சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 01

மனந்திரும்ப ஏவுகிறார்.

1. தாரியூஸ் அரசனின் இரண்டாம் வருஷம், எட்டாம் மாதம், அத்தோ குமாரன் பராக்கி, இவர் புத்திரன் சக்காரியாசெனுந் தீர்க்கத்தரிசியருக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கியமாவது:

2. ஆண்டவர் உங்கள் பிதாக்கள் மீது கடுங்கோபச் சன்னதத்தினராயினர்.

3. நீ (அவர்கள் மக்களாகிய) அவர் களைப் பார்த்து: சேனைகளின் தேவனார் சொல்வதேதெனில்: நம்மிடம் (மனந் திரும்பி) வாருங்கள் என்கிறார் சேனை களின் அதிபர்; யாமும் உங்களை நோக்கி வருவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

4. முந்திய தீர்க்கத்தரிசியர் உங்கள் பிதாக்களை நோக்கி: “இதோ சேனைகளின் ஆண்டவர் வாக்கியம்: உங்களது கெட்ட வழிகளையும், துர் எண்ணங்களையும் (விட்டு மனந்) திரும்புங்கள்” என ஓதியும் அவர்கள் செவிகொடுத்தார்களில்லை; அவர் களைப் போல் நீங்களும் இராதீர்கள் என்கிறார் ஆண்டவர்.

5. உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்க வசனரும், அனவரதமாய்ச் சீவிப்பா ராமோ?

6. நமது அடியார்களாகிய தீர்க்க வசனர்களுக்கு நாம் ஆக்கியாபித் தருளிய எச்சரிப்புகளும், வாக்கியங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்க வில்லையோ? உள்ளபடி அவர்கள் மனந்திரும்பி சேனைகளின் தேவனார் எங்களை எங்கள் வழிப்பாடுகட்கும், கைங்கிரியாதிகட்கும் இணங்கவே நடத்தத் திருவுளம் வைத்ததுபோல் எங்களை நடத்தினர் எனச் சாற்றினர் களன்றோ எனச் சொல்வையாக (வென்றார் ஆண்டவர்.)

7. தாரியூஸ் அரசனின் இரண்டாம் வருடம், பதினொன்றாம் மாதம், இருபத்துநான்காந் தேதியில் அத்தோ புத்திரர் பராக்கியாவென்போரது குமாரனாகிய சக்காரியாவுக்குத் தேவ வாக்கியம் இங்ஙனமருளப்பட லானது.

8. யான் கபில நிறத்த அசுவ வாகனாருடனான ஸ்ரீமான் ஒருவனை இரவின் காட்சி கண்டேன்; அன்னவன் பாதாளத்தாவில் (நடப்பட்டி)ருந்த மீர்த்து செடிகள் நடுவில் நின்றனன்; அவன் பின் பொன்னிறத்தும், வெண்ணிறத்தும், பலவண்ணத்துமான அசுவங்களு(மிருந்தன.) 

* 8-ம் வசனம். ஸ்ரீமான்--ஓர் சம்மனசானவர்.

9. அப்போது யான்: என் ஐயனே! இவர்கள் யாரே என்றேன்; என்னிடஞ் சம்பாஷிப்பவனாய் (எனக்குள் தோன்றிய வானவன் என்னை நோக்கி: அஃது யாதென உனக்கு யான் விளக்குவேன் என்றான்.

10. மீர்த்து செடிகள் நடுவீற்றிய ஸ்ரீமான் விடையாக: இவர்கள் பூதலத்தைச் சுற்றிப் பார்க்க ஆண்டவ ரால் அனுப்பப்பட்டவர்களேயாம் என்றனன்.

11. இவர்கள் மீர்த்து செடிகள் நடு வீற்றிய தேவதூதனைப் பார்த்து: பூதலத்தை யாங்கள் சுற்றி வந்தோம்; பார் அனைத்தும் வசிக்கப்பெற்று, அமைதி வாய்த்திருக்கின்றதென மொழிந் தனர்.

12. தேவதூதன் வாய் மலர்ந்து, சேனைகளின் தேவே! நீர் கோபங் பாராட்டும் (இந்த எருசலேமீதும், யூதா பட்டணங்கள் மீதும் எட்டுணைக் காலங் கனிகரங் கொள்ளாதிருப்பீர்; எழுபதாம் வருடமுமாகின்றதே என் றனன்.

13. என்னிடமாய்ப் பேசி நின்ற வானவனை ஆண்டவர் நோக்கி: இன்சொற்களும், ஆறுதல் மொழிகளுமாயருளினர்.

14. என்னிடமாய்ச் சம்பாஷித்த வானவன் என்னைப் பார்த்து: நீ உரத்த சப்தமாக: இதோ சேனைகளின் தேவன் அருள்வது: எருசலேமீதும் சீயோன்மீதும் மிகுந்த வைராக்கிய ஆற்றலுடைத்திருக் கின்றோம்.

15. வல்லுனரான (புறச்சாதி) சனங் கள் மீது பெரிதுங் கோபதாபங் கொண்டோம்; ஏனெனில், (நம் பிரசை மீது) யாம் சிறிதளவே சினந்திருக்க, அவர்களோ மிதங்கடந்த தின்மை செய்தனர்.

16. ஆதலின் ஆண்டவர் அருள்வதே தெனில்: கனிகர (உளத்தினராய்) யாம் எருசலேமுக்குத் திரும்பி வருவோம்; அங்கு (மீண்டும்) நமதாலயஞ் சமைக்கப் படும்; எருசலேமீது நூலளவு செய் யப் படும் என்கிறார் சேனைகளின் தேவனார் எனச் சொல்வையாக.

17. இன்னொருவிசை நீ குரலெழுப்பி: இதோ சேனைகளின் நாயகர் செப்புவது: நமது நகர்கள் மீண்டும் நன்மை மிகுவன; இன்னஞ் சீயோனை ஆண்டவர் தேற்றுவர்; எருசலேமை மறுபடியு(தம் வாசஸ்தானமாய்த் தெரிந்து கொள்வர் எனக் கூறுவையாக வென்றான்.

18. பின்னும் யான் கண்ணை ஏறெடுத்து நோக்க: எதிரில் நாலு கொம்புகளைக் கண்டேன். 

19.  என்னிடமாய்ச் சம்பாஷித்திலங்கிய வானவனை நோக்கி: இவை என்னே எனக் கேட்க, அவன்: இவை யூதாவையும், இஸ்றாயேலையும், எருசலேமையுஞ் சிதறடித்த கொம்புகளாகும் என்றனன். 

20. மீண்டும் ஆண்டவர் எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காட்டினர்.

21. அப்போது யான்: இவர்கள் என் செய வந்தவர்கள் எனக் கேட்டேன்; அவர் அதற்கு: ஒருவனுஞ் சிரந்தூக்கா வண்ணம் யூதா மாந்தர்களனைவரையுஞ் சிதறடித்த கொம்புகள் இவைகளேயாம்; இவர்களோ யூதாவைக் கலங்கவடிக்கும் பொருட்டு அதின்மீது கொடுங்கோல் செலுத்திய சனங்களுடைய (வல்லப மாகிய) கொம்புகளை முறித்து அவர்களைக் கிடுகிடாய்க்கச் செய்ய வந்தவர்களாவர் என்றார்.