ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 03

ஜோசுவா யோர்தான் நதியைக் கடப்பதைக் குறித்து இஸ்றாயேலியருக்குப் புத்தி சொன்னதும் -- கர்த்தர் ஜோசுவாவைத் தைரியப்படுத்தினதும் -- ஜோசுவா ஜனங்களைத் தைரியப்படுத்தினதும் - யோர்தான் நதியின் தண்ணீர் பிரிந்ததும்.

1. ஜோசுவா இராத்திரியிலே எழுந்து பாளையம் வாங்கிப் போட்டபின் அவனும் இஸ்றாயேல் புத்திரர்களும் சேத்திமிலிருந்து பிரயாணம் பண்ணி யோர்தானுக்கு வந்து அக்கரையிலே மூன்று நாள் தங்கினார்கள்.

2. மூன்று நாள் சென்ற பிற்பாடு கட்டியக்காரர் பாளையத்தின் நடுப்புறம் நடந்து போய்,

3. சனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் புறப்படக் கண்டவுடனே நீங்களும் எழுந்து உங்கள் இடத்தை விட்டுப் பிரயாணமாகி அவர்களைப் பின்செல்லக் கடவீர்கள்.

4. உங்களுக்கும் உடன்படிக்கைப் பெட்டிக்கும் இடையிலே இரண்டாயிரம் முழந் தூரமிருக்க வேண்டும். அதினாலே நடக்க வேண்டிய வழியைக் கண்டறிய மாட்டுவீர்கள். உள்ளபடி இதுவரையிலும் நீங்கள் அவ்வழியில் ஒருபோதும் நடந்து போகவில்லை. மீளவும் நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியின் அண்டைப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்பீர்களாக! என்றான்.

5. ஜோசுவாவும் சனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.

6. மறுபடியும் ஜோசுவா ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு சனங்களுக்கு முன்னே நடந்து போங்களென்றான். அவர்கள் அவ்விதமே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு சனங்களுக்கு முன்னே சென்றார்கள்.

7. அந்நேரத்தில் கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: நாம் மோயீசனோடு இருந்தது போல் உன்னோடும் இருக்கிறோமென்று இஸ்றாயேலியர் எல்லாரும் அறியும்படிக்கு இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்த ஆரம்பிப்போம்.

8. நீ உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களோடு பேசி: நீங்கள் யோர்தான் தண்ணீரில் சற்றே தூரஞ் சென்ற போது அங்கு நில்லுங்கள் என்று கட்டளையிடுவாயயன்றார்.

9. அப்பொழுது ஜோசுவா இஸ்றாயேல் புத்திரரைப் பார்த்து: நீங்கள் கிட்ட வந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.

10. மறுபடியும் அவர்களை நோக்கி: ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் உங்கள் நடுவே வியாபித்திருக்கிறாரென்பதையும், அவர் கானானையனையும், ஏட்டையனையும்,ஏவையனையும், பெரேசையனையும், கெற்சேயனையும், ஜெபுசேயனையும், அமோறையனையும் உங்கள் முன்னிலையில் சங்காரம் பண்ணப் போவதையும் நீங்கள் எதினால் அறிந்து கொள்வோம் என்று கேட்டால்,

11. இதோ உலகத்துக்கெல்லாம் கர்த்தராயிருக்கிறவருடைய வாக்குத்தத்தப் பெட்டியானது உங்களுக்கு முன்பாக யோர்தானிலே போகுமென்கிற அடையாளத்தினால் (அறிவீர்கள்.)

12. இஸ்றாயேல் கோத்திரங்களிலே பன்னிரண்டு பேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.

13. பிறகு சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் எந்நேரத்தில் யோர்தானின் தண்ணீரிலே உள்ளங்கால் வைத்து நடக்கத் துடங்கியிருப்பார்களோ அந்நேரத்தில் நதியின் கீழேயிருக்கும் தண்ணீர்கள் ஓடி காணாதே போக, மேலிருந்து ஓடிவருகிற தண்ணீரெல்லாம் ஓடாமலே ஒரு குவியலாக நிற்குமென்றான்.

14. அந்தப்படியே சனங்கள் யோர்தானைக் கடக்கத் தங்கள் கூடாரத்திலிருந்து புறப்பட்டார்கள். ஆசாரியர்களோ உடன்படிக்கையின் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்கு முன்னாலே நடந்து போய்,

15. யோர்தான் நதியில் பிரவேசித்து வந்தார்கள். (அது பயிர் விளைந்த காலமானபடியால் தண்ணீர் கரைகளின் மேல் புரண்டிருந்தது.) அவர்களின் கால்கள் தண்ணீரால் நனைந்து போகத் துடங்கின மாத்திரத்தில்,

16. மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர்கள் ஒன்றாய்க் கூடி நின்று ஆதொம் நகரம் முதல் சற்த்தான் என்ற ஊர்மட்டும் அத்தனை தூரம் மலைபோலக் குவிந்ததாகக் காணப்பட்டது. கீழேயிருந்த தண்ணீர்களோ (உயிரில்லாக் கடலென இப்போது சொல்லப் பட்ட) வனாந்தர சமுத்திரத்தில் முழுவதும் வடிந்தோடிப் போயிற்று.

17. அதற்குள்ளே சனங்கள் நதியைக் கடந்து எரிக்கோவுக்கு நேரே செல்லத் தொடங்கினர். வற்றிப்போய் இராநின்ற யோர்தான் நதியில்தானே நடந்தார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டிருந்த ஆசாரியர்களோ ஆயத்தமுள்ளவர்களாய் ஆற்று நடுப்புறத்தில் தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நின்றார்கள்.