமாயிருக்கிறார்களென்று சொன்னாலே யாகுமன்றோ?

7. நமது தேவனாகிய கர்த்தரை நாம் மன்றாடுகிற போதெல்லாம் அவர் நமதண்டையில்தான் இருக்கிறார். ஆ! நமது தேவனுக்கும் நமக்குமிருக்கிற நெருக்கமான அந்நியோந்நியம் மற்ற எந்தப் பிரபலியமான சாதியாருக்கும் அவர்களுடைய தேவர்களுக்கும் உண்டோ? இல்லை.

8. உள்ளபடியே இந்நாளில் நான் உங்களுக்கு விவரித்துத் தெளிவிக்கும் நீதி ஆசாரங்களையும், நீதியுள்ள கட்டளைகளையும் பெற்றிருக்கிற வேறு சிறந்த பிரசை ஏது!

9. ஆதலால் நீ உன்னையும் உன் ஆத்துமத்தையும் சாக்கிரதையாய்க் காக்கக் கடவாய். நீ கண்களால் கண்ட வார்த்தைகளை மறக்காதே. உன் சீவிய நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு. அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பேரப் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக் கடவாய்.

10. ஒரேப் (மலையிலே) கர்த்தர் என்னை நோக்கி: சனங்களை நம்மி டத்தில் கூடி வரச் செய். அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் பூமியில் உயிரோடிருக்குமளவும் நமக்குப் பயப்படும் படியாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி சொல்லும்படியாகவும் நாம் அவர்களுடன் பேசுவோமென்று சொல்லிய நாளில் நீங்கள் கர்த்தருடைய சமூகத்திற்கு வந்து,

11. மலையின் அடிவாரத்தில் சேர்ந்து நின்றுகொண்டிருக்கும் போது அந்த மலை வானமட்டும் எரிந்து கொண்டிருந்த தையும், மலையின் கொடுமுடியில் இருளும் மேகமும் அந்தகாரமும் வீற்றிருந்ததையும் கண்டீர்கள்.

12. அப்பொழுது கர்த்தர் அக்கினி நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். அவருடைய வாக்குகளின் குரலை நீங்கள் கேட்டீர்களே யயாழிய ஒரு ரூபத்தையும் நீங்கள் கண்டீர்களோ இல்லை.

13. அந்நேரத்தில் அவர் தமது உடன்படிக்கையை உங்களுக்கறிவித்து அதை அநுசரிக்கக் கற்பித்ததுமன்றி இரண்டு கற்பலகைகளில் அவர் எழுதிய பத்து வசனங்களையுந் தந்தார்.

14. அன்றியும் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளப் போகிற தேசத்திலே நீங்கள் அநுசரிக்க வேண்டிய திரு ஆசாரங்களையும் நீதிக் கட்டளைகளையும் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டார்.

15. ஆகையால் உங்கள் ஆத்துமங்களைக் கவனமாய்க் காத்திருங்கள். கர்த்தர் ஒரேபிலே அக்கினி நடுவினின்று உங்களுக்குப் பேசின நாளில் நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

16. ஏனென்று கேட்டால் ஒருவேளை நீங்கள் புத்தி மயங்கிக் கொத்து வேலைச் சுரூபத்தையாவது ஆண் உருவும், பெண் உருவும்,

17. பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், வானத்தில் பறக்கிற பட்சிகளின் உருவும்,

18. தரையில் ஊருகிற பிராணிகளின் உருவும், பூமியின் கீழுள்ள சலங்களில் நீந்தும் மச்சங்களின் உருவும் முதலிய உருவுகளையும் நீங்கள் செய்து தொழுது ஆராதிப்பீர்களென்றும்,

19. கண்களை வானத்துக்கு ஏறெடுத்துச் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை நீ காணும்போது புத்தி தவறி அவற்றை ஆராதித்து உன் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழுள்ள சகல சனங்களுக்கும் உபயோகமாயிருக்கும்படி உண்டாக்கினவைகளுக்கொத்த விக்கிரகத்தை உனக்கு ஏற்படுத்தித் தொழுவாயயன்று எண்ணிக் கர்த்தர் அவ்விதமே செய்தார்.

