யோவேல் ஆகமம் - அதிகாரம் - 03

இஸ்றாயேலின் சத்துருக்களுக்கு விரோ தமாக வருந் தண்டனை, - யோசப்பாத் பள்ளத்தாக்கில் தேவன் எல்லோரையும் நடுத்தீர்ப்பார், - திருச்சபைக்கு வருந் தேவ ஆசீர்வாதம்.

1. இதோ அந்நாட்களிலே, யூதாவுக்கும், உண்டாயிருக்கிற சிறையிருப்பை நாம் திருப்பும் அக்காலையில்:

2. எல்லாச் சனங்களையுஞ் சேர்த்து, யோசப்பாத் கணவாயில் கூட்டி வந்து, அங்கு அவர்கள் அந்நிய சனங்கள் நடுவே சிதறடித்த நமது பிரசையும் நமது பிரசை யும் நம் சுதந்தரமுமாகிய இஸ்றாயே லைக் குறித்தும், அவர்கள் பிரித்துக் கொண்ட நமது நாட்டைக் குறித்தும்,

3. அவர்கள் நமது பிரசைமீது சீட்டு போட்டதைக் குறித்தும், குழந்தைகளை வேசைப் பணயத்துக்கு ஈடுபடுத்தியதைக் குறித்தும், குடித்து வெறித்திருந்ததற் குப் பெண்களை இரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததைக் குறித்தும் அவர்களோடு ஞாய விசாரணை நடத்துவோம்.

* 1-2-3-ம் வசனம். தம் பிரசைக்கு அநியாயஞ் செய்தவர்களுக்குத் தீர்வையிடுவதாக ஆண்டவர் சொல்லுகின்றனர்; யோசப்பாத் கணவாய் என்பது எருசலேமுக்கும், ஒலிவேத் மலைக்கும் நடுவீற்றியது; அது அம்மோனித்தாரையும், இதுமாசனங்களையும் வென்று ஜெயக்கொடி நாட்டிய யோசப்பாத்தரசனின் சொந்த நாமகரணத்தைப் பூண்ட தாகும்; இவ்வரசனின் சடலஞ் சீயோனில் சேமிக்கப்பட்டு, பின் அக்கணவாயிலே அடக்க மாகிப் பிரேதாலயங் கட்டப்பட்டதென வேத வியார்த்திகர் சிலர் கூறுகின்றனர்.

4. தீர் பட்டணமே! சிதோனே! பலஸ்தீன் தேசமே! உங்களுக்கும், நமக்கும் விபகாரம் என்னே? நம்மீது பழிவாங்குவீர்களேயாமாகில், உடனே நாம் உங்கள் சிரமீது பதில் பழிவாங்குவோம்.

* 4-ம் வசனம். நம்மீது ஏதோ ஓர் பழிவாங்கவா நம் சனத்தை இங்ஙனம் உபத்திரவப் படுத்தினீர்கள் எனப் பாபிலோன் பட்டணத்துக்கு இஸ்றாயேலைக் கைதியாய்க் கொண்டு போனவர்களையும், யூதாவை நாசஞ் செய்த கல்தேயரையும் ஆண்டவர் கேள்வி கேட்கிறார்.

5. ஏனெனில், நீங்கள் நமது வெள்ளியையும், பொன்னையும் எடுத்துக் கொண்டீர்கள்; நமக்கு மிகவும் விலையுயர்ந்ததாகவும், வனப்பமைந்ததாகவும் இருந்தவைகளை உங்கள் ஆலயங்களுக்குக் கொண்டுபோனீர்கள்.

6.  யூதா மக்களையும், எருசலேம் புத்திரரையும் அவர்கள் தேசத்துக்குத் துலையிட்டவிடத்திற்குக் கொண்டு போகும்படி கிரேசியா மக்களுக்கு விக்கிரயஞ் செய்தீர்கள்.

* 6-ம் வசனம். கிரேக்கர் எனும் மொழி அஞ்ஞானிகள் எனப் பொருட்படும்.

7. நீங்கள் அவர்களை விலைப் படுத்திய இடத்தினின்று நாம் உடனே அவர் களைக் கிளம்பச் செய்து, உங்கள் சென்னிமீது பதில் தின்மையை வருவித்து விடுவோம்.

8. உங்கள் புத்திரரையும், புத்திரி களையும் யூதா மக்களுக்குக் கையளிப் போம்; அவர்களுந் துலைதூரத்திய சன மாகிய சபேயின் சனங்களுக்கு விற்றுவிடு வார்கள்; (இஃது சம்பவிப்பது திண் ணமே;) ஏனெனில், ஆண்டவர் தாமே செப்பலுற்றனர்.

9. இஃதை சனங்களுக்கு அறிக்கையிடுங்கள்; பரிசுத்த ஐக்கியப்பாட்டுடன் சண்டை அறிவியுங்கள்; பலாஷ்டிகரைக் கிளப்புங்கள்; வீரசூரர்களும் நடந்து சமராட வரட்டும்.

10. கலப்பைக் கொழுவால் கத்தி அடித்துக்கொள்ளுங்கள்; மண்வெட்டியைக் கொண்டு ஈட்டி சமைத்துக் கொள்ளுங்கள்; பலவீனனும் (ஆயுதபாணியாய்) நான் பலமுடைத்தாயிருக்கின்றேன் எனச் சொல்லட்டும்.

