ஓசே ஆகமம் - அதிகாரம் - 02

கடவுள் அவிசுவாசிகளை மிரட்டுகிறார், - இவர்கள் மனந்திரும்பினால் தேவனுக்குப் பிரியர் ஆவார்கள்.

1. உங்கள் சகோதரரைப் பார்த்து: (நம் பெயரால்) நீங்கள் நம் பிரசையென்றும், உங்கள் சகோதரியை நோக்கி: நீ தயை பெற்றாய் என்றுஞ் சொல்வீர்களாக.

2. உங்கள் அன்னையோடு வாதாடி, கண்டனஞ் செய்யுங்கள்; அவள் நம் மனைவியுமல்லாள், நாம் அவள் மணாளனுமல்லோம்; அவள் தன் முகத்திய வேசித்தனத்தையும், அவள் கொங்கைகள் நடுவீற்றிய வியபசாரத்தையும் அகற்றக்கடவள்.

3. இல்லாதாகின் அவளை நிருவாணமாயுரிந்து, அவளைப் பிறந்த தினக் கோலமாய் விட்டு, அவளை வனவாசமாக்கி, அவளை வறண்ட தரையாய் விட்டு, அவளைத் தாகவேட்கையால் சாகவடிப்போம்.

4. அவள் மைந்தர் வேசைப் பிள்ளை களாயிருத்தலால், அவள் மக்கள்மீது இரக்கங் கொள்ளோம்.

5. அன்றியும் அவர்களின் மாதாவானவள், பரத்தையாயினள்; அவர்களைக் கற்பந்தரித்தவள் வெட்கக்கேட்டுக்கு உட்பட்டனள்; ஏனெனில் எனக்கு (வேண்டிய அப்பமும், தண்ணீரும், கம்பளியும், சீலையும், எண்ணெய்யும், பானாதிகளும் அளிக்கும் என் ஆசை நாயகர் பின் யான் போவேன் எனச் செப்பலாயினள்.

6. ஆதலின் அவள் (கருத்துக் கிசைந்த) தடங்களைக் காணாவண்ணம், நாம் உடனே அவள் பாதைகளை முட்களாலடைத்து, அதைக் கற்சுவற்றால் மறிப்போம்.

7. (ஆகச் செய்தே) அவள் தன் ஆசை நாயகர் பின்னோடியும் அவர்களிடஞ் சேரமாட்டாள்; தேடித் திரிந்தும் அவர்களைக் காணமாட்டாள் என் முதல் கணவனிடந் திரும்பிப் போவேன்; இப்போதைப் பார்க்கிலும் அப்போது எனக்குச் சுகமாயிருந்தது எனச் சாற்றுவாள்.

8. ஆனால் அவளுக்குக் கோதும்பையும், திராட்ச இரசமும், எண்ணெய்யுங் கொடுத்து, அவளுக்குப் பொன்னையும், வெள்ளியையும் பெருகப் பண்ணினவர் நாம்தானென அவள் அறிந்தாளில்லை; அவைகளைப் பாஹாலுக்கு ஸ்வாதீனஞ் செய்தனள்.

* 1-8-ம் வசனம். சர்வேசுரன் இஸ்றாயேலை அதின் விக்கிரக ஆராதனையைப் பற்றி வியபசாரியைப்போல் தள்ளிவிடுவதாகப் பயமுறுத்துகின்றனர்; பின்னும் அதைத் தம்மிடந் திருப்பிக் கொண்டுவர பிரயத்தனஞ் செய்கின்றனர்.

9. ஆதலின் நம் நடபடியை மாற்றி, கோதும்பையை அது காலத்திலும், இரசத்தை அது பருவத்திலும் எடுத்து விடுவோம்; அவள் நிருவாணத்தைப் போர்த்திருந்த கம்பளியையும், சீலையையும் உரிந்துவிடுவோம்.

10. இப்போது அவளுடைய மதியீனத்தை அவள் ஆசை நாயகர் கண்முன் காட்டுவோம்; நம் கரத்தினின்று அவளைப் பறிப்பான் ஒருவனுமிரான்.

11. அவளுடைய எல்லாச் சந்தோஷப் பாடலையும், அவள் பண்டிகைகளையும், அவள் பெளர்ணமி கொண்டாட்டத்தையும், அவள் சாபத் ஞான்றையும், அவளுடைய எல்லாத் திருநாட்களையும் நிறுத்திவிடுவோம்.