20. இந்நாளில் இருக்கிறது போல் நீங்கள் தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களைத் தெரிந்து கொண்டு எஜிப்த்தென்னும் நெருப்புக் காளவாயிலிருந்து உங்களைப் புறப்படச் செய்தார்.

21. ஆனால் கர்த்தர் உங்கள் பேச்சுக்களின் நிமித்தம் என் மேல் கோபங் கொண்டு நான் யோர்தானைக் கடந்து போவதில்லையயன்றும், அவர் உங்களுக்குக் கொடுக்கப் போகிற நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை யயன்றும் ஆணையிட்டார்.

22. ஆனபடியால் இந்த ஸ்தலத்திலே நான் சாகப் போகிறேன். யோர்தானைக் கடந்து போவதில்லை. நீங்களோ அதைக் கடந்து போய் அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

23. உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு பண்ணின உடன்படிக்கையை நீ மறந்து கர்ததர் வேண்டாமென்று விலக்கினவைகளில் எவ்விதச் சாயலான விக்கிரகத்தையும் நீ உண்டாக்காத படிக்கு எச்சரிக்கையாயிரு.

24. உள்ளபடி உன் தேவனாகிய கர்த்தர் எரித்துப் பட்சிக்கிற நெருப்பாம்; எரிச்சலுள்ள தேவனாம்!

25. நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று அந்தத் தேசத்தில் வெகுநாள் இருந்த பின்பு நீங்கள் புத்தி கெட்டு உங்களுக்கு யாதொரு விக்கிரகத்தைப் பண்ணி தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்கு அக்கிரமமானதைச் செய்தால்,

26. நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் இராமல் சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்களென்று நான் இந்நேரம் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறோன். உங்களை அவர் சங்கரித்துப் போடுவார்.

27. புறச் சாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார். கர்த்தர் உங்களைக் கொண்டு போய் விடும் சனங்களுக்குள்ளே கொஞ்சம் பேர்களாக மீந்திருப்பீர்கள்.

28. அங்கேயோ மனுஷர் கைவேலையான தேவர்களைச் சேவிப்பீர்கள். காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலுமிருக்கிற கல்லும் மரமுமான தேவர்களே!

29.  ஆயினும் உன் தேவனாகிய கர்த்தரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இருதயத்தோடும் சஞ்சலம் நிறைந்த ஆத்துமத்தோடும் தேடி விரும்புவாயானால் அவர் உனக்கு அகப்படுவார்.

30. ஏனெனில் முன் சொல்லப் பட்ட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடித்த பின்பு கடைசி நாட்களில் உன் கர்த்தரிடத்தில் திரும்பி அவருடைய குரல் சப்தத்திற்குச் செவிகொடுப்பாய்.

31. உள்ளபடி உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவன். அவர் உன்னைக் கைவிடவுமாட்டார். முற்றிலும் அழிக்கவு மாட்டார். உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுப் பண்ணின உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.

32. தேவன் பூமியிலே மனுஷனைப் படைத்த நாள் முதல் உனக்கு முன்னிருந்த பூர்வ நாட்களில் வானத்தின் ஒரு கடைசி எல்லை தொடங்கி அதின் மறு எல்லை மட்டுமுள்ள எவ்விடத்திலும் ஆகிலும் இப்படிப்பட்ட காரியம் நடந்ததுண்டோ, அல்லது எப்போதென்கிலும் கேள்விப்பட்டதுண்டோ என்று விசாரித்துக் கேள்.

33. அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய குரல் சப்தத்தை நீ சாகாமல் கேட்டது போல யாதொரு சனமாவது கேட்டதுண்டோ?

34. அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எஜிப்த்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியயல்லாம் தேவன் மற்றுமுள்ள சனங்களுக்குள்ளே ஒரு சனத்தைத் தமக்கென்று சோதனைகளாலும் அடையாளங்களாலும், அற்புதங்களாலும், யுத்தத்தினாலும், வல்லமையினாலும், ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரமான காட்சிகளாலும் தெரிந்தெடுத்துக் கொள்ள வகை பண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப் பார்.

35. கர்த்தரே தேவன்; அவரையன்றி வேறொருவருமில்லை என்பதை நீ அறியும்படியல்லோ (அவர் அவையயல்லாம் செய்தார்.)