11. சகலமான சனங்களே! கும்பலாய் வாருங்கள், ஓடி வாருங்கள், எப்பக்கத் தினின்றும் (ஓரிடம்) கூடுங்கள்; அங்கு தான் ஆண்டவர் உங்கள் பராக்கிரமசாலி களை மடியச் செய்வர்.

12. ஆம், யோசப்பாத் கணவாயில் பிரசைகளெல்லாம் வந்து சேரட்டும்; எல்லாத் திசைகளிலுமிருந்து வந்த சனங்களுக்குத் தீர்வையிட, அங்கு நாம் ஆசனத்து அமர்ந்திருப்போம்.

13. (அப்போது நாம் நம் தூதரைப் பார்த்து:) வெள்ளாண்மை முதிர்ந்திருத்தலான் அரிவாளைப் பிரயோகஞ் செய்யுங்கள்; வாருங்கள், (வானினின்று) இறங்குங்கள்; ஏனெனில், இரசம் பிழி யந்திரம் நிறையப்பெற்றிருக் கின்றது; இரசம் பொங்குந் தொட்டிகள் பூரித்திருக்கின்றன; ஏனெனில், (மானி டர்கள்) கிறுபம் மிகுந்து போயிற்று.

14. பிரசைகளே, பெருங் கும்பலாக ஓடுங்கள்; சங்கார கணவாய்க்கு ஓடுங்கள்; ஏனெனில், ஆண்டவருடைய நாள் அச்சங்கார கணவாயில் உதயமாகச் சமீபமாயிருக்கிறது.

15. (அப்போது) சூரிய சந்திர கிரகங்கள் இருள்மூடி நிற்பன; விண்மீன்கள் தம் பிரகாசத்தைச் சுருக்கிக் கொள்வன.

16. சீயோன் பர்வதத்தின்மீது ஆண்ட வர் கர்ச்சனை செய்வர்; அவர் குரல் எருச லேம் நடுவில் சப்திக்கும்; வான்றலங் களும், பூதலமும் கிடுகிடாய்த்துப் போவன; (ஆயினும்) ஆண்டவர் தம் பிரசைக்கு நல் நம்பிக்கையாகவும் இஸ்றாயேல் மக்களுக்குப் பலமாகவு மிருப்பர்.

* 9-16-ம் வசனம். என்ன பிரயத்தனஞ் செய்யினும் ஆண்டவருடைய தீர்வைக்குத் தப்பிப்பது சனங்களுக்குச் சாத்தியப்படாது என்கிறார் ஆண்டவர்; யோசப்பாத் கணவா யில் எல்லோரும் வந்தே தீர வேண்டும்; அங்கு ஆண்டவர் பீடாதிபதியாய் வீற்றிருப்பர்; பாவிகளுக்கு விரோதமாய் அவர் சிங்கம்போல் கர்ச்சிக்க, வானமண்டலமும் பூமண்டலமும் நிலை பெயரும்; தம் அடியோர்களுக்கு மாத்திரம் நம்பிக்கையாயிருப்பர் எனச் சொல்லப்பட்டு வருகின்றது; ஞான அர்த்தத்தில் நடுத்தீர்வையைத்தான் குறித்துப் பேசப் படுகிறது.

17. அந்நாளில் நமது பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீது வாசஞ் செய்கின்ற உங்கள் தேவனாகிய ஆண்டவர் நாம் தாம் என அறிந்துகொள்வீர்கள்; எருசலேம் பட்டணமானது, அந்நியர் அதின் நடுவில் செல்லாவண்ணம் பரிசுத்தமா யிருக்கும்.

18. அந்நாளில் (சியோனில்) பர்வதங்கள் மகரந்தஞ் சிந்துவன; (இஸ்றாயேலில்) குன்றுகளினின்று அமுதம் வடியும்; யூதா அருவிகளெல்லாம் (சீவிய) சலம் ஓடும்; ஆண்டவரின் வாசஸ்தானத்தினின்று ஓர் ஊற்று புறப்படும்; அது (முன் முட்களை விளைவித்திருந்த யூதாவின்) நீரோடையை நிறைத்துவிடும்.

* 17-18-ம் வசனம். கிறீஸ்துவ திருச்சபையைக் குறித்தும், சுடர்வீசும் எருசலேமாகிய மோட்சத்தின் பாக்கியத்தைக் குறித்தும் பேசப்படுகிறது.

19. எஜிப்த்து தேசமோ உபத்திரியப்படும்; இதுமேயாவும் கொடிய வனாந்தரமாகும்; ஏனெனில், அவைகள் யூதா மக்களை அநியாயமாய்த் துன்பப்படுத்தின, நாட்டில் குற்றமற்ற குருதியைச் சிந்தின.

20. யூதாவே சதாகாலத்துக்கும் ஜன சம்பன்னமுடைத்திருக்கும்; எருசலேமும் தலைமுறை தலைமுறைக்கும் (பிரகாசிக்கும்).

21. நாம் முன் சுத்தி செய்திராத அவர்கள் இரத்தத்தைச் சுத்திகரிப்போம்; ஆண்டவர் சீயோனில் (என்றும்) மகத்துவத்தோடு வாசஞ் செய்வர்.

* 21-ம் வசனம். தம் பிரசையை உபத்திரவப்படுத்தியவர்கள்மீது பழிவாங்குவர்; சத்திய திருச்சபைக்குத் துன்பம் வருத்தியவர்களையும் ஆண்டவர் தண்டித்தே விடுவர் எனப் பொருட்படும்.


யோவேல் ஆகமம் முற்றிற்று.