ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 02

சேத்தீமிலிருந்து வந்த இரண்டு வேவுக்காரரை இராக்காப் என்னும் விலைமாது மறைத்துத் தப்புவித்ததும்--அவளும் அவர்களும் செய்த உடன்படிக்கையும்--அவர்கள் திரும்பி வந்து சொல்லிய சமாச்சாரமும்.

1. இதன்பிறகு நூனின் குமாரனாகிய ஜோசுவா வேவுக்காரராகிய இரண்டு மனுஷரை வரவழைத்து: நீங்கள் சேத்தீமிலிருந்து இரகசியமாய்ப் போய்த் தேசத்தையும் ஜெரிக்கோ பட்டணத்தையும் வேவு பார்த்து வாருங்களென்று அனுப்பினான். இவர்களோ போய்ச் சேர்ந்து இராக்காப்பென்னும் பேர் கொண்ட விலைமாதாயிருந்த ஒரு ஸ்திரீயின் வீட்டிற்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள்.

2. அப்பொழுது எரிக்கோவின் இராசாவுக்கு: இதோ இஸ்றாயேல் புத்திரரில் சில பேர்கள் தேசத்தை உளவு பார்க்க இந்த இராத்திரியிலே இங்கு வந்தார்கள் என்று செய்தி சொல்லப் பட்டது.

3. அதைக் கேட்டு எரிக்கோவின் அரசன் இராக்காப் அண்டைக்கு மனுஷரை அனுப்பி: உன்னிடத்திற்கு வந்து உன் வீட்டில் பிரவேசித்த மனிதர்களை வெளியே வரவிடு. உள்ளபடி அவர்கள் தேசத்தை முழுதும் வேவுபார்க்கும்படி வந்த வேவுக்காரரென்று சொல்லச் சொன்னான்.

4. அந்த இராக்காப்பென்பவளோவெனில் (அவ்விரண்டு) மனிதர்களை அழைத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்த பின்பு: அவர்கள் என் அண்டைக்கு வந்தது மெய்தான். ஆனால் அவர்கள் எவ்வூராரோ என்று நான் அறியாதிருந்தேன். 

5. அப்புறம் இராத்திரியிலே பட்டணத்து வாசலைச் சாத்திப் பூட்டுவார்களே அந்நேரத்தில் அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் போனவிடம் எனக்குத் தெரியாது. அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள். கட்டாயமாய் அவர்களைப் பிடிக்கலாமென்று சொன்னாள்.

6. பிறகு அவள் அம்மனிதர்களை வீட்டு மெத்தையின் மேல் ஏறப்பண்ணி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள்ளே அவர்களை மறைத்து விட்டள்.

7. அனுப்பப்பட்ட மனிதரோ யோர்தான் துறைக்குப் போகும் வழியே சென்று அவர்களைத் தொடரப் புறப்பட்டுப் போன மாத்திரத்தில் (அந்த ஸ்திரீ தன்) வாசலைப் பூட்டிப் போட்டாள்.

8. மறைவிலிரா நின்ற வேவுக்காரர் நித்திரை கொண்டு கொள்ளா முன்னே இராக்காப் என்பவள் வீட்டின் மேல் அவர்களிடத்திற்கு ஏறி வந்து:

9. கர்த்தர் உங்களுக்கு இத்தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்று நான் அறிவேன். ஏனெனில் உங்கள் பேர் கேட்க எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறது. உங்களைப் பற்றி இத்தேசத்துக் குடிகள் யாவருஞ் சோர்ந்து போனார்கள்.

10. நீங்கள் எஜிப்த்திலிருந்து புறப்படுகையில் கர்த்தர் உங்கள் வருகைக்கு முன் செங்கடலின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின அமோறையரின் இரண்டு இராசாக்களாகிய சேகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

11. இப்படிக் கேள்விப்பட்ட போது நாங்கள் திகில் அடைந்தோம். எங்கள் இருதயமுந் தளர்ந்து போயிற்று. நீங்கள் வராமுந்தியே எங்களுக்குத் தைரியமும் அற்றுப் போயிற்று. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உயர வானத்திலும் கீழே புவனத்திலும் தேவனானவரே.