36. உன்னை உபதேசிக்கக் கருதி அவர் வானத்தினின்று தமது குரலோசையை உனக்குக் கேட்கப் பண்ணிப் பூமியிலே தம் உக்கிரமான அக்கினியின் பிரளயத்தை உனக்குக் காண்பித்தார். அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வாக்கியங்களை நீயே கேட்டாய்.

37. உன் பிதாக்களை நேசித்ததினாலும், அவர்களுக்குப் பின் அவர்களின் சந்ததியைத் தெரிந்து கொண்டதினாலும் அவர் தமது மகா வல்லபத்துடன் உனக்கு முன் நடந்து எஜிப்த்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணினார்.

38. உன்னிலும் பலத்த பெரிய சாதிகளை நிர்மூலமாய் அழிக்கும்படி உன்னை அழைத்துக் கொண்டு போய் அவர்களுடைய தேசத்திலே உன்னைப் பிரவேசிக்கப் பண்ணி அந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். இது இந்நாளில் நடக்கிற சங்கதிதானே.

39. ஆகையால் உயர வானத்திலும் தாழ் பூமியிலும் தேவனாகிய கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவருமில்லையயன்பதை நீ இன்று அறிந்து உன் இருதயத்தில் சிந்திக்கக் கடவாய்.

40. உனக்கும் உனக்குப் பின் உன் புத்திரருக்கும் நன்றாகும் பொருட்டும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப் போகிற தேசத்தில் நீ வெகுநாளாய்ச் சீவிக்கும் பொருட்டும், நான உனக்குக் கற்பித்திருக்கின்ற அவரது கற்பனையையும் பிரமாணங்களையும் கைக்கொண்டு ஆசரிக்கக் கடவாய் என்றான்.

41. அப்போது மோயீசன் யோர்தானுக்கு இப்புறத்தில் கீழ்த்திசை முகமாய் மூன்று அடைக்கலப் பட்டணங்களை நியமித்தான்.

42. யாராவது இரண்டொரு நாளாய் முன்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் ஓடிப்போய் மேற்படி பட்டணங்களிலே ஒரு பட்டணத்தைச் சரணமடைந்தால் அதில் தப்பிப் பிழைத்திருக்கும்படி அவைகளை ஏற்படுத்தினான்.

43. அவைகள் ஏதெனில், ரூபன் கோத்திரத்தாரைச் சேர்ந்த சம பூமியாகிய வனாந்தரத்திலிருக்கிற பொசோர் பட்டணமும், காத் புத்திரரைச் சேர்ந்த கலாத் நாட்டில் இருக்கிற இராமொட் பட்டணமும், மனாசே வம்சத்தாரைச் சேர்ந்த பாஸான் நாட்டிலிருக்கிற கோலான் ப்ட்டணமும் ஆகிய அந்த மூன்றுமேயாம்.

44. மோயீசன் இஸ்றாயேல் புத்திரருக்கு விதித்துத் தெளிவித்த பிரமாணம் இதுவே.

45. எஜிப்த்திலிருந்து புறப்பட்ட இஸ்றாயேல் புத்திரருக்கு அவன் கற்பித்த கட்டளைகளும், ரிதி ஆசாரங்களும், நீதி நியாயங்களும் இவைகளே.

46. அப்பொழுது இஸ்றாயேலியர், யோர்தான் நதிக்கு இப்புறத்தில் போகோர் கோவிலுக்கு எதிரிலே, ஏயஸபோனில் குடியிருந்து மோயீசனால் தோற்கடிக்கப் பட்ட அமோறையரின் அரசனான செகோனுடைய தேசத்திலே இருந்தார்கள். எஜிப்த்திலிருந்து வந்த இஸ்றாயேல் புத்திரர்,

47. யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அவனும் பாஸான் அரசனான ஓக் என்பவனுமாகிய பாஸான் அரசர் இருவருடைய தேசத்தைப் பிடித்தார்கள்.

48. அர்னோன் ஆற்றங்கரைக்கு அடுத்த அறோயர் துடங்கி ஏற்மோன் என்னும் சியோன் மலை மட்டுக்கும் விரியும்

49. அன்றியும் யோர்தானுக்கு இப்புறத்தில் தொடங்கி வனாந்தரக் கடலும் பஸ்கா மலை அடிவாரமட்டுமுள்ள சம பூமி வெளிகளும் (அதில் அடங்கியிருக்கின்றன.)