ஓசே ஆகமம் - அதிகாரம் - 01

இஸ்றாயேலின் அவிசுவாசமும், தண்டனையும் இரகசியமான உவமையாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. யூதா அரசராகிய ஓசியாஸ், யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் காலத்திலும், இஸ்றாயேல் அரசனாகிய யோவாஸ் குமாரன் ஜெரோபோவாம் காலத்திலும் பெயெரி புத்திரனாகிய ஓசே என்போனுக்குக் கூறப்பட்ட ஆண்டவ ருடைய திரு வாக்கியம்.

2. ஆண்டவர் ஓசேயிடஞ் சம்பாஷிக்கத் தொடங்குகையில், ஓசேயைப் பார்த்து அவர்: நீ போய் ஒரு விலை மாதைப் பாரியாளாகக் கொண்டு, வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பாயாக; ஏனெனில், இஸ்றாயேல் நாடு வேசித்தனத்திலே மூழ்கி ஆண்டவரை விலகிவிடும் என்றார்.

* 2-ம் வசனம். ஆண்டவர் வேசையை மனைவியாகக் கொள்ளக் கற்பித்தது, இஸ்றாயேல் வீட்டவர் வேசிகளிலுங் கேடுகெட்ட வேசிகளைப் போல், சொந்த ஆத்தும மணாளனாகிய கடவுளரைக் கைவிட்டு, விக்கிரக ஆராதனையைக் கூடி, வியபசாரிகளாகத் திரியும் அவகேட்டை நன்குணர்ந்து வெட்கிப்போகும்படிக்கே வேசிப் பிள்ளைகளைப் பெறுவாயாக என்றது; வேசித்தனத்தில் திரிந்தவள் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டாலும் அவள் பிள்ளைகள் வேசிப் பிள்ளைகளென அழைக்கப்படுவது சகஜம் ஆதலால்.

3. அவனும் போய் தேபெலாயிம் குமாரத்தியான கோமேரம்மாளை ஏற்றுக் கொள்ள, அவள் கற்பமாகி, அவ னுக்கோர் மகவைப் பெற்றார்.

4. அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து: அவனை ஜெஸ்றாயேல் எனப் பெயரிட்டழைப்பாய்; ஏனெனில், இன் னுஞ் சொற்ப காலமாம்; ஜெஸ்ராயே லின் குருதியின் பொருட்டு ஜேயு குடும் பத்தின்மீது பழிவாங்கி இஸ்றாயேல் வீட்டு இராஜரீகத்தை வெறுமையாக்கி விடுவோம்.

5. அந்நாளில் ஜெஸ்ராயேல் கணவா யில் இஸ்றாயேலின் கோதண்டத்தைப் பொடிப்பொடியாய் ஆக்கிவிடுவோம் என்றார்.

* 5-ம் வசனம். கோதண்டம் என்பது வில்லு, வல்லபம், பலம் எனப் பொருட்படும்.

6. பின்னும் கோமேர் கற்பமாகி ஒரு பெண் குழந்தையைப் பெற்றனள்; அப்போது ஆண்டவர் அவனைப் பார்த்து: நீ இவளுக்கு நிர்க்கிர்பை என நாமகரணஞ் சூட்டுவையாக; எனெனில், இஸ்றாயேல் வீட்டு விஷயார்த்தமாக இனி இரக்கங் கொள்ளவறியோம்; அவர்களை முற்றுமே மறந்து விடுவோம்.

7. ஆனால் யூதா வீட்டின்மீது கிருபை பாலித்து, அவர்கள் தேவனாகிய ஆண்டவர் நாமத்தைக் கொண்டே அவர் களை இரட்சிப்போம். அவர்களை நாம் இரட்சிப்பது, வில், வாள், சமர், அசுவங்கள், குதிரைப்படை (முதலியவை களைக் கொண்டல்ல, நமது சுய பலத் தினாலேயே என்றார்.

8. கோமேர் நிர்க்கிர்பை என்பா ளைப் பால்குடி மறக்கச் செய்த பின்பு, அவள் கற்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றாள்.

9. அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து: எம் பிரசையன்று என அவனுக் குப் பெயரிடுவையாக; நீங்கள் எம் பிரசையல்ல, நாமும் உங்கள் தேவன் அல்ல.

10. இஸ்றாயேலின் மெய்யான பிள்ளைகளுடைய தொகையானது எண்ணவும், அளக்கவுஞ் சாத்தியமாகாக் கடல் மணல்களுக்கு ஒப்பாயிருக்கும்; நீங்கள் நம் பிரசையன்று சொல்லியதற்கு மாறாக, நீங்கள் சீவியமுள்ள கடவுளரின் புத்திரர் எனக் கூறப்படும்.

11. யூதா மக்களும், இஸ்றாயேல் புத்திரரும் ஒருங்கே ஒன்றுகூடி, தங்க ளுக்கு ஓர் தலைவனை ஏற்படுத்த, அவர்கள் பூமியை விட்டு உயரக் கிளம்பு வார்கள். அஃது ஜெஸ்ராயேலின் பெருமை நாளேயாம் என்றார்.

* 11-ம் வசனம். பூமியை விட்டு உயரக் கிளம்புவர்; பாபிலோன் அடிமைத்தனத்தினின்று புறப்பட்டு சந்தோஷத்தில் உயர்வர்; அல்லது பசாசின் அடிமைத்தனத்தை விட்டு, கிறீஸ்துவின் இரட்சணியங் கொண்டு வான உலோகத்துக்குப் பாத்திரராய் ஆவர் என விருத்தி உரை கொள்ளும்; அஃது இஸ்றாயேலின் பெருமை நாளேயாம்; இஸ்றாயேல் என்னும் பதமானது கடவுளின் வித்து சந்ததி எனப் பொருட்படும்; நிற்க கடவுளுடைய இயல்பு குமாரன் கிறீஸ்துவானவர்; இவருடைய பிள்ளைகள் கிறீஸ்துவர்கள்; ஆதலின் கிறீஸ்துவானவர் இவர்களுடைய இரட்சணியார்த்தமாகப் பூவுலகில் இறக்குங்காலம் மகா மகத்துவமுடையதே என அருத்தமாகிறது.