சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 03

எருசலேமின் பிரதம குரு.

1. பின்னும் ஆண்டவர் எனக்குப் பிரதம குருவாகிய ஏசுவென்போர் தேவதூதன் முன் (பாபிஷ்டனைப்போல்) நிற்பதையும், சாத்தான் எதிர்வாதங் கூறுவான் வேண்டி அவர் வலதுபுறம் நிற்றலையுங் காட்டினர்.

* 1-ம் வசனம். ஏசு--அக்காலத்து பிரதம குரு.

2. (நீதி) கர்த்தன் சாத்தானை நோக்கி: சாத்தானே! ஆண்டவர் உன்னை (மிஞ்சவிடாது) அடக்குவராக! எருசலேமைத் தெரிந்து கொண்ட தேவன் உன்னை ஒடுக்கக்கடவாராக! அழலினின்று ஒரு கொள்ளியென எடுக்கப் பெற்றவர் இவராமன்றோ என்றான்.

3. ஏசுவென்போர் அசுத்த ஆடைக ளுடுத்தவராயிருந்தனர்; அன்றியும் வானவன் சமுகத்தில் (மாதோஷியைப் போல் உடல் குன்றி) நின்றனர்.

4. அப்போது அவ்வானவன் தன் முன் நின்றவர்களிடஞ் சம்பாஷித்து அவர்களைப் பார்த்து: அவரிடமிருந்து அசுத்த ஆடைகளைக் களைந்து விடுங் கள் எனச் செப்பி இவரை நோக்கி: உன்னினின்று உன் தோஷத்தை உரிந்து விட்டு, (அலங்கிருத) ஆடையைப் போர்த்தினேன் என்றான்.

* 4-ம் வசனம். முன்நின்றவர்கள்--மற்ற வானதூதர்கள்.

5. பின்னும் (அவர்களைப் பார்த்து:) (கதிர்படியும்) கிரீடமொன்றை அவர் சிரஞ்சூட்டுங்கள் என்றான்; அவர்களும் அவர் சென்னியில் காந்தி வீசும் மகுடம் அமர்த்தியவருக்கு (விலையுயர்ந்த) ஆடைகளைத் தரிப்பித்தனர். ஆண்டவர் தூதனோ நின்ற நிலையேயிருந்தனன்.

* 5. என்னிடமாய்ச் சம்பாஷித்திலங் கிய தேவதூதன் என்னை நோக்கி: இவை யாதென நீ அறிகின்றதில்லையோ வெனக் கேட்க, யான்: என் ஐயனே இல்லை என்றேன்.

6. ஆண்டவர் தூதன் ஏசுவென்போருக்குச் செய்த அறிக்கையாவது:

7. இதோ சேனைகளின் தேவன் அருள்வது: நீ நமது வழிப்பாடுகளில் (வழுவாது) ஒழுகி, நமது கற்பனைகளை (நிர்ணயமாய்) அநுஷ்டிப்பையேல், நீயும் நமது வீட்டை ஆளுவாய்; நமது ஆலயத்தையுங் காவல் செய்வாய்; யாமும் இங்கு விஜயஞ் செய்பவர்களில் (சிலரை) உன் முன் நடக்கவருள்வோம்.

* 7-ம் வசனம். நீயும்--சொரோபபேலோடு நீயும்.

8. ஓ சிரேஷ்ட குருவாகிய ஏசுவே! கேள்: உன்னோடு வசிப்பாரும் (நவமான காரியாதிகட்குக்) குறிக்கப்பட்டிருத் தலின் (அவர்களும் செவிகொடுக்கக் கடவர்;) இதோ யாம் நமது தாசனாகிய கீழ்த்திசையோரைத் தருவிப்போம்.

* 8-ம் வசனம். கீழ்த்திசையோன்--கிறீஸ்து.

9. ஏசுவுக்கு முன்பாக யாம் ஸ்தாபிக்குங்கல் இஃதேயாம்; இவ்வொரே கல்மீது கண்கள் ஏழு பிரகாசிக்கின்றன; யாமே அதைச் சித்திரம் பொழிவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர். யாமே ஓர் நாள் இப்பூதல தோஷத்தை (அற)த் துடைத்துவிடுவோம்.

* 9-ம் வசனம். கல்--திருச்சபையின் அஸ்திவாரக் கல்லாகிய கிறீஸ்து; ஏழு கண்கள்: ஏழு தேவ வரங்களைக் குறிக்கின்றன.

10. அந்நாளில் அவருடைய முந்திரிகைச் செடி கீழும், அத்திமரத்தினடியிலும் (ஒவ்வொரு) மனிதனுந் தன் சிநேகிதனை அழைத்து (சமாதானமாய் வாழ்வன்) என்பதாம்.