ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 01

ஜோசுவா தன் உத்தியோகத்திற்கு உட்பட்ட வரலாறு.

1. அதெல்லாம் நிற்க, கர்த்தருடைய மோயீசன் மரித்த பின்னர் சம்பவித்தது என்னவென்றால்: மோயீசன் ஊழியனும், நூனின் குமாரனுமான ஜோசுவாவோடு கர்த்தர் பேசித் திருவுளம் பற்றினதாவது:

2. நம்முடைய தாசனாகிய மோயீசன் மரித்தான். இப்போது நீயும் உன் எல்லாச் சனமுமாய் எழும்பி, யோர்தான் (நதியைக்) கடந்து இஸ்றாயேல் புத்திரருக்கு நாமே கொடுக்கும் தேசத்திற்குப் போகக் கடவீர்கள்.

3. உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் நாம் மோயீசனுக்குச் சொன்னபடி உங்களுக்குக் கொடுப்போம். 

4. வனாந்தரமும் லிபான் (மலையும்) துவக்கி இயூப்பிறாட் மகாநதிமட்டும், சூரியன் அஸ்தமிக்கிற திசைக்கெதிரான பெரிய சமுத்திரம் வரையிலுமடங்கிய ஏத்தையருடைய தேசமெல்லாம் உங்களுக்கு எல்லையாயிருக்கும்.

5. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உங்களுக்கு முன்பாக நிற்பதில்லை. நாம் மோயீசனோடு இருந்தது போல உன்னோடும் இருப்போம். நாம் உன்னை நீங்குவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

6. நீ தைரியமாயுந் திடனாயும் இருக்கக் கடவாய். ஏனெனில் இந்தச் சனத்தின் பிதாக்களுக்கு நாம் கொடுப்போமென்று ஆணையிட்ட தேசத்தை நீயே திருவுளச் சீட்டுப் போட்டு அவர்களுக்குப் பங்கிடுவாய்.

7. நம்முடைய தாசனாகிய மோயீசன் உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணங்களை நீ அநுசரித்து அதன்படி எல்லாஞ் செய்து வரத் தக்கதாக நீ பலங்கொண்டு தைரியமாயிரு. நீ எது செய்தாலும் அறிந்து செய்யும் பொருட்டு அதை விட்டு வலதுபுறம், இடதுபுறம் சாயாதிருப்பாயாக.

8. இந்த நியாயப் பிரமாணப் புஸ்தகம் உன் கையை விட்டுப் பிரியாதிருப்பதாக! அதில் எழுதியிருக்கிறதை அநுசரித்து, அதின்படியயல்லாம் நடந்தொழுகும் பொருட்டு, அதை இராப்பகல் தியானித்துக் கொண்டிருப்பாயாக! அப்படிச் செய்தால் அல்லோ நீ உன் வழியைச் செவ்வையாக்கிப் புத்திமானாக நடந்து கொள்ளுவாய்.

9. பலங்கொண்டு திடமனதாயிருவென்று இதோ நாம் உனக்குக் கற்பிக்கிறோம். திகைக்கவும் மதிகலங்கவும் வேண்டாம். ஏனென்றால் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருப்பார் என்றருளினார்.

10. அப்பொழுது ஜோசுவா சனங்களின் அதிபதிகளை நோக்கிக் கற்பித்ததாவது: நீங்கள் பாளையத்தில் நடுப்புறம் நடந்து போய்ச் சனங்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதேதெனில்,

11. நீங்கள் (வழியில்) இரஸ்து ஆயத்தம் பண்ணுங்கள். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கப் போகிற தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு மூன்று நாளுக்குப் பிற்பாடு யோர்தான் (நதியைக்) கடந்து போசீர்களேயாம் என்றான்.

12. பின்பு ஜோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரையும் நோக்கி:

13. கர்த்தருடைய தாசனான மோயீசன் உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள். அதென்னவெனில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப் பண்ணி உங்களுக்கு இந்தத் தேசம் முழுவதையும் தந்தருளினாரே.

14. உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் மிருக சீவன்களும் மோயீசன் உங்களுக்கு யோர்தான் இப்புறத்திலே கொடுக்கிற தேசத்தில் இருக்கட்டும். ஆனால் நீங்கள் யாவரும் பராக்கிரமசாலிகளாயும், ஆயுதபாணிகளாயும் உங்கள் சகோதரருக்கு முன்பாக நடந்து,

15. கர்த்தர் உங்களைப் போல் உங்கள் சகோதரர்களையும் இளைப்பாறப் பண்ணி, உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொள்ளுமட்டும் அவர்களுக்கு உதவியாக யுத்தம் பண்ணக் கடவீர்கள். பிற்பாடல்லோ கர்த்தருடைய தாசனான மோயீசன் உங்களுக்கு யோர்தானுக்கு இப்பாலே சூரியன் உதிக்கும் திசைக்கு நேரே கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்திற்கு நீங்கள் திரும்பி அதில் வாசம் பண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றான்.

16. அப்பொழுது அவர்கள் ஜோசுவாவுக்குப் பிரத்தியுத்தாரம் பண்ணி: நீர் எங்களுக்குக் கற்பித்ததை எல்லாஞ் செய்வோம். நீரெங்களை எவ்விடம் போகச்சொல்லுவீரோ நாங்கள் அவ்விடமெங்கும் போவோம்.

17. நாங்கள் மோயீசனுக்குக் கீழ்ப்படிந்ததெப்படியோ அப்படியே உமக்கும் கீழ்ப்படிந்து வருவோம். ஆனால் உம்முடைய தேவனாகிய கர்த்தர் மோயீசனோடு இருந்ததுபோல உம்முடனும் இருக்கக் கடவாராக.

18. நீர் கற்பிக்குஞ் சகல காரியத்திற்கும் கீழ்ப்படியாமல் உமது சொல்லுக்கு அடங்காமல் எவன் மீறி நடப்பானோ அவன் கொலைசெய்யப் படக் கடவான். நீர்மட்டும் பலங் கொண்டு ஊக்கமுடையவராயிரும் என்றார்கள்.