12-14. அப்படியிருக்க: நான் உங்களுக்குத் தயவு செய்தது போல நீங்கள் என் தகப்பன் வீட்டிற்குத் தயவு செய்வீர்களென்றும், நீங்கள் என் தகப்பனையும், என் தாயையும், என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் காப்பாற்றி எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிப்பீர்களென்றும், அதற்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுப்பீர்களென்றும் இப்பொழுதே ஆணையிடக் கடவீர்கள் என்றாள்.

14. அதற்கு அவர்கள்: நீ எங்களை வெளிப்படுத்தாதிருப்பாயாகில், எங்கள் சீவனே உங்கள் சீவனுக்கு ஈடு. கர்த்தர் எங்களுக்கு இந்தத் தேசத்தைக் கொடுக்கும்போது நாங்கள் மெய்யாகவே உனக்குத் தயவு பண்ணுவோமென்று சத்தியமாய்ச் சொன்னார்கள்.

15. அப்பொழுது (இராக்காப்) ஒரு கயிறு எத்தனமாக அவர்களைச் சன்னல் வழியாய் இறக்கி விட்டாள். அவளுடைய வீடோ பட்டணத்து அலங்கத்தோடு சாத்தி வைக்கப் பட்டிருந்ததாம்.

16. மேலும் அவள் அவர்களை நோக்கி: உங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வரும் மார்க்கத்தில் உங்களைக் காணாதபடிக்கு நீங்கள் மலையிலே போய் அவர்கள் மீண்டு வருமட்டும் அங்கே மூன்று நாள் ஒளிந்திருந்த பின்பு உங்கள் வழியே போகலாமென்றாள்.

17-18. அதற்கு அவர்கள்: கேள்! நாங்கள் இத்தேசத்தைப் பிடிக்க வருவோம். அப்போது இந்தச் சிவப்பு நூற்கயிற்றை எங்களை இறக்கி விட்ட சன்னலிலே நீ அடையாளமாகக் கட்டி உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும், உன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்து வைத்திருப்பாயாகில், எங்கள் கையில் நீ வாங்கின சபதப்படி நடப்பது எங்களுக்குக் கடன்.

19. (முன்சொல்லிய சிவப்புக் கயிறு இல்லாத பட்சத்தில்) உன் வீட்டு வாசல்களிலில்லாமல் அவர்களில் யாராவது வெளியேயிருந்து கொலை செய்யப் பட்டாலோ அவனுடைய இரத்தப்பழி அவன் மேலேதான் இருக்கும்; எங்கள் மேல் குற்றமில்லை. (அடையாளம் வைக்கப் பட்ட பட்சத்தில்) உன்னோடு உன் வீட்டிலிருக்கும் சனங்களில் யாராகிலுங் கொலை செய்யப் பட்டாலோ அவனுடைய இரத்தப் பழி எங்கள் தலை மேலிருக்கும்.

20. நீ எங்களைச் சதி பண்ணி எங்கள் வார்த்தையை வெளிப்படுத்துவாயானால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நாங்கள் நீங்கலாயிருப்போம்.

21. அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக் கடவதென்று சொல்ல அவர்களை அனுப்பி விட்டாள். அவர்கள் போய் விட்ட பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றைச் சன்னலிலே கட்டி வைத் தாள்.

22. வேவுகாரர் நடந்து மலையிலே சேர்ந்து தங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வருமட்டும் மூன்று நாள் அங்கே தரித்திருந்தார்கள். அவர்களைப் பிடிக்க அனுப்பப் பட்ட மனிதர் அவர்களை வழியில் எல்லாந் தேடியும் காணாமல்,

23. திரும்பிப் பட்டணத்திலே வந்த பின்பு (வேவுகாரர்) மலையிலிருந்து இறங்கித் தங்கள் ஊரை நாடி யோர்தான் நதியைக் கடந்து நூனின் குமாரனாகி ஜோசுவா அண்டைக்கு வந்து தங்களுக்குச் சம்பவித்ததையெல்லாம் விவரித்துத் தெரிவித்த பின்பு,

24. கர்த்தர் தேசத்தையயல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். அங்குள்ள குடிகளெல்லாம் திகிற்பட்டு ஏங்கி இடியுண்டு கிடக்கிறார்களே என்றார்கள்.