நாகும் ஆகமம் - அதிகாரம் - 03

நினிவே நகரின் அழிவு.

1. குருதி தாகமுள்ளதும், படிறுங் கொள்ளையும் நிறைந்ததுமான பட்டணமே ஐயோ கேடாம்! நீயும் கொள்ளையாடப்படாது போவையோ?

* 1-ம் வசனம். எசே. 24:9; அபாக். 2:12. 5-ம் வசனம். இசா. 47:3.

2. இதோ கேட்கப்படுகிறது சவுக்குச் சப்தம்; ஓடிவருகிறது (பண்டிகளின் சகடவொலி, அசுவங்களின் கனைப்பு, தீவிர கதியாய் வரும் இரதங்களின் கடகடப்பு, முன் ஏறிவருங் குதிரைப் படையின் கோஷம் (கேட்கப்படுகிறது.)

3. இதோ ஒளிரும் வாட்கள், மிளிரும் வல்லயங்கள், இதோ திரளான வீரர்கள், இரத்தக்களரியில் பெருஞ் சேதத்தோடு சங்கரிக்கப்படுகின்றனர்; எண்ணிலாப் பிணங்கள் ஒன்றுமேல் ஒன்றாய்க் குவிகின்றன; (இக்கண்ணராவிக்குக் காரணமென்ன?)

4. (நினிவே) எத்தனையோ விசை சோரம்போய், வனப்பும், இனிப்புங் காட்டி, மாய வித்தை பிரயோகிக்கும் பரத்தையாகி, தன் வேசித்தனத்தால் சனங்களையும் தன் மாந்திரியத்தால் பிரசைகளையும் விற்றது.

5. சேனைகளின் தேவனானவர் செப்புவதேதெனில்: இதோ உனக்கு விரோதமாய் வருகிறோம்; உன் உள்ளாடையை உன்னினின்று (பிடுங்கி) எறிந்துவிடுவோம்; உன் நிருவாணத்தைச் (சகல) சாதி சனங்களுக்குக் காட்டுவோம்; உன் ஈனத்தைச் சகல இராசாங்கங்களுக் கும் (பிரசித்தப்படுத்துவோம்.)

6. உன் அக்கிரமங்கள் உன்மீதே விழச் செய்வோம்; உன்னை மானபங்கப்படுத்தி, உன்னை (நமது பழிவாங்கு தலுக்கு) ஓர் அத்தாட்சியாக்குவோம்.

* 6-ம் வசனம். அத்தாட்சியாக்குவோம்--உலகத்துக்கு நற்படிப்பினையாயிருக்கும் படிச்செய்வோம்.

7. உன்னைக் காண்பான் எல்லாம் பின்னிடைந்து: நினிவே அழிந்து போயிற் றோவென்பான்; (ஆயினும்) உனக்காக அநுதாபப்படுவான் எவன்? உனக்கு ஆறுதல் சொல்பவன் எங்குதான் அகப் படப் போகின்றான்.

8. பிரசைகள் நிறைந்தும், நதிகள் நடுவீற்றும், சலங்கள் சூழப்பெற்றும், சமுத்திரத்தை ஆஸ்தியாகவும், சலங்களை அரண்களாகவுங் கொண்ட அலெக்சாந் திரியா பட்டணத்தைவிட நீ சிரேஷ்ட மாமோ?

9. எத்தியோப்பியாவும், எஜிப்த்தும் இனனும் எத்தனையோ (தேசங்கள்) அதுக்குப் பலமாயிருந்தன; அதுக்கு உதவி புரிய ஆப்பிரிக்காவும், லீபியும் ஏற்பட் டிருந்தன.

10. அது அப்பேர்ப்பட்ட பட்டண மானாலும் அதின் வாசிகள் சிறையாகப் பரதேசத்துக்குக் கூட்டிப்போகப் பட்டார்கள்; அதின் குழந்தைகள் தெருக்கள் நடுவில் நசுக்கப்பட் டார்கள்; பிரசையது பிரமுகர்கள் பேரில் சீட்டுப் போடப்பட்டது; அதின் பிரபுக்களெல்லாந் தலையிடப் பட் டார்கள்.

11. ஆதலின் (நினிவே!) நீயும் ஆண்டவருடைய கோப பானத்தில் வெறித்துப் போவாய்; (யாவராலும்) அருவருக்கப்படுவாய்; உன் சத்துராதி யிடத்தில் உதவி கேட்கும்படியாகும்.

12. (முதல்) அத்திக்கனிகள் உலுக்கப் படவும், அவைகள் புசிப்பான் வாயில் வீழ்கின்றன; அத்தகைமையாக உன் அரணிப்புகளும் உலுக்கப்பட்ட அத்திக் கனிகள் போலாம்.

* 12. நினிவே நகரின் கோட்டைக் கொத்தளங்கள் சுலபமாக விழும் என்பது கருத்து.

13. உன் பிரசைகளெல்லாம் உன் நடுவில் (பேதைப்) பெண்கள் போலாயினர்; உன் தேசத்து கதவுகளெல்லாஞ் சத்துராதிகட்கு விரியத் திறக்கப்பட்டன; தாப்பாளிட்டவைகள் நெருப்புக்கு இரையாயின.

14. முற்றுகைக்காகச் சலம் மொண்டு வை; உன் அரணிப்புகளைப் பலப் படுத்து; களிமண்ணைக் கூட்டி மிதித்து கற்களறுக்க ஆரம்பிப்பாயாக.

15. ஆயினும் அக்கினி உன்னை விழுங்கும்; நீ வாளால் மடிவாய், வண்டுகளால் செடிகள் அழிவதுபோல் நீ பட்சிக்கப்படுவாய்; பச்சைக்கிளி கூட்டம்போல் நீ பலுகிச்செறிந்தாலும் (அதஞ் செய்யப்படுவாய்.)

16. வானத்தில் தோன்றும் மீன்களை விட இன்னம் அதிகமாகவே பொருள் சேகரத்துக்கு வியாபாரங்கள் நடத்தினை; விட்டில் கூட்டம் (பூமியின் கண்) பரவி, மறுபடி பறந்து போய்விடுவதுபோல் (உன் தனமும் ஒழிந்துபோம்).

17. உன் படையாளர் வெட்டுக்கிளிகளைப் போலாம்; உன் பாலியரோ, குளிர்ந்த பருவத்தில் சிறு விட்டில்கள் வெளிகளில் தங்கி, வெய்யோன் எழவே, நின்றவிடந் தெரியாமல் பறந்துவிடுமே, அவைகளைப் போன்றவராம்.

18. அசூர் அரசே! உன் சாமக் காவலர் துயில் போயினர்; உன் மன்னர்கள் அடக்கப்படுவார்கள்; உன் சனம் மலைகளில் பதுங்கிக் கொண்டது; அவர்களை ஒன்றுகூட்டுவான் ஒருவனுமில்லை.

19. உன் அழிவு (ஒருவருக்கும்) அதிசயமன்று; உன் இரண காயம் மரணத்துக்குரியது; இச்செய்தி கேள்வி யுற்றோர் யாவரும் உன் (ஸ்திதியைக் குறித்துக்) கைகொட்டுவர்; ஏனெனில், உன் துஷ்கிருத்தியத்தால் இடைஞ்சல் படாதவர் யாரே.


நாகும் ஆகமம் முற்றிற்று.