12. அவள்: இவை என்னுடையவை; என் சோர நாயகர் எனக்குத் தந்த சம்பாவனமாக்கும் என்று சொல்லிய அந்தக் கொடிமுந்திரிகைத் தோட்டத்தையும், அத்திமரங்களையும் நாச மாக்கிவிடுவோம்; அதை நாம் காடாக மாற்ற காட்டு மிருகங்கள் மேய்ந்து விடுவன.

13. அவள் பாஹாலைக் கொண்டாட தூபவருக்கத்தைக் கொளுத்தி, காதணி சரப்பளிகளால் தன்னை அலங்கரித்து, தன் ஆசை நாயகர் பின் நடந்து நம்மை மறந்தனள் அன்றோ; அந்த நாட்களைக் குறித்து அவள்மீது பழிவாங்குவோம் என்கிறார் ஆண்டவர்.

14. (ஆயினும் அதற்குப் பின்) நாம் அவளை இதமாய் இழுத்து, வனாந்தரத்துக்குக் கூட்டிப் போய் அவள் இருதயத்தோடு பேசுவோம்.

15. அன்றியும் அதே இடத்திய முந்திரிகைத் தோட்டக்காரரையும், நம்பிக்கைக்கு ஆஸ்பதமாகிய ஆக்கோர் கணவாயையும் அவளுக்குக் கொடுப்போம்; அவள் அங்கு தன் அதிபால்லிய நாட்களிலும், எஜிப்த்து தேயத்தினின்று புறப்பட்ட காலத்திலும் எக்குரலாய்ப் பாட்டுப் பாடினளோ அக்குரலாகவே (மீண்டுஞ்) சங்கீதம் பாடுவள்.

16. அந்நாளில்தான் அவள் மறுபடி நம்மைப் பஹாலி என அழையாமல்: என் கணவனே என்று நம்மை அழைப்பள் என்கிறார் ஆண்டவர்.

17. இனி பொய்த் தேவருடைய நாமத்தை நினைவுறாதபடிக்கு, அவள் நாவினின்று பாஹால் பெயரை எடுத்து விடுவோம்.

18. அந்நாளில் காட்டு மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும், ஊர்வன ஜெந்துக்களும் அவர்களோடு உடன்பாடு கொள்ளச் செய்து, வில்லையும், வாளையும் சண்டையின் உபகரணங்களையும் உடைத்தெறிந்து, ஐயமின்றி துயில்போகச் செய்வோம்.

* 9-18-ம் வசனம். ஆண்டவர் இஸ்றாயேலுக்குச் சகல நன்மைகளைத் தந்தும், தம்மை மறந்து விக்கிரக ஆராதனையாகிய வேசித்தனத்தில் நுழைந்தமையால், அந்நன்மைகளையெல்லாம் உரிந்து, தின்மைகளால் நிரப்பி, தம்மிடஞ் சேர்ப்பதாகச் சொல்லுகின்றனர்.

19. அப்போது உன்னை முடிவில்லாக் காலத்துக்கும் மணம் முடிப்போம்; நீதியையும், நியாயத் தன்மையையும், இரக்கத்தையும், தயாளத்தையும் (பரிசந் தந்து) உன்னைப் பாணிக்கிரகணஞ் செய்வோம்.

20. நிர்ணயத்துடன் உன்னை விவாகஞ் செய்துகொள்வோம்; நீயும் நாமே ஆண்டவரென அறிந்து கொள்வை.

21. அக்காலையில் நாம் தயை பாராட்டுவோம்; (ஆம்) வானங்கள்மீது தயை பாராட்டுவோம்; அவைகள் பூமி மீது கிருபை பாராட்டுவன.

22. பூமி கோதும்பைமீதும், திராட்ச இரசத்தின்மீதும், எண்ணெய்மீதும் கிருபை வைக்கும்; அவைகள் ஜெஸ்ராயேல் மீது தயவாயிருப்பன.

23. அவளைப் பூமிமீது நம் (மகிமைக்காக) விர்த்தியாக்குவோம். நிர்க்கிருபை என்பாள் மீது கருணை கொள்வோம்.

24. நமது பிரசையன்று எனப் (பெயர் படைத்தானுக்கு) நீ நம் பிரசை என்போம்; அவனும் நீர் என் தேவனாயிருக்கின்றீர் என்பான்.

* 19-24-ம் வசனம். திருச்சபையின் ஸ்தாபகத்தையும், அது சேசுகிறீஸ்துநாதரோடு கொள்ளும் ஒருமிப்பையும், அஞ்ஞானிகளுடைய வேதத்துக்கு அழைப்பையும் அறிவிக்கின்றனர்.