யோனாஸ் ஆகமம் - அதிகாரம் - 03

நினிவு நகரில் யோனாஸ்.

1. ஆண்டவர் இரண்டாந்தரமாய் யோனாசிடஞ் சம்பாஷித்து: 

2. தட்சணமே நீ புறப்பட்டு, நினிவு மாநகருக்குச் சென்று, நாம் உனக்கு ஆக்கியாபிக்கிறதுபோல் அதில் பிரபோதஞ் செய்வாயாக வென்றார்.

3. யோனாஸ் உடனே பிரயாண மாய் எழுந்து, ஆண்டருடைய திரு வாக்கியப் பிரகாரம் நினிவுக்குச் சென்றனர்; நினிவு நகரானது சுற்றி வர மூன்று தினங்கள் பிடிக்கக் கூடிய அவ்வளவு பெரிய பட்டணமாயிருந்தது. 

4. யோனாஸ் பட்டணம் புகுந்து அதில் ஒரு நாள் முழுதும் நடந்து: “இன்னும் நாற்பது நாளாம் நினிவு அழிந்து போகும்” எனக் கூவிச் சொன்னார்.

5. நினிவு மாந்தர் (யாவரும்) ஆண்டவர் (வாக்கியத்தை) விசுவசித்து, (பொது) ஒருசந்தி பிடிக்க அறிக்கையிட்டு, பெரியோர் தொட்டுச் சிறியோர் வரைக்குஞ் சாக்குத் துண்டைப் போர்த்துக் கொண்டனர்.

* 5-ம் வசனம். மத். 12:41; லூக். 11:32.

6. அது செய்தி நினிவு அரசனுக்கு எட்ட அவனுஞ் சிம்மாசனம் விட்டிழிந்து, (இராச) ஆடையாபரணங்களைக் களைந்து, சாக்குத் துண்டைப் போர்த்துக் கொண்டு, சாம்பர் மீது உட்கார்ந்தான்.

7. அவன் தன்னுடையவும் பிரதானிகளுடையவுங் கட்டளையாக நினிவு பட்டணமெங்ஙனுஞ் சப்தத்தோடு பிரசித்தஞ் செய்வித்ததாவது: மனிதர் முதல் விலங்குகளும், ஆடுகளும் எதையும் புசியாதிருக்கக்கடவன; மேய்ச்சலுக்குப் போகாமலும், சலம் பருகாமலும் இருக்கக்கடவன.

8. மனிதர்கள் மிருகங்கள் சகிதமாய்ச் சாக்குத் துண்டு உடுத்து, ஆண்டவரை நோக்கிச் சத்துவங் கொண்ட மட்டும் ஓலமிடுவார்களாக; ஒவ்வொருவனுந் தன் துர்வழியை விலகி, தன் கரங்களைக் கறைபடுத்திய அக்கிரமத்தை (அகற்றக்கடவன்.) 

9. சில விசை ஆண்டவர் கருத்து மாறி பொறுதி தரக்கூடும்; நாம் மாண்டு போகாதபடி தம் கோபத்தின் ஆக்கிரமத்தை அமர்த்தக்கூடும் (என்பதே).

* 9-ம் வசனம். எரே. ஆக. 18:11; யோவேல் 2:14.

10. அவர்கள் தம் துர்வழியினின்று திரும்பியதை ஆண்டவர் அவர்களுடைய கைங்கிரியாதிகளால் கண்டுகொண்டு, அவர்களுக்கு அனுப்புவதாய் வாக்கிட்டிருந்த தின்மையைக் கடவுளர் அவர்கள் பேரில் இரக்கங் கொண்டவராய் அனுப்பாது விடுத்தனர்.